முத்துக்கள் மூன்று!

முத்துக்கள் மூன்று!
Published on
தொகுப்பு: பத்மினி பட்டாபிராமன்
விண்வெளி நிலையங்களின் தூதுவர்

மெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, ஐரோப்பா மற்றும் மாஸ்கோவில் அமைந்துள்ள பிற விண்வெளி நிலையங்களின் தூதுவராக செயல்படும் ஒரே இந்தியர் டாக்டர் ஸ்ரீமதி கேசன்.

ராமனாதபுரத்தில் பிறந்த இவர், ஹைதராபாத் நகரில் பள்ளிப் படிப்பு கல்லூரிப் படிப்பை முடித்திருக்கிறார். தேசிய மாணவர் படையில் 'ஆல் ரவுண்ட் பெஸ்ட் கேடட்' விருதும்

அகில இந்திய துப்பாக்கிச் சுடும் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் பெற்ற ஆல்ரவுண்டர். 2009 ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள மியாமியில் நடந்த விண்வெளித்துறை பற்றிய மாநாட்டில் கலந்து கொண்டிருக்கிறார்.  உலகத்தில் உள்ள அனைத்து நாட்டு குழந்தைகளும் அங்கு வந்திருந்தனர். இந்தியாவில் இருந்து மட்டும் ஐந்து வருடங்களுக்கு மேலாக குழந்தைகள் வரவில்லை என்று தெரிந்ததும் அதிர்ச்சியாக இருந்ததாம். இந்திய பள்ளி மாணவர்களை எப்படியாவது நாசா அழைத்துச் செல்ல வேண்டும் என்று தீர்மானித்து,  முதல் கட்டமாக 108 மாணவர்களை தயார் செய்திருக்கிறார். இதற்காக விளம்பரம் செய்த போது பல பள்ளிகளும் ஆர்வத்தோடு தங்கள் மாணவர்களை அனுப்ப முன் வந்தார்கள்.

108 மாணவர்களுக்கும் பாஸ்போர்ட் விசா தயார் செய்து 2010ம் ஆண்டில் நாசா விண்வெளி பயிற்சி மையத்திற்கு அழைத்துச் சென்று திரும்பினார்.

2011ம் ஆண்டில் ஸ்பேஸ் கிட்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார். எதிர்கால சந்ததியினருக்கு விண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வத்தை ஏற்படுத்துவதே இந்த நிறுவனத்தின் நோக்கமாகும்.

விண்வெளி சுற்றுலா செல்வதன் அடுத்த கட்டமாக ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள்  தயார் செய்ய மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டிகள் நடத்தி கிராமப்புற மாணவர்களையும் பங்கேற்க வைத்திருக்கிறார்.

மிகப்பெரிய பலூனில் ஹீலியம் வாயு நிரப்பி, அதில் பாராசூட் மூலம்  சில மின்னணு சாதனங்களை பொருத்தி பறக்க விடும் பலூன் செயற்கைக் கோள் ஒன்றை முதலில் தயாரித்திருக்கிறார்கள். வளிமண்டலத்தில், அடுக்கு மண்டலத்தை அடைந்தவுடன் பலூன் உடைந்து, மின்னணு சாதனம் மட்டும் பாராசூட் உதவியுடன் கீழே வரும்.

இதனால் பூமியின் புகைப் படங்களை எடுப்பதுடன், வெப்பநிலை மற்றும் இதர கணிப்புகளை  செய்ய முடியும்.இதுவரை  வெற்றிகரமாக 18 பலூன் செயற்கைக்கோள்கள், 2 துணை சுற்றுப்பாதை செயற்கைக்கோள்கள் (Auxiliary orbit satellite) மற்றும் 2 சுற்றுப்பாதை செயற்கைக்கோள்களை  (Orbital satellite) விண்ணில் செலுத்தியிருக்கிறார்கள்.

இந்த நிறுவனம் தயாரித்த உலகின் எடை குறைந்த செயற்கைக்கோளான 3.8 செ.மீ. கனசதுரம் அளவுள்ள, 64 கிராம் எடை கொண்ட 'கலாம் சாட்', 2017ம் ஆண்டு நாசாவால் செலுத்தப்பட்டது.

பின்பு 800 கிராம் எடையுள்ள 10 செ.மீ. கனசதுர 'ஸ்கைசாட்' எனும் செயற்கைக்கோள், 2018ம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டில் செலுத்தப்பட்டது.

இதுவரை மூவாயிரத்துக்கும் மேற்பட்டோரை நாசா மற்றும் பிற விண்வெளி நிலையங்களுக்கு சுற்றுலா அழைத்துச் சென்றிருப்பதாக சொல்லி பிரமிக்க வைக்கிறார்.

