கரும்போ கரும்பு!

கரும்போ கரும்பு!
Published on

பொங்கலுக்குப் படைக்கப்படும் கரும்பு இன்சுவையானது என்று மட்டுமே நமக்குத் தெரியும். ஆனால், இக்கரும்பு பொருளாதார அளவிலும், தொழிலியல் துறையிலும் வெகுவாகப் பயன்படுகிறதென தெரியுமா? 250 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழகத்தில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளதாகக் குறிப்புகள் உரைக்கின்றன.

  • தாவரவியலில், 'சக்கரம் அஃபிஸினாரியம்' என கரும்பு அழைக்கப்படுகிறது. தமிழில் கன்னல், கழை, வேழம், இக்கு, அங்காரிகை என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றது.
  • கரும்பின் தோகை மாடுகளுக்கு உணவாகப் பயன்படுகிறது.
  • காய்ந்த கரும்பின் தோகை வீடுகளுக்குக் கூரை வேயப் பயன்படுகிறது.
  • மக்கிய தோகை உரமாகப் பயன்படுகின்றது. கரும்பிலிருந்து சீனி, வெல்லம், கந்தசாரி சர்க்கரை எடுக்கப்படுகிறது.
  • கரும்பிலிருந்து சர்க்கரை எடுத்த பின் மிஞ்சும் சக்கை, 'மொலாசஸ்.' இதிலிருந்து எரி சாராயம், ஆல்கஹால் தயாரிக்கப்படுகிறது.
  • ஆல்கஹால் எடுத்த பின் கிடைக்கும் சக்கைக் கழிவு, மீன் வளர்ப்பில் மீன்களுக்கு உணவாகப் பயன்படுகிறது.
  • மொலாசஸிலிருந்து மிட்டாய், இனிப்புகள் தயாரிக்கப்படுகின்றன.
  • மொலாசஸிலிருந்து உரம் மற்றும் மெழுகு தயாரிக்கப்படுகிறது.
  • சாறு பிழியப்பட்ட சக்கை எரிபொருளாகப் பயன்படுகிறது.
  • இந்தச் சக்கையிலிருந்து செல்லுலோஸ், பெக்ஷன், லிக்னின் எடுக்கப்படுகின்றன.
  • கரும்பின் சதைப் பகுதியிலிருந்து, 'பர்பியுரால்' என்ற ஒருவகையான வேதிப் பொருள் எடுக்கப்படுகிறது. இது, பிசின் தயாரிக்கவும், பெட்ரோலியம் சுத்திகரிப்பு செய்யும் தொழிலிலும் பயன்படுகிறது.
  • கரும்புச் சக்கை சாம்பல், மாட்டுத் தீவனங்கள் மற்றும் உரங்களில் சேர்க்கப்படுகிறது. காய்ந்த கரும்பு வேர் எரிபொருளாகவும் உரமாகவும் பயன்படுகிறது.

தேன் நாணல் :

  • லெக்ஸாண்டர் இந்தியாவின் மீது படையெடுத்தபோது, அவனது வீரர்கள் வழி நெடுக கரும்பைப் பார்த்தார்கள். விளையாட்டாக அதில் ஒன்றை ஒடித்து வாயில் வைத்துக் கடித்தனர். இனிப்புக்காக அதற்கு முன்பு அவர்கள் தேனையே பயன்படுத்தி இருந்ததால், கரும்பின் சுவை அவர்களைக் கவர்ந்தது. 'தேன் நாணல் இது' என தங்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள். பின் அவர்கள் தங்கள் நாட்டிற்குத் திரும்பும்போது சில கரும்புத் துண்டுகளையும் எடுத்துச் சென்றனர்.
  • 'தேனீக்கள் உதவியின்றி, தேனைக் கொடுக்கும் செடி இந்தியாவில் விளைகிறது' என தங்கள் நாட்டினரிடம் சொல்லி, கரும்பை அறிமுகப்படுத்தினார்கள். கரும்பின் அருமையை பதினைந்தாம் நூற்றாண்டில்தான் ஆங்கிலேயர்கள் அறிந்தனர். கரும்புச் சாறு பருகினால் உடல் மற்றும் மனம் மிகுந்த உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்கும்.

ஆரோக்கியப் பயன்கள் :

  • சிறுநீரகத் தொற்று குணமாக, ஒரு நாளைக்கு இரு முறை எலுமிச்சை மற்றும் தேங்காய்த் தண்ணீர் கலந்த கரும்பு சாறு பருகி வருவதால் கிருமிகள் அழிந்து, சிறுநீரகங்களின் நலம் காக்கப்படும்.
  • செரிமானமின்மை, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளுக்கு கரும்புச்சாறு தினமும் அருந்த வேண்டும். கரும்புச் சாற்றில் உள்ள பொட்டாசியம் உங்கள் வயிற்றின் அமிலச் சுரப்பு அளவுகளை சமன் செய்ய உதவுகிறது. மற்றும் செரிமானச் சாறுகள் சுரக்கவும் உதவுகிறது. தொண்டையில் இருக்கும் கிருமிகளை அழித்து, தொண்டை புண் குணமாகவும் உதவுகிறது.
  • தினமும் காலையில் கரும்புச் சாறு அருந்தும் நபர்களுக்கு உடலில் கொழுப்பு கரைந்து, வெகு சீக்கிரத்தில் உடல் எடை குறையச் செய்கிறது.
  • கரும்புச் சாறு அருந்துபவர்களுக்கு இதயத்தின் நலம் மேம்படும். அவ்வப்போது கரும்புச் சாறு பருகும் நபர்களுக்கு அழுத்தங்கள் நீங்கி, இதய பாதிப்பு, மாரடைப்பு போன்றவை ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.
  • வெயில் காலங்களில் உடல் அதிகம் உஷ்ணமடைந்து, பலருக்கும் உடல் எரிச்சல் பிரச்னை வரும். உடல் எரிச்சல் நீங்கி, உடல் குளிர்ச்சி பெற தினமும் கரும்புச் சாறுடன் தயிர் சேர்த்துச் சாப்பிட வேண்டும்.
  • குழந்தைகள் ஓடியாடி விளையாடும்போது, மண்ணால் புண் ஏற்படும். கரும்பை நன்றாக நசுக்கி, புண் இருக்கும் இடத்தில் கட்டினால் புண் விரைவில் ஆறிவிடும்.
  • மூளை சுறுசுறுப்பாக இயங்க கரும்பு பெரிதும் உதவுகிறது.
    – ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி
Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com