-ரேவதி பாலு."என்னப்பன் ராமன் தனியாக அரக்கர்களை எதிர்த்துப் போரிடுகிறானே? நான் உடனே அவனுக்கு உதவ அங்கே செல்ல வேண்டும்".திருமாலை முழு முதல் கடவுளாகக் கொண்டது வைணவ சமயம். ஆழ்வார்கள் திருமாலின் அணுக்கத் தொண்டர்கள். உலக இன்பங்களில் ஈடுபாடு கொள்ளாது, எந்நேரமும் திருமாலைத் தொழுவதையும் அவரைப் பற்றிப் பாடுவதையுமே தங்கள் வாழ்க்கையாகக் கொண்டவர்கள். பன்னிரு ஆழ்வார்களில் குலசேகர ஆழ்வார் அரச குலத்தில் பிறந்து ஓர் அரசனாக சேர நாட்டை ஆண்டவர். இவர் திருமாலின் மார்பில் இருக்கும் கௌஸ்துபத்தின் அம்சமாக அவதாரம் செய்தவர்..குலசேகர ஆழ்வார் சேரமன்னரும் சந்திர குலத்தவருமான திடவிரதன் என்பவர்க்கு மகனாக மாசி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தார். இவர் மன்னனின் மகனாகப் பிறந்து பக்தி மார்க்கத்தில் திளைத்தவர். வேத உபநிஷத்துகளில் நல்ல பாண்டித்யம் பெற்ற இவர் தந்தையிடமிருந்து அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார். இவர் பிறந்த ஊர் கேரளத்தில் கொடுங்களூருக்குத் தெற்கில் உள்ளது. ஊரின் பெயர் கருவூர் திருவஞ்சிக்களம். அவரது ஊருக்கு 'கொல்லி நகர்' எனவும் ஒரு பெயர் உண்டு. அவ்வூருக்கு தற்போதைய பெயர் 'திருக்குலசேகரபுரம்'. இவர் 'கொல்லிக் காவலன்', கூடல் நாயகன்', 'வில்லவர் கோன்' என்னும் பெயர்களாலும் அறியப்படுகிறார். தன் தந்தையின் காலத்திற்குப் பிறகு சேரநாட்டை மிகவும் சிறப்பாக ஆட்சி செய்தார். இவருடன் போருக்கு வந்த சோழ, பாண்டிய மன்னர்களை வென்று தமிழகத்தை ஒரே ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். இவரது வீரத்தினால் கவரப்பட்ட பாண்டிய மன்னன் தன் மகளை இவருக்குத் திருமணம் செய்து வைத்தார்..இவர் வீரதீரமிக்க அரசராக எதிரிகளை வென்று தன்னாட்டில் அமைதி நிலவச் செய்து நல்ல முறையில் நீதி வழுவாது ஆட்சி புரிந்து வந்தார். ஓர் அரசனாக மிகுந்த படைபலமும், திரண்ட செல்வமும் பெற்றிருந்தும், மானுட வாழ்க்கையில் பற்றின்றி திருமாலின் சேவையை மனம் உகந்து செய்து வந்தார். எப்பொழுதும் பெருமானின் அடியவர்களால் சூழப்பெற்றவராய், அவன் திருவிளையாடல்களை அடியார்கள் கூற, அதை உள்ளம் உருகிக் கேட்டு வந்தார். அவற்றைக் கேட்கக் கேட்க, குலசேகர ஆழ்வாருக்கு திருவரங்கனையும், திருவேங்கடவனையும் பெருமாள் உறையும் மற்ற தலங்களையும் தரிசிக்கும் ஆவல் மிகுந்தது..