பலவிருதுகள் பெற்றவர் ஸ்ரீமதி கேசன்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவுக்காக 'அப்துல் கலாம் விருது',

இங்கிலாந்து நாட்டின் 'ரீகல் பிரிட்டிஷ் விருது', சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகத்தால் 'வளர்ந்து வரும் பெண் தொழில் முனைவோர்' விருது,  யுனிபைட் ப்ரைன்ஸ்(unified brains)  மற்றும் ஆசியா ஆப்பிரிக்க சேம்பர் சார்பில் விண்வெளித் துறையில் 'மிகவும் போற்றப்படும் உலகளாவிய இந்தியர்' என்ற பட்டம் போன்றவற்றை வாங்கியிருக்கிறார் ஸ்ரீமதி.

————————————————-

சிலம்பக் கலையில் வல்லுனர்

திருச்சியைச் சேர்ந்த இளம் பெண் சந்தியா பாரம்பரியக் கலைகள் மீது கொண்ட ஆர்வம் மற்றும் ஈடுபாடு காரணமாக, தந்தையின் வழி காட்டுதலோடு சிலம்பம், பரதம், பறை போன்ற கலைகளில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளைப்  பெற்றிருக்கிறார்.

பாரம்பரியக் கலைகளின் புகழைப் பரப்பும் முயற்சியாக, பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பயிற்சியும் அளித்து வருகிறார்
பல்வேறு கலைகள் தோன்றுவதற்கு அடித்தளமானது சிலம்பக் கலை. இது சிறந்த தற்காப்புக் கலை என்பதால். பெண்கள் சிலம்பக் கலையை கற்றுக்கொள்வது அவர்களின் பாதுகாப்புக்கு உதவும் என்று சொல்லும் சந்தியா, தன் தந்தை கார்த்திக் ரகுனாத் அவர்களிடமிருந்து சிலம்பக் கலையைக் கற்றுக் கொண்டிருக்கிறார்.

மாவட்ட அளவில் இருந்து மாநில அளவில் பல பரிசுகளை வென்றுள்ளார். 2017 ம் ஆண்டு தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் இரண்டாம் இடம்  பெற்றார்.

பறை மற்றும் சிலம்பாட்டம் மூலம் கல்வி, மது ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இதுமட்டுமின்றி தவிர, அரசு விழிப்புணர்வு நிகழ்வுகளிலும், கலைநிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். பரதம் பயில வேண்டும் என்று விரும்பி, தற்சமயம் பரதக் கலையில் இளங்கலை முடித்து முதுகலை இறுதியாண்டு படித்து வருகிறார்.

சிலம்பம்-பரதக்கலை தொடர்புடைய அராய்ச்சியில்  முனைவர் பட்டம் பெற வேண்டும் என்பதே இவரது குறிக்கோள் என்கிறார்.

————————————————-

வனவியல் புகைப்படக் கலைஞர்

னவியல் புகைப்படக்கலைஞர் ராதிகா ராமசாமி. சர்வதேச அளவில் பிரபலமானவர், தேனி மாவட்டம் வெங்கடாஜலபுரத்தில் பிறந்து வளர்ந்தவர் இவர்.

வனவியல் புகைப்படக்கலை காரணமாக காடுகளையே தனது முகவரியாகக்கொண்டு, உலகம் முழுவதும் பயணிக்கிறார். இவரது தந்தை இவர் பத்தாம் வகுப்பு படிக்கும்போது,  ஒரு பிலிம் காமிரா வாங்கித் தர, வீட்டைச் சுற்றி இருக்கும் செடி கொடிகள், வண்டுகள் வண்ணத்துப் பூச்சிகள் என்று படம் பிடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

2004 ம் ஆண்டு எனது முதல் டி70 ரக டிஜிட்டல் கேமிராவை வாங்கிய பின் புகைப்பட ஆர்வமே வாழ்க்கையாயிற்று. பறவைகளை படம்பிடித்துக்கொண்டு இருந்தவருக்கு  வனவியல் புகைப்படக் கலையின் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக,திருமணம் முடிந்து டெல்லி சென்றாலும் அங்கிருந்த வனவிலங்கு பாதுகாப்பகங்களுக்குச் சென்று விலங்குகளை படம் எடுத்திருக்கிறார்.

இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருக்கும் காடுகளில் உள்ள விலங்குகளையும், பறவைகளையும் 17 வருடங்களுக்கும் மேலாகப் படம் பிடித்து வருகிறார். சிங்கம் புலி போன்ற விலங்குகள் அனாவசியமாக மனித வேட்டையாடுவதில்லை.

அவற்றை நாம் சீண்டாதவரை நம்மைத் தாக்காது.  ஓநாய், காட்டு நாய், காட்டெருமை போன்றவை மிக ஆபத்தானவை. காட்டு யானைகளும் ஆபத்தானவையே. என்று தன் அனுபவங்களைச் சொல்லும் ராதிகா, மேலும், வெயில், மழை என்று எந்தச் சூழ்நிலையையும் பார்க்காமல் கரடு முரடான மலை, முள் பாதையாக இருந்தாலும் பத்து கிலோ எடையுள்ள காமிராவை தூக்கிக்கொண்டு நடக்கவேண்டும் என்றும் இத்தனை சவால்களும் ஒரு நல்ல 'ஷாட்' அமையும்போது, சாதித்த திருப்தியைத் தந்துவிடும். என்றும் கூறுகிறார்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com