பறக்கும்  பாவைகள்!

பறக்கும்  பாவைகள்!
Published on
 பகுதி -1
எங்களாலும் பறக்க முடியும்!

 –ஜி.எஸ்.எஸ்

மெரிக்காவில் உள்ள சான் பிரான்ஸிஸ்கோ மாநிலத்தில் உள்ளது சிலிக்கான் பள்ளத்தாக்கு.  இங்கு மிக அதிக எண்ணிக்கையில் பிரபல மென்பொருள் நிறுவனங்கள் இயங்குகின்றன. அதேபோல் இந்தியாவில் கர்நாடகத் தலைநகரில் அதிக அளவில் மின் பொருள் நிறுவனங்கள் இருப்பதால் பெங்களூருவை இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்பது வழக்கம்.  சிலிக்கான் பள்ளத்தாக்கு உள்ள பகுதியும் பெங்களூருவும் உலகத்தின் நேரெதிர்ப் பகுதிகளில் இருக்கின்றன எனலாம்.

ஏர் – இந்தியா விமான நிறுவனம் இந்த இரண்டு பகுதிகளையும் இணைக்கும் வகையில் சமீபத்தில் ஒரு விமானப் பயணத்தை ஏற்பாடு செய்தது.  பதினாறாயிரத்துக்கும் அதிகமான கிலோமீட்டர் தூரம்.  17 மணிநேரம் பயணம்.  நடுவில் எங்கும் விமானம் நிறுத்தப்படவில்லை.  ஏர் இந்தியா விமான சர்வீசுக்கு இப்படி ஒரு நீண்ட பயணம் என்பது இதுவே முதல் முறை.

ஆனால் இதைவிட சிலிர்ப்பூட்டும் ஒரு சாதனை இதில் நடைபெற்றது.  இதன் விமான ஓட்டிகள் குழுவில் மொத்தம் நாலு பேர்.  நான்கு பேரும் பெண்கள்.  இந்தியர்கள். 

ந்தப் பயணத்தில் வேறு ஒரு விசேஷமும் உண்டு. வடதுருவம் வழியாகப் பயணிக்கும் முதல் இந்திய விமானப் பயணம் இது. வட துருவப் பகுதி என்பது எதிர்பார்க்க முடியாத பலவித மாறுபாடுகள் கொண்ட வெப்பநிலையைக் கொண்டது.

கலங்காமல் இந்த சவாலை ஏற்றுக் கொண்டார்கள் அந்த நான்கு  இந்திய பெண்களும்.  தலைமை ஏற்றது கேப்டன் ஜோயா அகர்வால் மற்றும் கேப்டன் தன்மை பாபகிரி. (ஜோயா அகர்வால் 17 வருடங்களாக விமான ஓட்டியாக பணிபுரிபவர்).  அவர்களு​டன் இணைந்து செயல்பட்டது கேப்டன் ஷிவானி மன்ஹாஸ் மற்றும் கேப்டன் அகன்ஷா சோனாவேன்.

அமெரிக்காவில் உள்ள விமான ஓட்டிகளில் 5.4 சதவிகிதம் பேர் பெண்கள்.  பிரிட்டனில் இன்னும் குறைவு –  4.7 சதவிகிதம்.  இந்தியா இந்த விஷயத்தில் முன்னேறி உள்ளது.  விமான ஓட்டிகளில் 12.4 பெண்கள்.  என்றாலும் இதையும்  அதிகம் என்று சொல்லிவிட முடியாது. 

கேப்டன் தன்மை பாபகிரி
கேப்டன் தன்மை பாபகிரி

இந்த நிலையில் மேலே குறிப்பிட்ட சவாலான பயணம், பெண்கள்  விமானம்  ஓட்டுவதில் ஆண்களை விட சற்றும் குறைந்தவர்கள் அல்ல என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டுவதாக அமைந்தது.

