முத்துக்கள் மூன்று!

முத்துக்கள் மூன்று!
Published on

தொகுப்பு: பத்மினி பட்டாபிராமன்

சமூக ஆர்வலராக திருநங்கை சுதா!

லைமாமணி சுதா, பல்வேறு தடைகளை உடைத்தெறிந்து தனக்கென ஒரு அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறார்.

திருநங்கைகள் பற்றி மக்கள் தெரிந்து கொள்வதற்கும், அவர்களின் திறமைகளை வெளிக் கொண்டு வருவதற்கும், முழுவதுமாக திருநங்கைகள் பங்கு பெற்ற நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்.

2014-ம் ஆண்டில் இவர் ஒருங்கிணைத்த, 220 திருநங்கைகள் கலந்துகொண்ட 'புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' நிகழ்ச்சியில் 60 மணி நேரம் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடத்தி விருது பெற்றார்.  இதைப் பாராட்டி கவுரவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு 2015-ம் ஆண்டு இவருக்கு 'கலைமாமணி' விருது வழங்கியிருக்கிறது.

திருநெல்வேலியைச் சேர்ந்தவரான சுதா, 10-ம் வகுப்பு தாண்டுவதே மிகுந்த போராட்டமாக இருந்தது. பலவிதமான கேலிகள், கிண்டல்களுக்கு ஆளானார்.  ஒரு கட்டத்தில் வீட்டிலும் ஆதரவு கிடைக்காமல், 17 வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார்.

1991-ம் ஆண்டு 'சகோதரன்' எனும் தொண்டு அமைப்பில் இணைந்து சமூகப் பணிகளில் ஈடுபட்டார்.

2004-ம் ஆண்டு முதல் வி.எச்.எஸ் என்ற அமைப்பில் சேர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள திருநங்கைகளுக்காக போராட ஆரம்பித்ததோடு, இந்தியா முழுவதும் பயணித்து அவர்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

கலை நிகழ்ச்சிகள் மூலம் கல்வி, வேலை, தொழில் ஆகியவற்றுக்கான வாய்ப்புகளைப் பெற்று தமிழ்நாடு முழுவதும் உள்ள திருநங்கைகளுக்கான வாழ்வியல் மேம்பாட்டிற்காக பாடுபட்டு வருகிறார் சுதா.  49 வயதான இவர், பல சிரமங்களுக்கு இடையில் சமூக ஆர்வலராக திருநங்கைகளின் வாழ்க்கையில் ஒளி வீசிக்கொண்டிருக்கிறார்.

தாய்மை உணர்வுடன் மணிப்பூர் சிறுமி!

டக்கு மணிப்பூரின் டாமெங்லாங் மாவட்டத்தை சேர்ந்த 10 வயது சிறுமி மெய்னிங்சின்லியு பாமெய். இவர், அங்குள்ள ஆரம்ப பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கிறார். இவரது பெற்றோர் விவசாய கூலிகளாக உள்ளனர்

இவருக்கு ஒரு வயதில் தங்கை உள்ளார். விவசாயக் கூலி வேலைக்குச் செல்லும் பெற்றோரால் குழந்தையை உடன் எடுத்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, படிப்பின் மீது ஆர்வம் கொண்ட பாமெய், தன் தங்கையை பள்ளிக்கு சுமந்து சென்றிருக்கிறார்.

தங்கையை மடியில் வைத்தபடி வகுப்பறையில் இவர்  பாடம் படிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. தொடர்ந்து, மாநில அமைச்சர்  பிஸ்வஜித் சிங், இவரது குடும்பத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.

அந்தப் பெண்ணை இம்பால் அழைத்து வரும்படி கூறியதோடு, அவளது பட்டப் படிப்பு முடியும் வரை தன் சொந்த செலவிலேயே படிக்க வைப்பதாகவும் உறுதியளித்திருக்கிறார்.

பெண் குழந்தைகள் இயல்பிலேயே தாய்மை உணர்வு உடையவர்கள் என்பதை இந்த சம்பவம் எடுத்துக் காட்டுகிறது என்று பலரும் புகழ்கிறார்கள்.

விருது பெற்ற மாணவி சேந்தனா!

மிழக அரசு சார்பில் வழங்கப்படும், 'பெண் குழந்தை முன்னேற்றத் திற்கான பெருமைக்குரிய மாநில விருது' சென்னை மாணவி சேத்தனாவுக்கு வழங்கப்பட்டது.

இவர், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு குறும்படங்களில் நடித்து உள்ளார்.
இந்த மாணவி, மணிப்பூர் மாநில பெண்கள் குறித்து, 'மை டிரிப் டு இம்பால்' என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டிருக்கிறார்.

அதில் கிடைத்த வருவாயை, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.

அதையொட்டி, மாணவி சேத்தனாவுக்கு, தமிழக அரசு சார்பில் வழங்கப்படும், 'பெண் குழந்தை முன்னேற்றத்திற்கான பெருமைக்குரிய மாநில விருது' மற்றும் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com