நிறம் மாறும் புனித நீர் அமைந்த கீர் பவானி ஆலயம்!

நிறம் மாறும் புனித நீர் அமைந்த கீர் பவானி ஆலயம்!
Published on
பயணம்
பானு பெரியதம்பியுடன் ஜம்மு காஷ்மீர் பயணம்.

சுற்றுலா,பயணம் என்ற வார்த்தைகளில் எப்போதும் ஒரு குதூகலம் மறைந்து இருக்கும் என்பதே உண்மை. அதுபோல நாங்கள் காஷ்மீர் செல்லலாம் என முடிவெடுத்து , அதற்கான ஏற்பாடுகளை செய்ததும் என் மனத்திரையில் தேன்நிலவு போன்ற பல திரைப்படக்  காட்சிகளோடு, பிரம்மாண்டமான இமயமலை, பசுமையான பள்ளத்தாக்கு என அனைத்தும் மனதில் ஓட ஆரம்பித்தது.

ஜம்மு காஷ்மீர்   இந்தியாவின் வடகோடியில் இருக்கும் மாநிலமாகும். இது முக்கியமான சுற்றுலாத் தலமாக இருக்கின்றது.முகலாய மன்னர் ஜஹாங்கீர், காஷ்மீர் பள்ளதாகிற்கு வந்த போது உலகின் சொர்க்கம் இதுதான் என்று வர்ணித்தாராம். அத்தனை இயற்கை எழில் கொஞ்சும் அழகு இங்கே உள்ளது.

ரயில், விமானம் என பல வழிதடங்கள் மூலம் நாம் செல்லலாம். நாங்கள் டெல்லியிலிருந்து ஸ்ரீநகருக்கு விமானத்தில் சென்றதும், எங்களது வழிகாட்டி எங்களை  'தால் ஏரி' (Dal Lake) யில் இருக்கும் படகு வீட்டிற்கு அழைத்துச்  சென்றார். நிறைய படகு வீடுகள் ஏரி முழுதும் இருந்தன. 26 கி.மீ  பரப்பளவில்  விரிந்து இருக்கும் இந்த ஏரி,  காஷ்மீர் பள்ளத்தாக்கில் இரண்டாவது பெரிய ஏரி ஆகும்.  இது  'ஸ்ரீ நகரின் அணிகலன்' என்று பெருமையாக அழைக்கப்படுகிறது.

ஷிக்காரா என்று அழைக்கப்படும் மரப்படகுகள்  இந்த ஏரியை சுற்றிப்பார்க்கவும், படகு வீடுகளுக்கு நம்மை அழைத்துக் கொண்டு செல்லவும் பயன்படுகிறது. இதில் செல்லும்போது அருமையான சூரிய அஸ்தமானத்தை கண்டு ரசித்தோம்.

படகு வீட்டின்  முன்புறம் அமர்ந்து  இருந்த போது ,மிதக்கும் காய்கறி மார்க்கெட், பலவிதமான கைவினை பொருட்கள், பூங்கொத்துகள்  என பல்வேறு படகுகள் செல்வதை கண்டு ரசித்தோம்.  நம்மைப் பார்த்ததும் இன்முகத்தோடு  வந்து வியாபாரம் செய்கிறார்கள். நமக்குத்  தேவையானதை வாங்கிக்கொள்ளலாம்.

படகு வீட்டின் உள்ளே அழகான வரவேற்பறை, சாப்பாட்டு அறை, படுக்கை அறை, குளியல் அறை என அனைத்தும் மிக நேர்த்தியாகவும், அழகாகவும் பராமரிக்கப்பட்டு  இருந்தது. இதுவொரு வித்தியாசமான அனுபவம். நமக்குத் தேவையான சமையல் செய்ய ஒரு சமையல்காரர் உண்டு. எங்கள் படகுக்குப் பின்புறமாக அவரது குடும்பம் இருந்தது. அங்கிருந்து சமைத்து, நேரம் தவறாமல் தேநீர்,டிபன், காஷ்மீர் ஸ்பெசல் உணவு எனத் தந்து எங்களை அன்போடு உபசரித்தார்.

