தன்னம்பிக்கையே வாழ்வின் வெற்றி!

தன்னம்பிக்கையே வாழ்வின் வெற்றி!
Published on
நேர்காணல்: ஜெனிபர்

கொரோனா தாக்கத்தால், சாவின் விளிம்பைத் தொட்டுப் பார்த்து மீண்டு(ம்) வந்தவர், இன்று திருமதி உலக அழகிப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளார். மனநல நிபுணர், தொழில் முனைவோர், எழுத்தாளர், மொழி பயிற்றுனர் என பல்துறை வித்தகராகத் திகழும் சென்னையைச் சேர்ந்த டாக்டர் பிளாரன்ஸ் ஹெலன் நளினி மும்பையில், 'தி இண்டர் நேஷனல் கிளாமர் பிராஜக்ட்' நடத்திய அழகிப் போட்டியில் பங்கேற்று, 'மிஸஸ் இந்தியா 2021 – 2022' பட்டத்தை வென்று அசத்தியிருக்கிறார்.

அதோடு, இந்த ஆண்டு அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெறவுள்ள சர்வதேசப் போட்டியில், இந்தியாவின் சார்பாகப் பங்கேற்கவும் தேர்வாகி உள்ளார். இறுதிப் போட்டி மும்பையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்தது. இதில் சென்னையை பிரதி நிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட ஹெலன் நளினி, இதுபோன்ற போட்டிக்கே புதியவர். மாடலிங் துறையில் அனுபவமற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போட்டியில் Glamourous acheiver என்ற துணைப் பிரிவிலும் கூடுதலாக ஒரு பட்டத்தையும் வென்றிருக்கிறார் நளினி.

அவரைச் சந்தித்தபோது…
போட்டி மற்றும் வாழ்வில் சந்தித்த சவால்கள் குறித்து…
''என்னை இந்தப் போட்டியில் பங்கு பெற அறிவுறுத்தியது எனது இளைய மகள் சரிஹா தான். நான் சாதாரண எண்ணத்துடன்தான் இப்போட்டிக்குள் நுழைந்தேன். பலவிதமான சுற்றுகளைக் கடந்து வந்துள்ளேன். இந்தப் போட்டியின் தொடக்கத்தில் மூன்றாயிரம் நபர்கள் பங்கு பெற்றனர். அதில் தமிழ்நாடு சார்பாக நான் ஒருத்தி மட்டுமே தேர்வு பெற்றேன்.

போட்டியின்போது நான் கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து எனது மன தைரியத்தாலும், எனது குடும்ப உறுப்பினர்கள் என்னை ஊக்கப்படுத்தியதாலும் மீண்டு வந்து இந்தப் போட்டியின் கடைசிச் சுற்றில் பங்கு பெற்றேன். இந்தப் போட்டியில் சமூக விழிப்புணர்ச்சிக்கான சுற்றில் நான் Dream and Believe foundation மூலம் படிக்கும் திறமை இருந்தும், பயில முடியாத குழந்தைகளுக்கு அதிக அளவில் நிதி திரட்டி அவர்களுக்கு உயர்தர கல்வி கிடைக்க வழி செய்தேன்.

எனது சொந்த ஊர் கோயம்புத்தூர். நான் பிறந்து, வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். எனக்கு சின்ன வயசிலிருந்தே படிப்பின் மீது ஆர்வம் அதிகம். எனது குடும்பத்தில் முதல் பட்டதாரி பெண் நான். பி.எஸ்சி., லைஃப் சயின்ஸ் படித்தேன். நான் இதைப் படித்து முடிப்பதற்குள் பல சங்கடங்களைச் சந்தித்தேன். பலருக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்து, அதில் வரும் வருமானத்தை வைத்து, படிப்பு மற்றும் குடும்பச் செலவுகளைச் சமாளித்தோம்.

தற்போது உளவியலில் ஆராய்ச்சிப் படிப்பு படித்துக்கொண்டு இருக்கிறேன். படிக்க வேண்டும் ஆர்வம் என்னை ஒரு Edupreneur ஆக்கியது. நான் Shreya's Global Academy யின் கீழ் லிட்டில் மில்லினியம், குளோபல் ஆர்ட், வெங்கடேஷ்வரா மாண்ட்டசொரி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்துடன் Franchisepartnership எடுத்து இருக்கிறேன்.

ஆங்கிலம், பிரஞ்சு மற்றும் தமிழ் மொழிகளை மற்றவர்க்குக் கற்றுக்கொடுக்கிறேன். உளவியல் துறையில் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கான உளவியல் பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்குவதற்கான சிறப்புப் பட்டம் வாங்கி இருக்கிறேன்.

நான், 'ஆல் லேடீஸ் லீக்' என்ற அமைப்பில் தமிழக துணைத்தலைவராகவும் இருக்கின்றேன். இவ்வமைப்பின் மூலமாக தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பெண் தொழில் முனைவோர்களை ஒன்றிணைத்து, அவர்களுக்கான வாய்ப்புக்களைத் தேடித் தருகிறோம். மேலும், நான் மகளிர் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை மன்றத்தில் கவுன்சில் உறுப்பினரும் (WICCI) ஆவேன்."

உங்களது சக்சஸ் சீக்ரெட்…

தனது கணவர், மகளுடன் நளினி.
தனது கணவர், மகளுடன் நளினி.

