ஆஸ்திரேலியா அனுபவங்கள்!

ஆஸ்திரேலியா அனுபவங்கள்!
Published on
பகுதி – 2

 பயண அனுபவம்: பத்மினி பட்டாபிரமன்

துறைமுகப் பாலம்

டங்களுக்கு செல்லப் பெயர் வைப்பது ஆஸீஸ் (ஆஸ்திரேலியர்கள் சுருக்கமாக) க்குப் பிடித்தமான ஒன்று. சிட்னியின் அடையாளமான இந்த ஹார்பர் பாலத்துக்கு கோட்ஹேங்கர் பிரிட்ஜ் என்று பெயராம். மேலே இருக்கும் வளைவுகள் அப்படித்தான் இருக்கின்றன.

ஆஸ்திரேலியாவின் நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தின் தலைநகரமான சிட்னியின் இயற்கைத் துறைமுகத்தையும், வணிகக் கேந்திரமான சென்ட்ரல் பிஸினஸ் டிஸ்ட்ரிக்ட் பகுதியையும் இணைப்பது இந்தப் பாலம். 1149 மீட்டர் நீளத்தில், 134 மீட்டர் உயரத்தில், கிரானைட் முகப்பு கொண்ட கான்க்ரீட் தூண்கள் தாங்கி நிற்கும் உலகின் மிகப் பெரிய ஸ்டீல் பாலம்.

ரயில்கள், கார்கள், பஸ்கள், கைக்கிள்கள், நடப்போர்  என்று ஒரே நேரத்தில் எல்லாப் போக்குவரத்துக்களையும் இரண்டு அடுக்குகளில் அங்கே பார்க்க முடிகிறது. 1932ம் வருடம், மார்ச் மாதம் 19ம் தேதியன்று திறக்கப் பட்ட இந்தப் பாலம் கட்ட ஆரம்பித்த போது, அந்தப் பகுதியில் இருந்த, வீடுகளும் கடைகளுமாக சுமார் 470 கட்டிடங்கள் இடிக்கப் பட்டனவாம். அதற்கு நஷ்ட ஈடு எதுவும் தரப் படவில்லையென்று ஒரு வரலாற்றுப் புலம்பல் ஒலிக்கிறது.

கொஞ்ச காலம் முன்பு சில சாகச விரும்பிகள், இந்தப் பாலத்தின் வளைவின் உச்சி வரை ஏறி இறங்க ஆரம்பித்தார்கள். 1998 வாக்கில் அரசு, பண வரவுக்காக ஒரு கட்டணம் வைத்து, அதை ஒரு சுற்றுலா பயணிகளின் ஸ்போர்ட் ஆக்கி விட்டது.  சுமார் மூன்றரை மணி நேர சாகசம்.

புது வருடக் கொண்டாட்டங்களின்போது இந்தப் பாலம் விளக்குகளாலும், பட்டாசுகளின் வர்ண ஜாலத்தாலும் ஜொலிக்கும்.

தில் சாஹ்தா ஹை ஹிந்திப் படத்தில் ஜானே க்யூன் என்று ஆமிர் கானும் ப்ரீதி ஸிந்தாவும் ஆடிப்பாடும் காட்சிகள், இந்த பாலத்தைச் சுற்றியும், ஒபேரா ஹவுஸ் அருகேயும் எடுக்கப்பட்டவை. The Wolverine, The Matrix Alien: Covenant உட்பட பல ஹாலிவுட் படங்களும் சிட்னியில் எடுக்கப் பட்டவையே.

சிட்னி துறைமுகம்

சிஃபிக் சமுத்திரத்தின் ஒரு வளைவில் உள்வாங்கி இயற்கையாக அமைந்த சிட்னி ஹார்பரை,  போர்ட் ஜேக்ஸன் (Port Jackson) என்றும் அழைக் கிறார்கள். 150 மைல்கள் வரை சற்றே வளைவுகளுடன் அமைந்திருக்கும் இந்த துறைமுகத்தில் கப்பல்களை நிறுத்த (docking) நிறைய இடங்கள் இருப்பதால் எப்பொழுதுமே இந்தப் பகுதி படு பிஸி.