நாங்கள் முதலில் பார்க்கச் சென்றது  'ஷாலிமார் தோட்டம்' .1619 ஆம் ஆண்டில் முகலாய பேரரசர் ஜஹாங்கீர் அவரது மனைவி  நூர்ஜகானுக்காக கட்டினார். இது முகலாய  தோட்டக்கலையின் சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது. தற்போது அனைவரும் காண்பதற்கு பொது பூங்காவாக மாற்றி உள்ளனர். அப்பப்பா… கண்கவர் வண்ணங்களில் எத்தனை விதமான மலர்கள் . மாட மாளிகைகள், நீருற்றுகள் என ஒவ்வொன்றும் நம்மை பிரமிக்க வைக்கிறது. இது போன்ற பல தோட்டங்கள் உண்டு நாம் கண்டு களிக்க.

அடுத்து நாங்கள் சென்றது " சங்கராச்சாரியார் கோவில்". இது தால் ஏரிக்கரையில் 1000  அடி உயரத்தில் அமைந்துள்ள,கி.மு 200 ஆண்டுகளுக்கு முந்தைய சிவபெருமான்  கோவில். இதை ஜோதீஸ்வரர் கோவில் என்றும் அழைப்பார்கள். ஆதி சங்கரர் பிரம்ம சூத்திரத்திற்கு விளக்க உரை எழுத, காஷ்மீரின்  சாரதா பீடத்திற்குச் சென்ற பொழுது, இந்த மலையில் உள்ள சிவபெருமானை தரிசித்து, சௌந்தர்யா லகரி என்னும் அம்பாள் தோத்திரப் பாடலை இங்கு பாடியதாக கூறுகின்றனர்.

சுமார் 300 படிகள் ஏறவேண்டும். மலை ஏறுவதற்கு முன்பாக பாதுகாப்பு கருதி நம்மை மிலிட்டரி காவலர்கள் சோதனை  செய்கிறார்கள். சோதனை முடிந்த பின் மலை ஏறி சிவனை நன்கு வழிபட்டு , அருகில் ஆதிசங்கரர் தியானம் செய்த இடத்தில் சிறிது நேரம் அமர்ந்துவிட்டு, மலை மேலிருந்து ஏரியின் எழிலை ரசித்து விட்டு இறங்கும் பொழுது மனதில் ஒரு அலாதியான அமைதி உண்டானது.

அடுத்தநாள் காலையில் நாங்கள் 'கீர் பவானி' கோவிலுக்குச்  சென்றோம். ஸ்ரீநகரிலிருந்து 27 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்தக்  கோவில் , இந்து பெண் கடவுளான ராஞ்னய தேவிக்கு , 1912 ஆம் ஆண்டு மகாராஜ் பிரதாப் சிங் என்பவரால் கட்டப்பட்டு, பின்னர் ஹரி சிங் அரசரால் புதுப்பிக்கப் பட்டது. இக்கோவிலைச் சுற்றி சினார் மரங்களும், அழகிய சுனையும் பார்ப்பவர்களை கவர்ந்து இழுக்கும்.  கர்பகிரகத்தில் அருங்கோண வடிவில் அமைந்துள்ள சுருளானது  தேவியைக் குறிக்கும். இதைச்  சுற்றியுள்ள புனித நீரானது வெண்மை, நீலம் என்ற வெளிர் நிறங்களில் இருக்கும். ஏதேனும் அசம்பா விதம்  வரும் நிலையில் இதன் நிறம் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. கார்கில் போர் வந்த போது இதன் நிறம் மாறியதாக பண்டிட் எங்களுக்குத் தெரிவித்தார். இங்கு பாலில் செய்த கீர்  (பாயசம்) பிரசாதமாக கொடுக்கப்படும்.

மறுநாள் நாங்கள் சென்றது  காஷ்மீரின் சொர்க்கமான " குல்மார்க்". நூற்றுக்கணக்கான அழகிய மலர்களைக் கொண்ட பூந்தோட்டம், அடர்ந்த பைன் மர காடுகள், அழகிய ஏரிகள் என எழில் கொஞ்சும் குல்மார்க், குளிர் காலத்தில் முழுக்க முழுக்க பனிக்குள்  மூழ்கி இருப்பதால், உலகின் தலைசிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறாள் இந்த மலையரசி. குளிர் காலத்தில் இங்கு பனிச் சறுக்கு விளையாட்டு விளையாடவே பல வெளி நாட்டினர் வருவதுண்டு. நாங்கள் , செல்லும் வழியெங்கும் நிறைய ஆப்பிள் தோட்டங்களை கண்டு ரசித்தோம். காஷ்மீர் ஆப்பிள் பல வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது அறிந்து மகிழ்ந்தோம்.