இவருக்கு வால்மீகி முனிவர் அருளிச் செய்த இராமகாதையின் மீது பற்று மிக, அதை அடியவர்களை விட்டு ஓதச் செய்து தினமும் கேட்பதை பொழுது போக்காக வைத்துக் கொண்டிருந்தார்..ஒரு நாள் இராமன் சீதைக்குக் காவலாய் இலட்சுமணனை வைத்து விட்டு தனியொருவனாய் கரன், தூஷணன் முதலான பதினான்காயிரம் அரக்கர்களோடு போரிடும் சம்பவத்தை இராமகாதையில் கேட்டார். உடனே உணரச்சி வசப்பட்டு "என்னப்பன் இராமனுக்கு என்ன ஆகுமோ? துணையாய்ச் செல்ல எவருமில்லையே?" என்று எண்ணி சட்டென்று தன் நால்வகைப் படைகளையும் திரட்டி இராமபிரானுக்கு உதவி செய்யக் கிளம்பினார்..இராமாயணம் என்றோ நிகழ்ந்த சம்பவம் என்பதை அரசருக்கு எப்படி புரிய வைப்பது என்று தெரியாமல் அமைச்சர்கள் திகைத்துப் போனார்கள். யார் சொல்வதையும் கேட்கும் மனநிலையில் அரசர் இல்லை என்பதையும் புரிந்து கொண்டார்கள். ஆகவே தூதுவர் போல சிலரை அனுப்பி, "அரசே! ஸ்ரீ இராமபிரான் தனியொருவராகவே அந்த பதினான்காயிரம் அரக்கர்களையும் அழித்து வெற்றியுடன் திரும்பினார்" என்று தெரிவிக்கச் செய்தனர். மன்னரும் இராமபிரானின் வெற்றியில் மிகவும் மனம் மகிழ்ந்து, தன் நால்வகைப் படையோடு வந்த வழியே தன் நாட்டுக்குத் திரும்பி வந்தார். ஆனால் தினமும் இராமகதையைக் கேட்பதால் இந்த மாதிரி சிக்கல்கள் ஏற்படுகின்றன என்று உணர்ந்த அமைச்சர்கள், அரசரின் இத்தகைய மனப்பாங்கிற்கு எவ்வாறு தீர்வு காண்பது என்று ஆலோசித்தனர். அரசருக்கு கதைகள் சொல்லும் வைணவ அடியவர்களை அரண்மனைக்கு வர விடாமல் தடுத்து நிறுத்தி விட்டால் அரசர் மனதில் குழப்பம் ஏற்படாது என்று யோசிக்க ஆரம்பித்தனர். இதற்காக ஒரு திட்டமும் தீட்டினர்..அரண்மனையில் அரசர் தினசரி வணங்கும் திருவாபரணப் பெட்டியிலிருந்து மிக அழகான ஒரு நவரத்தின மாலையை எடுத்து மறைத்து வைத்தனர். அரசரிடம் ஆபரணத்தைத் திருடியது வைணவ அடியவர் ஒருவரே என்று பழி சுமத்தினர்..அரசர் என்னவோ தவறு நடக்கிறது என்று புரிந்து கொண்டார். ஒரு குடத்தைக் கொண்டு வரச்சொல்லி அதற்குள் ஒரு கொடிய நச்சுப் பாம்பை விடச் சொன்னார்.."நான் இந்தக் குடத்திற்குள் கை விடப்போகிறேன். நீங்கள் சொல்வது உண்மையானால் இந்த நச்சுப் பாம்பு என்னைக் கடிக்கட்டும். இல்லையானால் இது ஒரு பொய் என்று நான் உணர்ந்து கொள்வேன்" என்று கூறி குடத்திற்குள் கை விட்டார். அமைச்சர்கள் பதைபதைத்துப் போனார்கள். ஆனால் பாம்பு அரசரை கடிக்கவில்லை. மனம் கலங்கிப் போன அமைச்சர்கள் அரசர் தாள் பணிந்து தங்களை மன்னிக்கும்படி வேண்டிக் கேட்டுக் கொண்டனர்..