''சக்சஸ் சீக்ரெட், என்னுடைய கணவர் சீனிவாச ராவ்தான். அவரைப் பற்றி நிறைய சொல்லணும். அவர் MCA கோல்டு மெடலிஸ்ட். ஆந்திர மாநிலம், குண்டூரை சேர்ந்தவர். எங்களுடையது காதல் திருமணம். மொழி, மதம், மாநிலம்ன்னு எல்லாமே வேறுதான். அவங்க நல்ல வசதியான குடும்பம்; நாங்க நடுத்தர குடும்பம். மதமும் வேறு. அவர் என்னிடம் தனது காதலைச் சொன்னபோது, எங்க வீட்ல ஏத்துக்க மாட்டாங்கன்னு நான் எதுவும் பேசவில்லை. இப்படி தினமும் என் பின்னாடியே சுற்றி வந்தவர், ஒரு நாள் மிஸ்ஸிங். கொஞ்ச நேரத்துல ஹாஸ்பிட்டல்ல இருந்து தகவல் வந்தது. 'மெர்குரி குடிச்சி சீரியசா இருக்காங்கன்'னு. அப்பவும் எனக்கு அவரைக் கல்யாணம் பண்ணிக்க எண்ணம் இல்லை. 'உடம்பு சரியாகி வீட்டுக்குப் போங்க'ன்னு சொல்லிட்டு வந்துட்டேன். விஷயம் தெரிஞ்சு எங்க வீட்ல ஏகப்பட்ட எதிர்ப்பு. அவர் படிப்பு முடிச்சு, வேலையும் கிடைச்சு பெங்களூரு போயிட்டார். அவர் என்னென்னவோ செய்து பார்த்தும் எங்கள் கல்யாணம் நடப்பதாகவே தெரியவில்லை. ஆனால், கல்யாணம் செய்தால் என்னைத்தான் கல்யாணம் செய்வேன்னு அடம் பிடித்தார். இந்த அடம் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது.

சினிமா படத்தில் வருவது போல், 1998 ஜூன் 12ந் தேதி எங்களுக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் நடந்துச்சு. நான் வீட்டுக்கு வந்துட்டேன். அவரும் வேலைக்குப் போயிட்டார்.

கொஞ்ச நாள்ல எனது பெரியம்மா எங்க வீட்ல உள்ளவங்களை சமாதானம் பண்ண, அவங்களுக்கும் இவரைப் பிடிக்க ஆரம்பிச்சுது. மீண்டும் ஜூலை 6ந்தேதி கிறிஸ்துவ முறைப்படி எங்களுக்கு மறுபடியும் கல்யாணம் நடந்துச்சு. அடுத்த இரண்டே மாசத்துல அவங்க வீட்ல சமாதானம் ஆனாங்க. செப்டம்பர் மாதம் அவங்க முறைப்படி கல்யாணம் நடந்துச்சு. இப்படி, மூன்று முறை எங்க கல்யாணம் நடந்தது. ஒரு முறை கல்யாணத்துக்கே ஏங்கிக்கிட்டிருந்த எங்களுக்கு மூன்று முறை கல்யாணம். அவ்வளவு ஸ்ட்ராங் வெட்டிங் எங்களோடது.

எங்களுக்குக் கல்யாணமாகி 22 வருஷங்களாகுது. எனது இரண்டாவது பொண்ணு பிறந்தப்போ, எட்டாவது மாசத்துல நான் கீழே விழுந்து பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டி இருந்துச்சு. அப்போ இவருதான் என்னை ஒரு தாயாய் இருந்து பாத்துக்கிட்டாரு. எங்க வீட்ல இருந்த ஆறு பேருக்கும் கொரோனா. அப்போ, அவங்களைப் பாத்துக்கிட்ட எனக்கு ஒன்பதாவது நாள்தான் கொரோனா பாசிட்டிவ்னு வந்துச்சு. ஆனால், நான்தான் ரொம்பவும் அதில் பாதிக்கப்பட்டேன். பிழைப்பேன்னு கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை. எட்டு மாதம் வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை. அந்த அளவுக்கு உடல் நிலை மோசமா இருந்துச்சு. ஆனால், என்னுடைய கணவருடைய பாசிட்டிவ் எனர்ஜிதான் என்னை மீண்டும் மீட்டுக்கொண்டு வந்தது. அது மட்டுமில்லாம, திருமதி உலக அழகிப் போட்டி வரைக்கும் என்னைப் போக வைச்சிருக்கு.

சுவிட்சர்லாந்து, லண்டன், மலேசியா, சீனா, ஹாங்காங்ன்னு உலகம் முழுக்க சுத்தியிருக்கோம். எனது வாழ்க்கையை முழுசா நான் வாழ, எனது காதல் கணவர்தான் காரணம். இன்று வரை எனக்குத் தெரியாது, 'எப்படிப் பாத்ததும் அவரோட காதலை என்கிட்ட சொன்னாங்க'ன்னு. ஆனால், அந்தக் காதல்தான் எங்களை இன்று வரை இயங்க வைக்கிறது" என ஆணித்தனமாகச் சொல்கிறார், இந்தத் தன்னம்பிக்கை மனுஷி.

பெண்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது…
''பெண்கள் சாதிக்கப் பிறந்தவர்கள். எப்பொழுதும் நீங்கள் முயற்சி செய்துகொண்டே இருங்கள். ஒரு நாள் நிச்சயம் வெற்றி அடைவீர்கள். உங்களை ஒரு வட்டத்திற்குள் வைத்துக்கொள்ளாதீர்கள். உங்களின் இலக்கை அடைவதற்கு நீங்கள்தான் ஓடவேண்டும். உங்களின் மீது நம்பிக்கை வைத்து முயன்றால், எதையும் வெல்லலாம்" என்கிறார், இந்த பீனிக்ஸ் பெண்மணி பிளாரன்ஸ் ஹெலன் நளினி.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com