கராத்தே குமரி!

கராத்தே குமரி!
Published on

-உஷா ராம்கி

நிவேதிதா ஸ்‌ரீகாந்த் – வளர்ந்துவரும் சகலகலாவல்லி. கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டே, பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டே, கல்லூரியில் ஃப்யூஷன் நடனம் ஆடிக்கொண்டே, போன வாரம் மலேஷியாவில் சர்வதேச 'Okinawa Goju-Ryu Ipoh city Karate Open Championship' பந்தயத்தில் தங்கப் பதக்கமும் வென்றிருக்கிறார். அங்கு விளையாடிய மூன்று பந்தயங்களிலும் 6-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றிருக்கிறார், நம்ம சென்னைப் பெண் நிவேதிதா. இதுதவிர பாடுவது, பேட்மின்டன் விளையாடுவது, சமைப்பது, மாடெலிங் என்று ஆர்வங்கள் பல.

எப்போது, எப்படி தொடங்கியது கராத்தே?

"பத்து வயதில் தம்பி கராத்தே வகுப்பு சேர்ந்தவுடன், "அம்மா நானும் சேரணும்" என்று விளையாட்டாய் கராத்தே வகுப்பில் சேர்ந்தேன். கராத்தே வாழ்க்கையின் மிகப்பெரிய இலக்காய் மாறும் என்று அப்போது தெரியவில்லை. ஒரு கட்டத்தில் தம்பி கராத்தேவை விட்டு க்ரிக்கெட் விளையாடச் சென்றுவிட, எனக்கு ஈடுபாடு வளர்ந்தது. இந்தியாவின் சார்பாக சர்வதேச கராத்தே போட்டிகளில் கலந்து வெற்றி பெறுவதே என் பெரிய இலக்கு.

பொழுதுபோக்குக்காக கராத்தே சேர்ந்து, பின்பு எப்போது அது முக்கிய அங்கம் வகிக்கத் தொடங்கியது?

ராத்தேவின் கட்டா என்ற பிரிவு என் நடன அசைவுகளை ஞாபகப் படுத்தியதால் ஆர்வத்தோடு சேர்ந்தேன். இது நாம் தனியாக பங்கேற்பது, எதிர்த்து இன்னொருவரோடு போட்டி போடுவது அல்ல. நான் நன்றாக செய்கிறேன் என்று என் கோச் சொல்ல, போட்டிகளிலும் ஜெயிக்கத் தொடங்கியவுடன் ஆர்வம் அதிகமாகியது. அதன் பிறகு குமித்தே என்ற பிரிவில் நுழைந்தேன். இது எதிராளியோடு சண்டையிட்டு விளையாடி ஜெயிப்பது.

இதில் அடிபட வாய்ப்பிருக்கிறது. இரண்டு தடவை முகத்தில் அடி வாங்கியிருக்கிறேன். முகத்தில் தழும்பு வந்தால் பரதம் ஆடுவதில் நெருடல் ஏற்படலாம் என்பது சரிதான். ஆனால் ஒன்றுக்காக மற்றொன்றை விடுவேன் என்று தோன்றவில்லை. என் அம்மா பரதக் கலைஞர் மற்றும் என் குரு. அவர்களே கூட கராத்தே விளையாடுவதை பெருமையாக நினைக்கறார்கள். கராத்தே வேண்டாம் என்று என் பெற்றொர் சொன்னதே கிடையாது.

கராத்தேக்கு தேவை பவர்; நடனத்துக்கு நளினம். இரண்டும் முரணாக இருக்கிறதே?

ரம்பத்தில் குழப்பம் வரும். பரதத்தில் முழங்கையைத் தூக்கி ஆடவேண்டும். கராத்தேயில் முழங்கை உடம்போடு ஒட்டியிருக்க வேண்டும். இது பழகும்வரை கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது.

குமித்தேவில் மாநில அளவில் தங்கம் வென்றதால் தேசியப் போட்டிகளுக்குச் சென்றேன். ஒரு முறை காலிறுதிவரை செல்ல முடிந்தது. கொரோனாவிற்குப் பிறகு பங்கெடுக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது மலேஷியாவில் நான் பங்கு கொண்ட பந்தயம் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானது. அதில் எடை பிரிவுகள் கிடையாது, அதனால் என்னைவிட எடை அதிகமான பெண்களுக்கெதிராக போட்டியிட வேண்டியிருந்தது. நல்ல விதத்தில் திறன் வளர்த்துக் கொண்டதால் அவர்களை என்னால் வெல்ல முடிந்தது.

