தத்ரூப ரங்கோலிகள் – இல்லத்தரசியின் சாதனை!

தத்ரூப ரங்கோலிகள் – இல்லத்தரசியின் சாதனை!
Published on
-சேலம் சுபா

ந்தக் குழந்தையின் கண்களில் தெரியும் துள்ளலும் உதட்டு சிரிப்பும் பார்க்கும் யாரையும் இன்னும் சிறிது நேரம் பார்க்கும்படி தூண்டும். நீரில் மிதக்கும் அழகிய வாத்து, மரத்தில் தொங்கும் மாங்காய், கண்களில் காதலுடன் ராதையும், கம்பீரத்துடன் கிருஷ்ணனும், வயலில் நின்று உழைக்கும் உழவன், ராம நவமிக்காக வில்லேந்திய ராமன் என அத்தனை ஓவியங்களும்,  வண்ணப் பொடிகளால் நிரப்பப்பட்ட ரங்கோலிகள் என்று சொன்னால் மட்டுமே தெரியும். அவ்வளவு தத்ரூபம்!

தூத்துக்குடியில் உள்ள இவர் வீட்டைச்  சுற்றி வசிக்கும் சிறியவர் முதல் பெரியவர் வரை அத்தனைப் பேரும் இவர் போடும் ரங்கோலிகளின் ரசிகர்கள்.

தற்சமயம் இவருக்கேன்றே துவங்கப்பட்ட இணையதள பக்கத்தில் இவரின் ரங்கோலிகளைக் கண்டு ரசித்த வெளிநாட்டு நிறுவனம் இவரை நடுவராக்கி பெருமைப்படுத்தியுள்ளனர். சைக்கிள் பிராண்டு அகர்பத்தி முதல் அநேக பிரபல நிறுவனங்கள் நடத்திய கோலப்போட்டிகளில் பல பரிசுகளை வென்றுள்ளார். எந்தப் போட்டியில் கலந்து கொண்டாலும் இவருக்கே பரிசு என்பதால்,  தற்போது போட்டிகளில் இருந்து விலகி இளையவர்களுக்கு வாய்ப்புத் தருகிறார்.

யார் இவர் ? அருப்புக்கோட்டையில் பிறந்து தூத்துக்குடியில் வசிக்கும் இல்லத்தரசி ரோஜாரமணி தான் இந்தப் பெருமைகளுக்கு சொந்தக்காரரான கலையரசி.

உங்க கோலமெல்லாம் இவ்வளவு ரசிக்கப்படுதே, எப்படி வந்தது இந்த ஆர்வமும் கலையும்?

கலையரசி
கலையரசி

"சின்ன வயசுல இருந்தே எனக்கு கோலம் போடறது பிடிக்கும் .  கல்யாணம் ஆன பிறகு, குழந்தைகள், அவங்க படிப்பு, அவங்க வாழக்கைன்னு என் நேரம் ஓடிடுச்சு. ஆனால், இந்த கடமைகள் நம்ம கிட்ட இருக்கற திறமைகளுக்கு திரை போட்டு மறைக்குமே தவிர மறக்க வைக்காது.

இப்ப எனக்கு ஐம்பத்தி நாலு வயசாச்சு. என் பொண்ணு அபிராமிக்கு கல்யாணம் ஆகி அவ வெளிநாட்டுக்குப் போனப்ப மனசு முழுக்க அவ பிரிவோட வலி. அதேபோல் மகன் மதன்ராம் படிச்சு முடிச்சு வேலைக்காக வேற ஊருக்குப் போக வேண்டிய சூழலில் இன்னும் என் வெறுமை அதிகரிச்சது. என்னை மாற்ற ஏதாவது செய்யணுமே ?

