திருக்குறளில் உலக சாதனை!

திருக்குறளில் உலக சாதனை!
Published on
– சுசீலா மாணிக்கம்

முப்பால், உலகப்பொதுமறை (உலகப்பொது வேதம்), உத்தரவேதம் (இறுதி வேதம் ), தெய்வநூல், பொய்யாமொழி, தமிழ்மறை என திருக்குறளுக்கு இன்னும் பல சிறப்புப் பெயர்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஒரு தனி மனிதன் மேற்கொள்ளவேண்டிய அத்துணை நல்லொழுக்கங்கள், வாழ்வியல் முறைகள், சமூக நீதி, அறம், பொருள், இன்பம் எனும் அனைத்து நற்குணங்களையும் போதித்து, ஆரோக்கியமான சமுதாயத்திற்கு அடித்தளமாக விளங்குகிறது இந்த ஈரடி வேத நூல்.

அன்பு, அரண், அறண், அடக்கம், இறைமாட்சி, ஈகை, இல்வாழ்க்கை, உழவு, ஊக்கம், ஊழ், கூடாநட்பு, கல்வி, கல்லாமை, கடவுள் வாழ்த்து, காதற்சிறப்புரைத்தல், கொல்லாமை, சூது, சொல்வன்மை, நடுவுநிலைமை, நட்பு, நாடு, பண்புடைமை, புகழ், புலால் மறுத்தல், புறங்கூறாமை, மக்கட்பேறு, மானம், வாய்மை, வாழ்க்கைத் துணைநலம், வான்சிறப்பு, விருந்தோம்பல்… என வாழ்வியலின் ஒவ்வொரு நொடிக்குமான பாடங்கள். அது மட்டுமா…?
'அகர முதல எழுத்தெல்லாம்…' என முதல் குறள் 'அ'வில் ஆரம்பித்து, '…முயங்கப் பெறின்' என தனது 1,130வது குறளை, 'ன்'ல் நிறைவு செய்துள்ளார்.

நெடில் இல்லா குறளாய், 'முகநக நட்பது…', துணைக்கால் இல்லா குறளாய், 'கற்க கசடற…' என வாழ்வியல் முறைகள் மட்டுமல்லாமல்; வண்ண வண்ண வார்த்தை ஜாலங்களையும் தன்னுள்ளே மறைத்து வைத்துள்ளது இந்த ஈரடி வாழ்வியல் புத்தகம்.

இந்த வாயுரை வாழ்த்து நூலை முழுதாய் நமது இளைய தலைமுறைக்குக் கொண்டு சென்று சேர்த்து விட்டோமெனில், நல்லதோர் சமுதாயத்திற்கு வித்திட்டு விட்டோம் என பெருமிதமும் நிம்மதியும் கொள்ளலாம். அத்தனை பெரும் சிறப்புகளையும் ஒருசேர கொண்டிருக்கும் இந்த, 'வான்மறை'யை வருங்கால சந்ததிக்குக் கொண்டு சேர்க்கும் உன்னதமான செயலை பலர் செய்து வருகிறார்கள்.

முனைவர் த.புனிதவள்ளி
முனைவர் த.புனிதவள்ளி

நெடுநாள் வாழக்கூடிய, தான் பெற்ற அரிய நெல்லிக்கனியை தமிழ் மூதாட்டி ஒளவைக்கு உளமுவந்து அளித்திட்ட அதியமான் நெடுமானஞ்சி அரசாண்ட அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை இன்றும் பதிவுகளாகக் கொண்டிருக்கும் தகடூர், இன்றைய தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம் ஊ.ஒ.ந.நி. பள்ளி பட்டதாரி ஆசிரியை முனைவர்
த.புனிதவள்ளி எம்.ஏ., பிஎட்., எம்.பில்., அவர்கள் முதலாவதாக 1330 குறட்பாக்களை தபால் அட்டையில் எழுதியும், திருக்குறள் முழுவதும் அதன் பொருளுடன் சேர்த்து செப்புத் தகட்டில் எழுதி முதலாவது உலக சாதனையும் புரிந்துள்ளார்.

மேலும், தனது இரண்டாவது உலக சாதனையாக கடந்த 5.1.2021 ஜெயம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 133 மாணவ, மாணவிகளை இணைத்து அவர்களுக்கு கையேடு வழங்கி 1,330 குறள் மற்றும் அதன் விளக்க உரையை தனித்தனியாக எழுதத் துணை புரிந்து, சாதனை படைத்துள்ளார். கடந்த 20.12.2021 முதல் 26.12.2021 வரை ஏழு நாட்களில் சிறப்பான இந்நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வை, 'லிங்கன் புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்ட்' அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியது. சாதனை படைத்த ஆசிரியர் புனிதவள்ளிக்கு, 'திருக்குறள் சாதனையாளர்' விருது வழங்கப்பட்டது.

உலகத் திருக்குறள் மையத்தில் கடந்த இரண்டு ஆண்டு காலமாக பல்வேறு நிகழ்வுகள், திருக்குறள் தொடர்பான கவிதை, கட்டுரை, குறுங்கதைகள் எழுதுதல் என பன்முகத்திறமைகளுடன் ஜொலிக்கிறார் புனிதவள்ளி. இம்மையத்தின் சார்பாக தர்மபுரி மாவட்ட பொறுப்பாளராகவும் இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

து தவிர, பல இதழ்களில் கவிதை, கட்டுரை, சிறுகதை எழுதுதல், பட்டிமன்றங்களில் பேச்சாளராகவும் நடுவராகவும் பங்கேற்றல், பல்வேறு அமைப்புகளின் தமிழ் சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்று சிறப்பித்தல் மற்றும் வசதியற்ற குழந்தைகளுக்குக் கல்வி உதவிகளைச் செய்தல் என தனது எல்லைகளை விரிவுபடுத்தி உள்ளார். பன்முகக் கலைஞர் விருது, தமிழ்த்தாய் விருது, அருந்தமிழ் கவிமுரசு விருது, சொற்சுடர் கவிஞர், திருக்குறள் சான்றோர், அறிசெம்மல் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் தனதாக்கி உள்ளார். மலேசியன் Rags Star Media Global அமைப்பு போன்ற பல வெளிநாட்டு அமைப்புகளிலிருந்தும் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

சிங்கப்பூர், மலேசியா, ஸ்ரீலங்கா, இந்தியா ஆகிய நான்கு நாட்டு மாணவர்களையும் ஒன்றிணைத்து, ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு தொடர்ந்து 1,330 மாணவர்கள், 1,330 குறள்கள் என 24 மணி நேர திருக்குறள் ஒப்பித்தல் தொடர் இணைய நிகழ்வாக செய்துள்ளார். உலகத் திருக்குறள் மையத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு அய்யா அவர்களுக்குத் தனது நன்றிகளை பதிவு செய்கிறார். இந்த கொரோனா காலத்தில் பழைமையான தமிழி மற்றும் வட்டெழுத்து பயிற்சியையும் நிறைவு செய்துள்ளார். தனது ஆசிரியப் பணிக்கிடையேயும் பம்பரமாய் சுழன்று வரும் இவரின் சுறுசுறுப்பு நமக்கெல்லாம் ஒரு எடுத்துக்காட்டு.

'வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்' என்பதை இவருக்கு நாம் சொல்லவும் வேண்டுமா?!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com