முதல் பந்தயம் கொஞ்சம் டென்ஷனாக இருந்தது. அதற்குப் பிறகு நம்பிக்கை வந்துவிட்டது.  இந்தியாவிலிருந்து சென்ற ஒரே பெண் என்ற பெருமையும் எனக்கு உண்டு.

இதை முழுநேரமாக செய்யத் திட்டமா?

ம்பாதிக்க ஒரு வேலைக்குப் போக வேண்டும். கல்லூரியில் ந்யூட்ரிஷ்யன் சார்ந்த துறை எடுத்திருக்கிறேன். கராத்தே என்ற விளையாட்டு இதுவரை முழுவதுமாக அங்கீகரிக்கப்படவில்லை. எங்கள் சொந்த செலவில் தான் இதுவரை போட்டிகளில் கலந்து கொள்கிறேன். கராத்தே, பரதம் இரண்டையும் பகுதிநேரமாக நிச்சயம் தொடர்ந்து செய்வேன். இரண்டுமே எனக்கு ரொம்பப் பிடித்த விஷயங்கள்.

ஆனால், கிரிக்கெட் போன்ற விளையாட்டு மாதிரி இதற்கும் முக்கியத்துவமும் அங்கீகாரமும் வரவேண்டும். அப்படி வந்தால் இதில் இன்னும் நிறைய பேர் திறமைகளை வளர்த்துக்கொள்ள ஏதுவாக இருக்கும்.

பரதநாட்டியம், கராத்தே, படிப்பு எல்லாம் எப்படி? 24 மணி நேரம் போதுமா?

ராத்தே பந்தயங்கள் இருந்தால் நாட்டிய நிகழ்ச்சிகள் ஒத்துக்கொள்ள மாட்டேன். பயிற்சிக்கும் நேரம் தேவைப்படும் இல்லையா. இந்த மலேஷியா பந்தயத்துக்கு சில மாதங்களுக்கு முன்னால் நாட்டிய நிகழ்ச்சிகள் இருந்தது. அதற்குப் பிரயாணமும் செய்ய வேண்டியிருக்கிறது. படிக்க நேரம் குறைவாக இருக்கிறது என்பதால், வகுப்பில் உன்னிப்பாக கவனித்து விடுவேன். அதனால் படிக்கும் நேரம் மிச்சமாகும். எல்லாமே பிடித்து செய்கிறேன். அதனால் நேரம் இல்லை என்ற பேச்சு கிடையாது. முடியவில்லை என்று உட்கார்ந்தால் பிறகு ஒன்றை நிறுத்தும்படி ஆகிவிடுமே."

எதுக்கு பெண்ணுக்கு கராத்தே எல்லாம். நடனம் அழகான கலை. அதில் மட்டும் கவனம் செலுத்தலாமே என்று சொல்பவர்கள் உன்னைச் சுற்றி இருக்கிறார்களா?

திர்ஷ்டவசமாக அப்படி யாருமில்லை. உண்மையில் கராத்தே ஒரு விளையாட்டாக இல்லாவிட்டாலும் தற்காப்புக்காகவாவது பெண்கள் கற்றுக் கொள்வது அவசியம் என்று நினைக்கிறேன். தன்னம்பிக்கையையும் தன் வாழ்க்கைக்குப் பொறுப்பேற்கும் தன்மையையும் இது வளர்க்கிறது. அதோடு, முன்பெல்லாம் நான் மிகவும் ஒல்லியாக இருப்பேன். இப்பொழுது ஆரோக்கியமும் அதிகமாகி இருக்கிறது, பலமும் வந்திருக்கிறது. அதுமட்டுமில்லை. கவனமும் மன ஆரோக்கியமும் கூட வளர்கிறது. கராத்தே பழகப் பழக ஃபோகஸ் என்பது மிக நன்றாக அதிகரித்திருக்கிறது.

இந்த சந்திப்புக்காக நன்றி. ஒரு விஷயம் மட்டும் மீண்டும் வலியுறித்தி உங்களிடம் சொல்ல வேண்டும். கராத்தே என்னும் இந்த தற்காப்புக் கலை அரசு அங்கீகரிக்கும் விளையாட்டாகி, இன்னும் அதிக முக்கியத்துவம் பெற்றால், அது எங்களைப் போன்ற கலைஞர்கள் வளர உதவியாக இருக்கும்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com