அரசருக்கு மிகவும் வெறுப்பேற்படுகிறது. அடியாரை மதிக்காத மக்களிடையே வாழ விருப்பம் இல்லாமல் போய் விடுகிறது. தன் மகனுக்கு முடிசூட்டி அரசனாக உட்கார வைத்து விட்டு தன் விருப்பத்திற்குரிய அடியார் குழாத்துடன் திவ்ய தேச யாத்திரையை மேற்கொள்கிறார். திருவரங்கம் செல்கிறார். அங்கே எம்பொருமானுக்குப் பணி செய்து 105 பாசுரங்கள் கொண்ட பெருமாள் திருமொழி என்னும் திவ்யப் பிரபந்தத்தைப் பாடியருளினார். 8 வைணவக் கோவில்களுக்குச் சென்று திருமாலை தரிசித்துப் பாடி மங்களாசாஸனம் செய்தார்..திருமலை திருப்பதிக்குச் சென்ற குலசேகர ஆழ்வார் வேங்கடேசப் பெருமாளின் அழகில் மயங்கி பெருமாளைப் பார்த்து, "எனக்கு இவ்வுலகிலோ தேவலோகத்திலோ எந்த உயர்ந்த பதவியும் தேவையில்லை. உன்னுடைய திருவேங்கடத்துப் பொய்கையில் ஒரு மீனாகவோ, அல்லது ஒரு புல் பூண்டாகவோ பிறக்க மாட்டேனோ!" எனப் பாடினார்.."என்றென்றும் உன் பவளவாய் தரிசனம் எனக்குக் கிடைக்கும்படி என்னை உன் கருவறை வாசற்படியாக வைத்துக் கொள்ள மாட்டாயா?" என்று குலசேகர ஆழ்வார் வேங்கடேசப் பெருமாளைப் பார்த்து ஏங்கிப் பாடிய பாசுரம்:.செடியாய் வல்வினைகள் தீர்க்குந்திருமாலே. நெடியானே வேங்கடவா! நின் கோயிலின் வாசல். அடியாரும் வானவருமரம்பையரும் கிடந்தியங்கும். படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே.இதனால் வேங்கடேசப் பெருமாளின் கருவறை வாசற்படிக்கு 'குலசேகரப்படி' என்றே பெயர். இவர் திருமலை வேங்கடேசப் பெருமாளிடம் மட்டும் வேண்டிக் கொண்டாலும், ஆண்டவன் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறான் என்பதால் திருவரங்கப் பெருமானின் கருவறை வாசற்படியும் 'குலசேகரப் படி' என்றே அழைக்கப்படுகிறது..குலசேகர ஆழ்வார் தமிழில் 'பெருமாள் திருமொழி' என்னும் நூலையும் சம்ஸ்க்ருதத்தில் 'முகுந்த மாலை' என்னும் நூலையும் இயற்றினார். இவர் ஸ்ரீ ராமபிரான் மேல் மிக்க அன்பு கொண்டு அவரைத் தாலாட்டித் தூங்க வைக்கும் விதமாக அருமையான தாலாட்டுப் பாடல்கள் பாடியுள்ளார். அதில்.'மன்னு புகழ் கோசலை தன் மணி வயிறு வாய்த்தவனே.தென்இலங்கை கோண்முடிகள் சிந்துவித்தாய் செம்பொன்சேர்.கன்னிநன்மா மதில்புடைசூழ் கணபுரத்தென் கருமணியே.என்னுடைய இன்னமுதே ராகவனே தாலேலோ'.என்னும் இனிய பாடலை நம் வீடுகளில் தாய்மார்கள் குழந்தைகளைத் தூங்க வைக்கப் பாடக் கேட்டிருக்கிறோம். இவருக்காகவே இவர் அவதரித்த திருவஞ்சிக்களம் என்னும் ஊரில் ஒரு அழகிய திருக்கோவில் கட்டப்பட்டுள்ளது.