டார்லிங்  ஹார்பர்

து இன்னொரு செல்லப் பெயர். சிட்னியின் இதயப் பகுதி போல உயிரோட்டத்துடன் துறைமுகத்தைச் சுற்றியிருக்கும் இடம் டார்லிங் ஹார்பர்.

பெரும்பாலும் பொழுதுபோக்கு அம்சங்களாலேயே நிறைந்திருப்பதால் ஆஸ்திரேலியாவின் மற்ற மாகாணங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் இங்கு சுற்றுலாப் பயணிகள் குவிகிறார்கள்.

பெரிய கண்காட்சி நடத்தும் இடம், கடல் சார்ந்த மியூசியம், வனவிலங்கு சரணாலயம், மாநாடுகள் நடத்தும் மையம் (Convention Centre), மீன் காட்சியகம், மேடம் டுஸாட் மெழுகுச் சிலை மியூசியம் என்று ஒவ்வொன்றாக நுழைந்து வந்தால் பொழுது போவதே தெரியவில்லை.

பிர்மோன்ட் பாலம் ( Pyrmont Swing Bridge) என்னும் பெயர் கொண்ட ஊஞ்சல் பாலத்தில் இளம் ஜோடிகள், குழந்தைகளுடன் குடும்பத்தினர், முதியோர் என்று பலரும் உற்சாகமாக நடக்கிறார்கள். கோடைக் காலம் என்பதால் அனேகமாக பெண்கள், ஆண்கள் அனைவரும் பெர்மூடாஸ், ஹாட்பேண்ட்ஸ் 'T' சர்ட்டுடன் கடந்து செல்கிறார்கள்.

ஆஸ்திரேலியா பூமிப் பந்தின் தென்பகுதியில் இருப்பதால், டிசம்பரிலிருந்து மார்ச் வரை கோடைக் காலம். அப்போது வெப்பம் 33 டிகிரி வரையிலும்  ஜூனிலிருந்து ஆகஸ்ட் வரை குளிர் காலத்தில் 13 டிகிரி வரையிலும் இருக்கும். இதனால் சுற்றுலாவாசிகளுக்குப் பஞ்சமில்லை.

ந்தப் பகுதி முழுவதும் நீரூற்றுக்கள், பார்க்குகள், ஐஸ்க்ரீம் பார்லர்கள், கடைகள்,ரெஸ்டரான்ட்கள்   விளையாட்டு இடங்கள் என்று நிறைந் திருப்பதால் குழந்தைகளின் கூச்சல்கள் மாலைப் பொழுதை கலகலப்பாக்குகின்றன.

பார்பிக்யூ செய்யப்படும் ஸாசேஜ், இறைச்சியின் மணம், எக்ஸ்ப்ரஸோ காஃபி மணம் எல்லாம் கலவையாக காற்றில் எங்கும் பரவிக் கிடக்கிறது. இரட்டை லேயர் ரொட்டிக்குள் பொதிந்த பன்றி இறைச்சியான, "போர்வைக்குள் பன்றி" (Pigs in a Blanket) ஆஸ்திரேலியாவின் ஒரு ஸ்பெஷல் உணவு. ஆஸி சிக்கன், ஸ்டேக் என்று கடித்தபடி, சத்தமாக பேசி சிரித்து, ஒயின் அருந்தி வார விடுமுறையை அனுபவிக்கும் மக்கள்… நமக்குத்தான் சைவ சாலட், பாஸ்தா, உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ், முக்கால் முழம் பேப்பர்  கப்பில் கிடைக்கும் அருமையான காஃபி இவை போதுமே.

ஆஸ்திரேலியன் டாலரின் மதிப்பு அப்போது இந்திய ரூபாயில் ஒரு டாலர் 46 ரூபாய் என்று நினைவு. (இப்போது 53 ரூபாய் 60 காசு) இரண்டு டாலருக்கு நல்ல காஃபி கிடைக்கும்.

அனேக ஆஸ்திரேலியர்கள், பாரம்பரிய கிராமிய இசைப் பிரியர்கள். நடைபாத ஓரம் வயலின் வாசிக்கும் இசைக் கலைஞருக்கு தொப்பியில் சென்ட், டாலர் என்று காசுகள் விழுகின்றன.

