
-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன்
ஆயிரம் மைல் பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறது – லாவோ
எவ்வாறு எந்த ஒரு பெரிய பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறதோ, அவ்வாறே பணக்காரர் ஆவது என்ற இலக்கை நோக்கிய நெடுந்தூரப் பயணமும், முதல் அடியிலேயே துவங்குகின்றது. அந்தப் பயணத்தில் அடி அடியாக எடுத்து வைத்து நாம் பயணிக்க வேண்டும். அத்தகைய அடி அடியான பயணம் நம்மை பணக்காரர் என்ற இலக்கை அடைய வைக்கும்.
தனி மனிதனும், நிறுவனமும் ஒரு ஒப்பீடு;
இந்த ஓப்பீடு நன்றாக உள்ளது. ஆனால், நடைமுறையில் பல்வேறு குடும்பங்களில், நிதி மேலாண்மை குறித்த விழிப்புணர்வு இல்லை. நன்கு வளர்ந்த நாடு என்று கூறப்படும் அமெரிக்க நாட்டில் 76% மக்கள் தங்களுடைய செலவுக்கு, அடுத்த மாத சம்பளத்தை எதிர் நோக்கி உள்ளனர். அவர்களிடம் சேமிப்பு இல்லை. இதை சம்பளத்திருந்து சம்பளத்திற்கான வாழ்க்கைமுறை (Paycheck-to-Paycheck Lifestyle) என்று கூறுகின்றனர். வளர்ந்து வரும் நாட்டு மக்களான நம்மிடமும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.
சரி. நாம் எங்கு தொடங்குவது, எப்படி பணக்காரர் ஆவது என்பதற்கு பிரபல அமெரிக்க தனிமனித பொருளாதார நிபுணர் டேவ் ராம்சே (Dave Ramsey) அவர்களின் யுத்திகளைப் பற்றி அறிந்துக் கொள்வோம்.
அவசர காலத் தேவைக்காக பணம் ஒதுக்குங்கள்:
அவசர காலத் தேவை என்பது, வீட்டின் நபர்கள் திடீர் உடல்நலக் குறைவு, திடீர் வாகன குளறுபடி, திடீர் வீடு செப்பனிடல், வீட்டில் சம்பாதிக்கும் நபர் திடீர் வேலை இழப்பு போன்ற சமயங்களில், கடன் வாங்குவதைத் தவிர்க்க உதவும். கடன் நம்முடைய பணக்காரர் ஆகும் இலக்கை தடுக்கும் பெரிய குழி. அதில் மாட்டிக் கொண்டால், மீள்வது கடினம். இந்த அவசரகாலத் தேவை நிதியை தானியங்கி பணப்பொறியில் (ATM) எளிதில் எடுக்கும் வகையில், வங்கி சேமிப்பு கணக்கில் வைத்திருக்க வேண்டும்.
எல்லா கடன்களையும் அடைத்து விடுங்கள், வீட்டுக்கடன் தவிர:
கடன் என்பது அன்பை மட்டுமல்ல, நிம்மதி, மதிப்பு, கௌரவம் என பல்வேறு விஷயங்களை முறிக்கவல்லது. எனவே, எல்லா கடன்களையும் வரிசைப்படுத்தி, சிறிய பாக்கி கடன் முதல், பெரிய பாக்கி கடன் வரை, வரிசையாக அடைத்து விட வேண்டும். சேமித்தப் பணத்தில், சிறிய கடன் தவிர மற்ற கடன்களுக்கும் மாதத் தவணைத் தொகை மட்டும் கட்டிவிட்டு, சிறிய கடனிற்கு மீதமுள்ள பணத்தை திருப்பி, அதனை அடைக்கப் பார்க்க வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு கடனாக வரிசையாக அடைக்க வேண்டும். இதற்கு கடன் பனிப்பந்து முறை (Debt Snowball) என்று பெயர். வீட்டுக்கடன் மட்டும் இந்தப் படியில் விதி விலக்கு. வீட்டுக்கடன் பெரிய கடன்; வீடு அத்தியாவசியமான தேவை என்பதால் வரிவிலக்கு உண்டு; வீட்டுக் கடனுக்கு வட்டிவிகிதம் குறைவு.
மூன்று முதல் ஆறு மாதத்திற்கான பணத்தை அவசர காலநிதியாக சேமித்து வையுங்கள்:
அவசர கால நிதி என்பது தற்காலிகமானதே. அது போதாது. நிரந்தர அவசர காலத் தேவை நிதி என்பது மூன்று முதல் ஆறு மாதத்திற்கான குடும்பத்தின் செலவுக்கான பணத்தை சேமித்து வைக்க வேண்டும். இது எளிதாக தேவைக்கு உபயோகப் படுத்தும் வகையில் வங்கியில் சேமிப்பு கணக்கில் இருக்க வேண்டும். குடும்பத் தலைவரின் வேலை இழப்பு, அல்லது பணிக்கு சில மாதம் செல்ல முடியாத நிலை, திடீர் மருத்துவ செலவு, திடீர் அவசர காலத் தேவைகளுக்கு, இந்தத் தொகை உதவும். கடன் வாங்குவதை தவிர்க்க உதவும்.