இங்கு மற்றுமொரு சிறப்பான அம்சம் என்றால்  அது கேபிள் கார் போன்ற இயக்கத்தில் உள்ள கொண்டோலா பயணம். குல்மார்க்கில் இருந்து காங்க்டூர் வரையில் ஒன்றும், காங்க்டூரிலிருந்து அபர்வத் வரை ஒன்றும் என இரு தடங்களில் நாம் பயணம் செய்யலாம்.

காங்க்டூரிலுள்ள  நிலையம் 3099 மீட்டர் உயரத்திலும், அபர்வத் நிலையம் 3979 மீட்டர் உயரத்திலும் அமைந்துள்ளது. அதில் செல்லும் பொழுது எழில் கொஞ்சும் அழகை ரசித்த படி சென்றோம். அங்கிருந்து  (LOC)  லைன் ஆப் கண்ட்ரோல் பார்க்க முடியும். அதில் நம் தேசியக்கொடி பறப்பதைப் பார்த்து பரவசத்தோடு மகிழ்ச்சி அடைந்தோம்.

அடுத்து நாங்கள் சென்றது 1915 ஆண்டு ராணி சிசோடியாவால் கட்டப்பட்ட பழமையான "மோஹினீஸ்வரர்" ஆலயம். இதனை ராணி கோவில் என்றும் அழைப்பார்கள். குல்மார்க்கின் எந்த சாலையில் இருந்து பார்த்தாலும் இந்தக் கோவிலைக் காணும் வண்ணம் சிறிய குன்றின் மேல் அமைந்துள்ளது இதன் சிறப்பாகும்.

மறுநாள்  கந்தர்பல்  மாவட்டத்தில் உள்ள "சோனாமார்க்"சென்றோம். இதனை தங்கப் புல்வெளி (Meadow of Gold) என்று அழைப்பார்கள். சூரிய அஸ்தமனத்தின் போது அங்குள்ள புல்வெளிகள் தங்கம் போல மின்னுவதைப் பார்க்கப்பார்க்க பிரமிப்பாக இருக்கும்.

ஸ்ரீநகரிலிருந்து 79 கி.மீ நாங்கள் பயணிக்கும்  பொழுது, வழியெங்கும் சிந்து நதியும்  எங்களுடனே பயணித்தது. அதன் நீல நிறமும், நீரின் சசலப்பும் மனதுக்கு உற்சாகத்தை  தந்தது. வழியெங்கும் உள்ள வயல்வெளிகளில் கோதுமை அறுவடை நடந்து கொண்டு இருப்பதைப் பார்த்தோம். சோனாமார்க்கை அடைந்ததும், எங்கள் மதிய உணவை முடித்துக்கொண்டு ,பிறகு தாஜிவாஸ் பனிப்பாறையை காண குதிரையில் சென்றோம். கோடை மாதங்களிலும் நாம் இது போன்ற பனிப்பாறையை பார்ப்பதே மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. பனிக்கட்டிகளை அள்ளியும், தூக்கி எறிந்து விளையாடியதும் மனதில் இன்றும்  பசுமையாக உள்ளது.

பயணங்களின் போது,  அந்தந்த ஊரின் கலாசாரத்தையும், மக்களின் அன்பையும், பழக்க வழக்கங்களையும்  நாம் கண்டு ரசிக்கலாம் என்பதை, பல சந்தர்ப்பங்களில்  நாங்கள் மனதார உணர்ந்தோம். மனதில் ஒரு மகிழ்ச்சியையும் நிறைவையும் தந்தது இந்தக் காஷ்மீர் பயணம்.

……………………………………………

இதுபோல உங்களைக் கவர்ந்த சுற்றுலாத் தலத்தைப் பற்றி, புகைப்படங்களுடன், சுவாரசியமான கட்டுரைகளாக எழுதி mm@kalkiweekly.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும். தேர்ந்தெடுக்கப்படும் பயணக் கட்டுரைகள் மங்கையர் மலர் ஆன்லைன் இதழில் பிரசுரம் ஆகும்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com