அப்புறம் நமக்காகவே காத்திருக்கும் நினைவுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள். நம்ம ஊர் போல கலையம்சம் மிக்க பொருட்கள் கிடைக்காது. ஆனால் ஆஸ்திரேலிய பழங்குடியினர் ஆதி காலத்தில் வேட்டையாட பயன் படுத்துவார்களே, பூமராங், 20 டாலரில் பல வண்ணங்களில் மனதைக் கவர்ந்து வாங்க வைக்கிறது. 2 டாலர் முதல் கிடைக்கும் அபாரிஜினல் பைகள், பவுச்கள், தொப்பிகள், பயமுறுத்தும் முகமூடிகள், எத்னிக் செயற்கை நகைகள்.

இங்கே ஓபல் ஜுவெல்லரி (Opal jewellery) மிகவும் பிரபலம். 30 டாலரில் துவங்கி பல நூறு டாலர் வரை கிடைக்கும் ப்ரேஸ்லெட் மோதிரம், நெக்லேஸ்கள். வாங்காமல் வர முடியுமா? டாலர் மாற்றுக் கணக்குப் பார்த்து ஒரு ப்ரேஸ்லெட் வாங்க முடிந்தது. டார்லிங் ஹார்பரில் இரவு ஜே ஜே வெளிச்சத்தில் நடக்கலாம்.இரவு 9 மணி வரை கடைகள் திறந்திருக்கின்றன.

போண்டி கடற்கரை

கைகளுக்கிடையே ஒரு மீன் வடிவ நீண்ட பலகை போன்ற சர்ஃபிங் போர்ட் வைத்துக்கொண்டு ஆஸீஸ் அலைவது, அலைகள் மேல் பாய்ந்து விளையாடத்தான்.

யெஸ். நாம் சென்ற அடுத்த இடம் ஆஸ்திரேலியாவின் புகழ் பெற்ற பிறை வடிவிலான போண்டி பீச். உலகின் பருவ நிலையை நிர்ணயிக்கும் பசிஃபிக் கடல் இங்கே சாதுவாக இருக்கிறது. போண்டி என்றால் ஆஸ்திரேலியாவின் பழங்குடி அபார்ஜின் மொழியில் "நீரலைகள் மோதும் பாறைகள்" என்று பொருளாம்.  உலகிலேயே இரண்டாவது நீண்ட நம் மெரீனா பீச் பார்த்து விட்டு இதெல்லாம் சாதாரணமாகத் தோன்றினாலும் வித்தியாசம் இருந்தது.

சுமார் 6 மைல்களுக்கு நீண்ட பளீரென்ற பவுடர் வெண்மணல் பரப்பும், போர்டில் கால்களை அகட்டி வைத்து அலைச்சறுக்குபவர்களும் (Sea surfing), சிறு குழந்தை முதல் தைரியமாக நீச்சலடிப்பவர்களும், கரையில் வெயில் காய்பவர்களும்,  இன்னும் ஸ்கூபா டைவிங் போன்றவற்றில் ஈடுபடும் கடல் சாகசக்காரர்களும் அந்த வித்தியாசத்தை உணர வைக்கிறார்கள்.

நகருக்கு நடுவே அமைந்திருப்பதால், 1960கள் வரை, இங்கே பிகினி போன்ற ஆடைகள் தவிர்த்து உடலை மூடிய ஆடைகள்தான் அணிய வேண்டும் என்ற சட்டங்கள் இருந்தன. காலப் போக்கில் அவை மாறி, இன்று மேலாடையின்றியே சன்பாத் எடுப்பவர்களைப் பார்க்க  முடிகிறது.

ஆஸ்திரேலியாவுக்கே உரிய கங்காரு மற்றும் கோலா கரடி பார்க்கணுமே… இதுவரை ஒன்று கூட பார்த்ததில்லையே… யோசிக்கும் போதே, 'வாருங்கள்.. மிஸ்டர் அண்ட் மிஸஸ் கங்காரு குடும்பத்தை சந்திக்கலாம், அப்படியே ஒரு நாளில் 20 மணி நேரம் தூங்கும் கோலா கரடியை எழுப்பி விடலாம்… அதற்குப் பின்னர் நாம் செல்லப் போவது ஒரு பயங்கரமான குகைக்குள். அதற்கு நீலமலைக்கு செல்ல வேண்டும்…' என்றார் கைடு.
(பயணிப்போம்)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com