ஓய்வு காலத்திற்காக முதலீடு செய்யுங்கள்:
சம்பாதித்த பணத்தில் 15% ஒதுக்கி, பரவலான முறையில் முதலீடு செய்ய வேண்டும். அந்த முதலீடு அஞ்சலக அல்லது வங்கி வைப்பு சேமிப்பு கணக்காகவோ, பங்கு சந்தை குறியீடு சார்ந்த பரஸ்பர நிதி முதலீடாகவோ, அரசாங்க கடன் பத்திரங்கள் சார்ந்த கடன் பத்திர பரஸ்பர நிதி முதலீடாகவோ இருக்கலாம். இந்த சேமிப்பு நீண்ட காலத்தில் நன்கு பெருகி, ஓய்வு காலத்தில், யார் கையையும் ஏந்தாமல், தன்மான வாழ்க்கை வாழ உதவும். சீக்கிரமாக தொடங்குவதன் மூலம், நீண்ட காலத்தில் நல்லதொரு பணப் பெருக்கத்தை பெற முடியும்.
குழந்தைகளின் எதிர்கால மேல் படிப்பிற்காக பணம் முதலீடு செய்யுங்கள்:
குழந்தைகளின் படிப்புதான் அவர்களுக்கு நாம் செய்யும் மிகப் பெரிய முதலீடு. அவர்களின் மேல்படிப்பு அவர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்கு அஸ்திவாரம். பணவீக்கத்தின் காரணமாக, மேற்படிப்பிற்கான செலவு வருடா வருடம் கூடி வருகிறது. எனவே, குழந்தைகளின் எதிர்கால மேல்படிப்பு தேவைக்காக முதலீடு செய்ய வேண்டும். அது, பொது சேமநல நிதி(public provident fund), சுகன்யா சம்ருத்தி திட்டம் அல்லது அஞ்சலக அல்லது வங்கி வைப்பு சேமிப்பு கணக்காகவோ கூட இருக்கலாம். குழந்தைகள் 18 வயது மேல்படிப்பிற்காக இப்போதே சேமிக்கத் தொடங்க வேண்டும். குழந்தைகளின் விருப்பமான மேல்படிப்பு, பணப்பற்றாக்குறையினால் தடை ஏற்படாமல் இருக்க இந்த முதலீடு உதவும்.
வீட்டுக்கடனை சீக்கிரம் அடைத்து விடுங்கள்:
எஞ்சியுள்ள பணத்தைக் கொண்டு, வீட்டுக் கடனை சீக்கிரம் அடைத்து விட வேண்டும். வீட்டுக் கடனை அடைக்கும் வரை, வங்கிக்கே வீட்டின் மீது ஏகபோக உரிமை அதிகம். வீட்டுக் கடன் கட்டாவிட்டால், வங்கியால் வீட்டினை ஜப்தி செய்து, பணத்தை ஈட்ட முடியும். வீட்டுக் கடனை அடைப்பதன் மூலம், எதிர்காலத்தில் நாம் வாழ்வதற்கு இருப்பிடத்தை நம்மால் உறுதி செய்து கொள்ள முடியும். மேலும், எந்த ஒரு கடனும் இல்லாதபடியால், நமக்கு பணவரவு கூடும். இந்த அதிகப் பண வரவை, முதலீடு செய்து பணத்தைப் பெருக்க முடியும்.
பணக்காரர் ஆகிவிடுங்கள், மேலும் தான தருமங்கள் செய்யுங்கள்: பல்வேறு படிகளை கடந்து, இந்தப் படிக்கு வரும்போது, எந்தக் கடனும் இல்லாமல், நிறைய பணத்தை முதலீடு செய்ய முடியும். நிறைய பணத்தை பெருக்க முடியும். இந்தப் படியில், பணக்காரர் ஆகி விடுவீர்கள். உங்களது நிதி சுதந்திர குறிக்கோளை அடைந்தபின்னர், உங்கள் பணத்தைக் கொண்டு சமூகத்திற்கு நிறைய தான தருமங்கள் செய்யுங்கள். சமூகத்தை மேம்படுத்த உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள். உங்களின் பின்னால், ஒரு பாரம்பரியத்தை, அறக்கட்டளையை விட்டுச் செல்லுங்கள்.
மேற்கூறிய யுத்திகளைப் பின்பற்றி, நான் வீட்டுக் கடன் உட்பட, எனது எல்லாக் கடன்களையும் அடைத்து விட்டேன். மேலும், பரவலான பங்குசந்தை குறியீடு சார்ந்த பரஸ்பர நிதிகள் மற்றும் அரசாங்க கடன் பத்திரங்களில், ஓய்வு காலத்திற்காக முதலீடு செய்து வருகிறேன்.
நீங்கள் பணக்காரர் ஆக வாழ்த்துக்கள்!