ஒருவார்த்தை!

ஒருவார்த்தை!
Published on

ஷா வீட்டுல விசேஷம்! கல்யாண மண்டபத்துக்குள்ள என்ட்ரி கொடுக்கறதுக்கு முன்னால உஷா பற்றி ஓர் அறிமுகம். அவள் எனக்கு தூரத்து உறவினள். வீட்டுல வசதியில்லாததால, அவளே தன்னுடன் வேலை பார்த்த வேற்று ஜாதிக்காரரைத் திருமணம் செஞ்சுக்கிட்டா.

கலப்பு மணம்ங்கிறதுனாலயும், பணம், காசு, அந்தஸ்து குறைவுங்கிறதாலயும், உஷாவின் குடும்பத்தை, பல உறவினர்கள்
கீழ்ப்பார்வை பார்த்ததோடு, உள்வட்ட உறவுக்குள்ளயே சேர்க்கலை. நல்லது கெட்டது எதுக்குமே "வந்தால் வா… வராவிட்டால் சந்தோஷம்" என்ற எள்ளல் நிறைந்த பாரபட்சம்!

உஷாவுக்கு இது புரியாமல் இல்லை. ஆனாலும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் கண்டிப்பாக வந்து நிற்பதோடு, கடினமான வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்வாள், இன்முகத்தோடு!

"அவங்க எல்லாம் உன்னை ரிலேடிவ்னே மதிக்கிறதில்ல. நீதான்
போய் போய் நிக்கற!" என்று உஷாவின் மகள் விஷாலி வருத்தப்படுவாளாம்!

**************

காலம் அப்படியே இருந்துவிடுமா? விஷாலி நன்கு படித்தாள். அரசாங்க உத்யோகம் கிடைத்தது. இதோ, மாப்பிள்ளை அமைஞ்சு கல்யாணமும் நடக்கப் போகிறது.

உஷாவின் நல்ல மனசுக்காகவே கல்யாணத்துக்குப் போவது என எப்போதோ தீர்மானித்திருந்தேன். அவள் வீட்டில் நடக்கும் முதல் சுபக் காரியமாச்சே!

நான் பிளான் போட்டது தெரிந்ததும், என்னுடைய உடன்பிறப்புகள் நான்கு பேரும் பெட்டி படுக்கையுடன் கல்யாணத்தில் சேர்ந்து கும்மியடிக்கக் கிளம்பி வந்துவிட்டனர்.

உஷாவின் குடும்பப் பின்னணி அறிந்திருந்த அனைவரும் ஒரு பிங்க் நோட்டு (அதாங்க இரண்டாயிரம்!)க்குக் குறைவில்லாமல் மொய் எழுதியதோடு, பட்டுப்புடைவை, வேட்டி, வாட்ச், பரிசுப் பொருள்கள் என ஒவ்வொரு சடங்குக்கும் குவித்துத் தள்ளியதில், உஷாவின் ஓர்ப்படிக்கு முகமே மாறிவிட்டது. அது மட்டுமா? கலாட்டா க்விஸ்… டான்ஸ்… என எங்கள் குடும்பம் அசத்தியதில், மாப்பிள்ளை வீட்டாருக்கு ஒரே மகிழ்ச்சி!

"பரவாயில்லை… விஷாலி எவ்வளவோ மேல்! நீங்க எல்லாம் குடும்பமா வந்து களை கட்ட வெச்சுட்டீங்க. என் பொண்ணு ரஞ்சனி கல்யாணத்துக்கு நீங்க யாருமே வரலை!" என்று வெளிப்படையாகவே குற்றம் சாட்டினாள் விஷாலியின் பெரியம்மா.

"என்னம்மா பண்றது? நாங்க எல்லாருமே அப்ப வேலையில இருந்தோம். நீங்க கல்யாணம் வெச்சதோ வீக்டேஸ்ல! இப்ப நாங்க எல்லாம் ரிடையர்ட்! அதனால…" என ஏதோ சொல்லி சமாளிச்சேன்.

உஷாவும் அவளது கணவரும் நெகிழ்ந்து நன்றி சொன்னார்கள்.

"நீதான் இனிஷியேடிவ் எடுத்தே!" என என் உறவுகள் பாராட்டினாலும் அதன்பின்னே 'வீழ்ந்த மலரின் கதை' உள்ளது என யாருக்கும் தெரியப்படுத்தவில்லை கண்மணிஸ்!

**************

னக்கு ஒரு தமிழ் சமணக் குடும்பத்தினருடன் நட்பு உண்டு. அவர்கள் செடியிலிருந்து தானாய் உதிர்ந்துவிட்ட பவளமல்லி, செம்பருத்தி, நந்தியாவட்டை போன்ற பூக்களை மட்டுமே பூஜைக்குப் பயன் படுத்துவார்கள்.

"பூக்கள் உயிருள்ளவை. அவை செடியின் ஓர் அங்கம். அவற்றைப் பறித்தால் செடிக்கு வலிக்கும்!" என்பது அவர்கள் கருத்து. மலர்கள் இல்லாத சமயம் லவங்கப்பூ, அன்னாசிப்பூ போன்றவற்றைச் சமர்ப்பிப்பார்களாம்!

"பூக்கள், இறைவனின் படைப்பு! இயற்கையே, அதைக் கீழே விழும்படி செய்யும்வரை, அவற்றைப் பறிக்க நமக்கு உரிமை இல்லை. அதுமட்டுமல்ல… கீழே விழுந்த பூக்களுக்கும் ஒரு நோக்கம் உள்ளது. ஓர் உயர்வு உள்ளது. கீழே விழுந்து விட்டதால், அது எந்த விதத்திலும் தாழ்ந்துவிடவில்லை, என உணர்த்தும் வண்ணம் கடவுள் பீடத்தில் வைக்கிறோம். அதேபோல நம் உறவு, நட்பு இடையே விதிவசத்தால் கீழே விழுந்தவர்களையும் நாம் உயர்த்திவிடணும்" என்பார் அந்த நண்பர்.

நாம் வாழ்க்கையில் எப்போதுமே அழகான, வசதியான, பெரிய லெவல் ஆட்களுடன் பழகுவதைத்தான் விரும்புகிறோம். அல்லது நம் அந்தஸ்துக்கு சரிசமமாக உள்ளவர்களுடன் இழைகிறோம். கொஞ்சம் நிலைமை கீழே இருந்தால் விலகி நிற்பது மனித இயல்பு.

ஆனால் எனக்காக ஒரு விஷயம் முயற்சி செஞ்சு பாருங்களேன்! நம்மை விட எல்லாவிதத்திலும் சிறிது குறைவாக உள்ள (அதாவது அப்படி உள்ளதாக நாம் கற்பிதம் செய்துள்ள) உறவுக்காரர்கள் அல்லது நண்பர்கள் வீட்டுக்குப் போய் பழகி, அவர்களையும் கொஞ்சம் பெட்டராக ஃபீல் பண்ண வைக்கும்போது, தோன்றும் திருப்தியும், நல்ல உணர்வும், வி.ஐ.பி. வீட்டில் பத்தோடு ஒண்ணாகப் போய் நிற்பதில் கிடைப்பதில்லை என உணர்வீர்கள்.

வாழ்க்கையில் வீழ்ந்தவர்கள் மேலே வரும்போது, கை கொடுத்துப் பாராட்டுங்கள்! மகிழ்ச்சி அலைகளைப் பரப்புங்கள்.

வீழ்ந்த உறவுகளும் அங்கீகரிக்கப்படட்டும்,

வீழ்ந்த மலர்களைப் போலவே!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com