AI 176 என்று குறிப்பிடப்பட்ட இந்த விமான சர்வீஸ் இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி மாலை எட்டரைக்கு கிளம்பியது.  பெங்களூருவின் கெம்பேகவுடா விமான நிலையத்தை ஜனவரி 11ஆம் தேதி அன்று மிக அதிகாலையில் அடைந்தது.  இதில் ஏதோ நான்கு விமான பைலட்கள் மட்டுமே இருந்ததாக நினைத்துவிட வேண்டாம். 250 பயணிகளும் இதில் இடம்பெற்றிருந்தனர்.

வட துருவத்தைக் கடக்கும் விமான சர்வீஸ் என்பது கணிசமான எரிப்பொருளையும் நேரத்தையும் சேமிக்கக் கூடியது. இல்லையென்றால் இது மிகவும் நெடுந்தூர பயணமாக இருந்திருக்கும். இந்த ஒரு பயணத்திலேயே 10,000 கிலோ எரிபொருளை சேமித்து இருக்கிறார்கள்.

வடதுருவத்தில்  பயணிக்கும் போது உள்ள சவால்கள்.

ட துருவப் பகுதியில் உள்ள கடும் குளிர் பயணிகளுக்கு ஏற்றதல்ல,   என்னதான் விமானத்துக்குள் வெப்பம் இருக்க வழி செய்யப்பட்டிருந்தாலும்.  தவிர இது போன்ற பயணங்களில் சூரியனின் கதிரியக்கம் நேரடியாக விமானத்தைத் தாக்க அதிக வாய்ப்பு உண்டு.

துருவப்பகுதியில் குளிர்காலங்களில் வெப்பம்  மைனஸ் 60 டிகிரி சென்டிகிரேடு என்கிற அளவுக்கு இறங்குவது வெகு சகஜம். அப்போது விமான எரிபொருள் முழுவதும் உறைந்து போனால் எப்படி இருக்கும்?

கேப்டன் ஜோயா அகர்வால்
கேப்டன் ஜோயா அகர்வால்

அப்போது விமானத்தை இறக்க வேண்டி வந்தால்  அருகில் உள்ள விமான நிலையங்கள் எவை,  தகவல் தொடர்பில் சிக்கல் ஏற்பட்டால் நிலைமையை எப்படி சமாளிப்பது என்று பல பயிற்சிகள் இவர்களுக்கு அளிக்கப்பட்டன.

மேற்படி விமானத்தில் இரண்டு உடைகள் தயாராக இருந்தன.  ஒவ்வொன்றும் கனமான 32 பவுண்ட் எடை கொண்ட உடை.  உடல் முழுவதும் மூடிக் கொள்ள வேண்டிய உடை.  அவசர நிலை ஏற்பட்டால் இதை அணிந்துக் கொண்டு வெளியேறி விமானத்தையும் எரிபொருளின் நிலையையும் சோதித்துப் பார்க்க வேண்டி இருக்கும், அதுவும் ஆயிரம் அடி உயரத்தில் பனிபடர்ந்த பகுதியில்.

துருவப் பகுதியில் சுமார் நான்கு மணி நேரம் பயணிக்க வேண்டியிருந்தது.  பயணத்துக்குப் பின் தங்களது துருவ அனுபவத்தை பற்றி அந்தப் பெண்கள் இப்படி விவரித்தார்கள். "இதுவரை எங்கும் பார்த்திராத அளவுக்கு துருவப் பகுதியில் இருந்த வானம் மிக மிக இருட்டாக இருந்தது.  அதே சமயம் அந்த அளவு நட்சத்திரங்களை இதுவரை நாங்கள் எங்கும் பார்த்ததில்லை".

பயணிகளும் சாகச விரும்பிகளாக இருந்திருக்க வேண்டும்.  அவர்களுக்கு முன்னதாகவே இந்தப் பயணத்தில் உள்ள ரிஸ்க்குகள் தெரிவிக்கப்பட்டு இருந்தன. ஆக, பெண்களின் சக்தி மீண்டும் ஒரு முறை அழுத்தமாக நிரூபிக்கப்பட்டது.

ஆனால் பெண்கள் பறப்பதற்கு, எண்ணியும் பார்க்க முடியாத பல தடைகளைத் தாண்ட வேண்டியிருந்தது…

(தொடர்ந்து பறப்பார்கள்)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com