வேர்களைத் தேடி…

வேர்களைத் தேடி…
Published on
– ரேவதி பாலு

ரண்யாவும், சரண்யாவும் தங்களுடைய வேர்களைத் தேட ஆரம்பித்த முயற்சிதான் 'பாரம்பரியம்.' இருவரும் பள்ளி நாட்களிலிருந்தே ஒன்றாகப் படித்த தோழிகள். படிப்பை முடித்து இருவரும் மிக நல்ல வேலையில் சேர்ந்தார்கள். இருவர் குடும்பத்தினரும் நம் கலாசாரம், பாரம்பரியத்தில் ஊறியவர்கள். கல்யாணம் ஆகி ஆளுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது.

சரண்யா கார்த்திக், சரண்யா ஸ்ரீசரண்
சரண்யா கார்த்திக், சரண்யா ஸ்ரீசரண்

ரண்யா கார்த்திக், சரண்யா ஸ்ரீசரண் – இவர்களின் தோழமை தொடர்ந்து கொண்டேயிருந்த காலகட்டத்தில் இருவருக்கும் ஒரேமாதிரி சிந்தனை. 'ரசாயன கலப்பில்லாத வெறும் மூலிகைப் பொருட்களைக் கொண்டுதானே நம் பாட்டி, அம்மா எல்லாம் வீட்டில் குளியல் பொடி, சிகைக்காய் பொடி, மஞ்சள் பொடி எல்லாம் தயாரித்தார்கள்? இந்த அவசர யுகத்தில் அதற்கெல்லாம் நேரமில்லாத இளம் தலைமுறைக்கு நாமே அவற்றையெல்லாம் தயாரித்து அளித்தால் என்ன?' இந்த சிந்தனை தொடரவே, இருவரும் முதலில் தத்தம் அலுவலக வேலைக்கு விடை கொடுத்தார்கள். தங்கள் குடும்பத்தில் பெரியவர்கள் தயாரித்த பொடிகளை மேலும் ஆராய்ந்து இன்னும் சில மூலப்பொருட்களை சேர்த்து 2016ல் சிறிய அளவில் மூலிகைக் குளியல்பொடி தயாரித்து தெரிந்தவர்களுக்கு இவர்களே நேரில் சென்று கொடுத்து விட்டு வந்தார்கள். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிகவும் அக்கறை கொண்ட இவர்கள், பிளாஸ்டிக்கை அறவே மறுத்து கண்ணாடி பாட்டில்களில் ஒரு சணல் நூலில் கட்டிய நன்றி சீட்டோடு வீடுகளுக்கு விநியோகம் செய்தார்கள்.

பச்சிளங்குழந்தைகளின் பட்டுப் போன்ற சருமத்திற்கேற்ற வகையில் முழுப்பயறு, பாதாம் சேர்த்துத் தயாரித்து விற்கும் குளியல் பொடிக்கு அயல்நாடுகளிலும் வரவேற்பு ஏற்பட்டது. தன் பெண்ணின் அல்லது மருமகளின் பிரசவத்திற்கென்று அயல்நாடு செல்லும் அம்மாக்கள் கட்டாயமாக வாங்கிச் செல்லும் அந்தக் குளியல் பொடியை மிகக் குறைந்த நாட்களில், அவர்களின் பயண அவசரத்திற்கேற்ப தயாரித்து அளித்துப் பாராட்டைப் பெற்றார்கள். பிறகு, தலைமுடி உதிர்வதைத் தடுப்பதற்கான மூலிகை எண்ணையும் தயாரிக்க ஆரம்பித்து விற்பனை சூடுபிடித்தது.

இவ்வாறு ரகரகமாகத் தயாரித்தளிக்கும் பொருட்களின் கீர்த்தி வாய் மூலமாகவே பரவி, விலையும் அளவாக இருந்ததால் வியாபாரம் பெருக ஆரம்பித்தது. பெண்களுக்கான குளியல் பொடியில் கஸ்தூரி மஞ்சள் சேர்த்துத் தயாரித்த இவர்கள், ஆண்களுக்கும் தனியாக மஞ்சள் பொடி கலக்காத குளியல் பொடி தயார் செய்து கொடுத்தது ஆண்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. 'பாரம்பரியம்' என்ற அழகான, பொருத்தமான பிராண்ட் உருவானது.