அப்பத்தான் என் மகளும் மகனும் நீங்கதான் எவ்வளவு சூப்பரா கோலம் போடுவீங்க. இப்ப அதையே இன்னும் நல்லா போடுங்களேன் அம்மா ன்னு சொன்னாங்க. சரின்னு, இந்த நாலஞ்சு வருசமாத்தான்  கோலங்களில் மறுபடியும் கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். இந்த வயசுல கீழே உட்கார்ந்து கோலம் போடறது கொஞ்சம் சிரமமா இருந்தது .அதனால, டேபிள் மேல ஒரு போர்டுல ஓவியங்களை வரைந்து அழகான வண்ணங்களை வடிகட்டி மூலம் தூவி ரங்கோலி போட ஆரம்பிச்சேன்.

வரைந்து முடித்ததும் என் வீட்டுக்கு வெளியே கொண்டு வந்து வைப்பேன். எங்க காம்பவுண்டுல இருக்கறவங்க மட்டுமில்லாம, சில சமயம் வெளியில இருக்கவங்களும் பார்த்து ரசிச்சு, என்கிட்டே நல்லா இருக்குன்னு சொல்லிட்டுப் போவாங்க. அவ்வளவு சந்தோசமா இருக்கும் எனக்கு. என் கோலம் இப்படி எல்லா மக்களையும் ரசிக்க வெக்குதேன்னு கடவுளுக்கு நன்றி சொல்வேன். அவங்களுக்காகவே  இன்னும் பொறுமையா அழகா போடணும்னு தோணும்.

டெக்னாலஜி பத்தியெல்லாம் எனக்கு தெரியாது. முகநூல் கணக்கு துவங்கியதிலிருந்து பல கலைக் குழுக்களில் என் கோலங்களை பதிய வைத்து எனக்கு பாராட்டுக்களைப் பெற்றுத்தந்து இப்ப எனக்காகவே ஒரு தனி பேஜ் ஆரம்பிச்சு அதை  நிறைய பேர் விரும்பற வரை எல்லாம் பார்த்துப் பார்த்து செய்யறது என் பசங்கதான்.

பல போட்டிகளில் கலந்துக்க வெச்சாங்க. நான் இருந்தா எனக்குத்தான் பரிசு கிடைக்குதுன்னு 'அம்மா இனி நீங்க மற்றவர்களுக்கு வழிவிட்டு முன்னுதாரணமா இருக்கனும் அதுதான் சரி,' ன்னு பிள்ளைங்க ஆசைபட்டாங்க.  இப்ப அவங்களோட அன்புக் கட்டளைக்கு இணங்கி போட்டிகளில் கலந்துக்காம சில கோலப் போட்டிகளுக்கு நடுவரா போக ஆரம்பிச்சுருக்கேன்.

கோலம் போடறப்ப நம்மை அறியாமலேயே நம்ம மனசு அமைதியாகி ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கும். அதை அனுபவிச்சாத்தான் உணரமுடியும். இப்ப சமீபத்துல ஆன்லைன் மூலமா UK ல நடத்த 'சப்தவர்ணா கோலோத்ஸ்வம்' போட்டியில நடுவரா இருந்தேன். மறக்க முடியாத அனுபவம் அது. எத்தனை திறமைசாலிகள் உலகம் முழுக்க இருக்காங்கன்னு வியப்பா இருந்துச்சு .

நான் அதிகம் படிக்கல, ஆனா அந்தக் குறையை என் கையில் இருக்கற கலை நிறைவாக்கிடுச்சு. பேசவே பயப்படற சாதாரண இல்லத்தரசியான எனக்கு ஊக்கம் தந்து இப்படி நாலு பேர் முன்னாடி தலைநிமிர்ந்து நிக்க வெச்சது என் பிள்ளைங்கதான். இப்படி ஒவ்வொரு பிள்ளையும்  தன்னோட பெற்றோர் கிட்ட இருக்கற மறைக்கப்பட்ட திறமைகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தந்தால் அதை விடப் பெரும்பேறு ஏது ?"

ரோஜா ரமணி தன் பிள்ளைகளை சுட்டிக்காட்டி இந்த சமூகத்துக்கும் ஒரு செய்தியுடன் முடித்தார். மேலும் அவரின் கற்பனைத்திறன் பெருகி அனைவரையும் மகிழவைத்து அவருக்கும் அவர் பிள்ளைகளுக்கும் மகிழ்ச்சி தர பாராட்டினோம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com