முத்துச் செய்தி மூன்று!

முத்துச் செய்தி மூன்று!
Published on
மகளிர் சிறப்பு 
தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன்

தமிழ் எழுத்தாளருக்கு சாஹித்ய அகாடமி விருது!

தமிழ் எழுத்தாளர் அம்பைக்கு 2021ம் ஆண்டுக்கான சாஹித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 78 வயதான இவரது இயற்பெயர் சி.எஸ்.லக்ஷ்மி. பெண் கல்வி குறித்த ஆராய்ச்சியாளரான இவர், தமிழில் சிறந்த படைப்பாளர்களில் ஒருவர். அம்பை, சக்கர நாற்காலி, பயணப்படாத பாதைகள் போன்ற பல படைப்புகளை எழுதியுள்ளார்.

எழுத்தாளர் அம்பை
எழுத்தாளர் அம்பை

'காட்டில் ஒரு மான்' என்ற இவரது
படைப்பு பெரும் பாராட்டைப் பெற்றது.
எழுத்தாளர் அம்பைக்கு 2021ம்
ஆண்டுக்கான சாஹித்ய அகாடமி விருது,
'சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை'
என்ற சிறுகதைக்காக அறிவிக்கப்
பட்டுள்ளது.
பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள இவர்,
கனடா நாட்டின் இலக்கிய அமைப்பின்
வாழ்நாள் சாதனையாளர்
விருதும் பெற்றவர்.

75 வயதில் களரி கற்றுத்தரும் வீரப் பெண்மணி!

கேரளாவில் புகழ் பெற்ற தற்காப்புக்கலை களரிப் பயட்டு. பழைமையான கலைகளில் ஒன்றான களரியை 55 வருடங்களுக்கும் மேலாகக் கற்றுத் தரும் ஆசிரியையாக இருப்பவர் பத்மஸ்ரீ மீனாக்ஷி குருக்கள்.
ஏழு வயதில் தந்தையின் விருப்பத்திற்கிணங்க களரி கற்றுக்கொள்ள ஆரம்பித்த மீனாக்ஷி, விரைவிலேயே அதில் தேர்ச்சி பெற்று தனது பதினேழாவது வயதில் மற்றவர்க்கும் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார்.
இவர், களரியில் பயிற்சியாளராக இருந்த ராகவன் மாஸ்டர் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு 1949ல் கேரளாவில் கோழிக்கோடு (Calicut) அருகே, வடகரா என்ற இடத்தில், 'காடதனாடன் களரி சங்கம்' (Kadathanadan Kalari Sangam) என்ற களரி பயிற்சிப் பள்ளியைத் தொடங்கினார்.

கேரளாவில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் இவரிடம் களரி கற்று, தாங்களும் அந்தக் கலையை மற்றவர்க்குக் கற்றுத் தருகிறார்கள்.
பயிற்சி அளிப்பதோடு மட்டுமின்றி; வருடத்துக்கு அறுபது மேடை நிகழ்ச்சிகளும் நடத்துகிறார்.

இந்தப் பள்ளியில் கற்பவர்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் ஆவர். ''பெண்கள் தங்களை பாலியல் வன்கொடுமையிலிருந்து காத்துக்கொள்ள, இந்த தற்காப்புக் கலையை அறிவது அவசியம்" என்கிறார் இவர். 2017ம் ஆண்டில் இவருக்கு, 'பத்மஸ்ரீ' விருது வழங்கப்பட்டது. இவரது இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் எல்லோருமே களரியில் சிறந்தவர்கள். பயிற்சிப் பள்ளியில் இவரது ஒரு மகனும் குருக்களாக இருக்கிறார்.

மூன்று கோடி உதவித் தொகை பெறும் மாணவி!

ரோடு மாவட்டம், காசிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி சுவேகா.
இவர், 'டெக்ஸ்டெரிட்டி குளோபல்' என்ற அமைப்பின் மூலம் தலைமை மேம்பாடு மற்றும் தொழில் மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் பயிற்சி பெற்று வந்துள்ளார். தொடர்ந்து, இந்த அமைப்பின் மூலம் அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக் கழகத்தில் இளங்கலை பட்டப் படிப்பைப் படிக்க ரூபாய் மூன்று கோடி மதிப்பிலான கல்வி உதவித் தொகையைப் பெற்றிருக்கிறார்.

தாய், தந்தையுடன் மாணவி சுவேகா
தாய், தந்தையுடன் மாணவி சுவேகா

இதுகுறித்து, அவரது தந்தை சாமிநாதன் கூறுகையில், ''சுவேகா பதினான்கு வயது சிறுமியாக இருந்தபோதே, தனது திறமையால் டெக்ஸ்டெரிட்டி குளோபல் மூலம் அடையாளம் காணப்பட்டு, பயிற்சி பெற்று வருகிறார்" என்று குறிப்பிட்டார்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com