கும்பகோணம் காபி விற்பனை நிலையங்களில் காப்பியை பித்தளை டபரா டம்ளரில் கொடுப்பதைப் பார்த்ததும், 'ஆஹா! காப்பியை இப்படி அல்லவா நம்
முன்னோர்கள் குடித்தார்கள்' என்ற நினைப்பு மனதில் எழ, அடுத்த முயற்சியாக பித்தளை டபரா, டம்ளர், காப்பி பில்டர் போன்றவற்றை வாங்கி ஒரு செட்டாக விற்பனை செய்ய ஆரம்பித்தார்கள். 'ஈயச்சொம்பு வேணுமே, கிடைக்குமா?' என்று ஒருவர் கேட்க, அதைத் தயாரிக்கும் இடத்திற்கே சென்று பல மாடல்களில் வாங்கி வந்து விற்க ஆரம்பிக்க, 'எனக்கு, உனக்கு' என்று ஒரே ரகளையான விற்பனை.

கொரோனா மிகக் கொடுமையாக இருந்த இந்த 2021ன் ஆரம்ப
காலக்கட்டங்களில் கொரொனா நோயாளிக்குத் தேவையான, சித்த வைத்தியர்களால் பரிந்துரைக்கப்பட்ட மூலிகைப்பொடி தயாரித்துக் கொடுத்தார்கள்.

பண்டிகை சமயங்களில் நாம் உபயோகிக்கும் பாரம்பரிய விஷயங்களை கவனமாகக் கருத்தில் கொண்டு, தீபாவளிக்கு மூலிகைகள் கலந்த சீயக்காய் பொடியும், கார்த்திகை தீபத்திற்கு நம் முன்னோர்கள் ஏற்றிய மாடல்களில் பித்தளை விளக்குகளையும் இவர்கள் சந்தைப்படுத்தியது பெருத்த வரவேற்பைப் பெற்று, பெருமளவில் விற்பனையானது.

தாங்கள் எதிர்கொண்ட சவால்களில் முக்கியமானது, 'பேக்கிங்.' பிளாஸ்டிக் உபயோகிக்காமல் பேக்கிங் எப்படி செய்வது என்று யோசித்து, மிக அழகிய முறையில் ஒரு உறையில் போட்டு பேக் பண்ணிக் கொடுத்தோம்.

''சூர்ய பகவானின் அனுக்ரஹம் எங்கள் வியாபாரத்திற்கு மிகவும் முக்கியம். அதனால் வெய்யில் அடிக்கும் நாட்களில் நாங்கள் மிகவும் பரபரப்பாகச் செயல்பட்டு ஒரு நொடியைக் கூட வீணாக்காமல் மூலிகைப் பொருட்களைக் காய வைப்போம். இந்தியாவில் எல்லா பெரிய நகரங்களுக்கும், 'கொரியர்' மூலம் பொருட்களை அனுப்பிக் கொடுக்கிறோம்.

ரம்ப காலத்தில் பெரிதாக மார்க்கெட்டிங் எல்லாம் ஒன்றும் இல்லை. வாய்மொழியாகக் கேள்விப்பட்டு எங்கள் பொருட்களை உபயோகித்தவர்கள், முதலில் எங்களுடைய தொடர்ந்த வாடிக்கையாளர்கள் ஆனார்கள். இவர்கள் மற்றவர்களுக்கு சிபாரிசு செய்ய, எங்கள் வாடிக்கையாளர்கள் அதிகரிக்க ஆரம்பித்தனர். பிறகு, பொருட்காட்சிகள் நடக்கும் இடங்களில் நாங்களும், 'ஸ்டால்' போட்டு விற்பனை செய்தபோது, விற்பனையும் அதிகரித்து நல்ல விளம்பரமும் கிடைத்தது. இப்போது முகநூல் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களின் அறிமுகம் கிடைக்கப்பெற்று பரவலாக விளம்பரம் கிடைக்கிறது. இந்தியாவில் எங்கெங்கிருந்தோ பொருட்களைக் கேட்டு தொலைபேசி மூலம் தொடர்பு கொள்கிறார்கள்.

இப்போது யு.எஸ்., கனடா, யு.கே. போன்ற நாடுகளுக்கு எங்கள் தயாரிப்புகளை அனுப்பிக் கொண்டிருக்கிறோம். முக்கியமாக அங்கெல்லாம் அனுப்பும்போது, 'ஈயச்சொம்பு' நசுங்காமல் இருக்க அதை ஒரு எவர்சில்வர் சம்புடத்தில் நறுவிசாக வைத்து நேர்த்தியாக, 'பேக்' செய்து கொடுப்பது மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

ல்ல வேலைக்கு, 'குட் பை' சொல்லிவிட்டு, எங்களுக்கு நாங்களே எஜமானர்களாக கடினமாக உற்சாகமாக உழைத்தாலும், எங்கள் வெற்றிக்கு எங்கள் கடின உழைப்பு மட்டுமல்லாமல்; எங்கள் கணவன்மார்களின் அன்பார்ந்த ஒத்துழைப்பும்தான் முக்கியமான காரணம்" என்று இருவரும் கோரஸாக ஒரே குரலில் சந்தோஷமாகச் சொல்கிறார்கள்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com