கல்லாதது கடலளவு – 6

கல்லாதது கடலளவு – 6
Published on
-நாராயணி சுப்ரமணியன்.
விஷமுள்ள மீன்கள் உண்டா?

விலங்குகளின் உலகில் 'விஷம்' என்பது எந்த அர்த்தத்தில் புரிந்து கொள்ளப்படுகிறது என்று பார்க்கலாம். சில மீன்கள் venomous தன்மை கொண்டவை. வேறு சில மீன்களோ poisonous தன்மை கொண்டவை. Venomous தன்மை கொண்ட விலங்குகள் பாம்புகளைப் போன்றவை – அதாவது, உயிருடன் இருக்கும்போது அவை நம்மைத் தாக்கி, கொத்தினாலோ கடித்தாலோ நமக்குள் விஷம் செலுத்தப்படும். Poisonous தன்மை கொண்ட விலங்குகளின் தசையில் நஞ்சு இருக்கும், அவற்றின் தசையை நாம் உண்டால் நமக்குள் விஷம் சேரும். இதை எளிதில் புரிந்து கொள்ள ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். 'அது உன்னைக் கடிக்கும்போது நீ இறந்துவிட்டால் அது venomous, ஒரு விலங்கை நீ கடித்து சாப்பிடும்போது உனக்கு இறப்பு ஏற்பட்டால் அந்த விலங்கு poisonous'.
தசையில் விஷமுள்ள சில poisonous மீன்கள் உண்டு. அதுபோன்ற மீன்கள் விற்பனைக்கே வருவதில்லை என்பதால் அவற்றை நினைத்து அவ்வளவாக பயப்படத் தேவையில்லை.

முள்ளிலும் தோலிலும் விஷமுள்ள venomous மீன்களிடம் நாம் கவனமாக இருக்கவேண்டும். கல்மீன், சிங்க மீன், ஸ்டார்கேசர் மீன், சில வகை திருக்கைகள் போன்ற பல வகை மீன்களில் விஷத்தன்மை உண்டு. இவற்றில் குறிப்பாக கல்மீன்கள், பாறைகள் நிறைந்த கடற்கரைகளில், கடல்நீர் தேங்கியிருக்கும் இடத்தில் கூடக் காணப்படும் என்பதால் நாம் அவற்றைப் பார்ப்பதற்கும் அவற்றைக் கையாளவும் வாய்ப்பு உண்டு. ஆகவே கவனமாக இருக்கவேண்டும். கல்மீன்கள் உயிருடன் இருந்தாலும் அசைவற்று இருக்கும் என்பதால் உயிரற்ற மீன்கள் என்று நினைத்து நாம் அதைத் தொடவும் வாய்ப்பு உண்டு.

இவை உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு மோசமான விஷத்தன்மை கொண்டவை அல்ல என்றாலும் நாம் கவனமாக இருப்பது நல்லது. ஒரே ஒரு அறிவுரையைப் பின்பற்றினால் போதும் – கடற்கரையில் உள்ள எந்த மீன்களையும் கையால் தொடவேண்டாம்.

திமிங்கிலங்கள் மனிதர்களைக் கொல்லுமா?

பெரும்பாலான திமிங்கிலங்கள் மனிதர்களை விட அளவில் பெரியவை என்றாலும் அவற்றின் உணவுப்பழக்கம் வித்தியாசமானது. சிறு மீன்கள், நுண்பாசிகள் மற்றும் நுண்விலங்குகள் ஆகியவற்றைக் கொல்வதற்கு ஏதுவாகவே அவற்றின் வாய் மற்றும் ஜீரண உறுப்புகள் தகவமைக்கப்பட்டிருக்கின்றன.

ஆர்கா (Killer whale) என்ற ஒரு பெரிய டால்பின் வகை 25 அடி நீளம் வரை வளரக் கூடியது. பெயரைப் பார்த்து பயப்படவேண்டாம். இவை பிற திமிங்கிலங்களைக் கொல்லும் பண்புள்ளவை என்பதால் வந்த காரணப்பெயர். ஆர்காக்களின் வாய் அமைப்பு பெரிய விலங்குகளைக் கொல்லும் திறன் கொண்டது. சுவாரஸ்யம் என்னவென்றால், மிக அரிதான தற்செயலான தாக்குதல்கள் நீங்கலாக, ஆர்காக்கள் மனிதர்களைக் கொல்வதில்லை. உண்பதும் இல்லை.

ஆர்காக்கள் குடும்பமாக வாழும் இயல்பு உள்ளவை என்பதால், தாய் ஆர்கா என்ன உணவைப் பரிந்துரைக்கிறதோ குட்டி ஆர்க்கா அதைத்தான் உண்ணுமாம். ஆர்கா குடும்பங்களுக்குள் மனிதர்களை உண்ணும் வழக்கம் இல்லை என்பதால் நாம் தாக்கப்படுவதில்லை.

ஓங்கில்கள் (டால்ஃபின்கள்) மனிதர்களுக்கு உதவுவதாக பல தகவல்கள் வருகின்றவே, அது உண்மைதானா?

ங்கில்கள் புத்திசாலித்தனம் கொண்ட கடல் பாலூட்டி இனங்கள். அவற்றுக்குப் புரிந்துணர்வு அதிகம். பல சூழ்நிலைகளில் அவை மனிதர்களின் பிரச்சனையைப் புரிந்துகொண்டு உதவியிருப்பது உண்மைதான் என்கிறார்கள் பாலூட்டியியல் வல்லுநர்கள்.

ஆனால் அதே நேரம் அவர்கள் ஒரு எச்சரிக்கையையும் வைக்கிறார்கள். என்னதான் அவை நமக்கு உதவியிருக்கின்றன என்றாலும் கடலில் ஒரு ஓங்கிலைப் பார்க்கும்போது அதை வீட்டு விலங்காகக் கருதி நாமாகப் போய் கொஞ்சுவதெல்லாம் ஆபத்து என்று அறிவுறுத்துகிறார்கள். அவை காட்டுவிலங்குகள் என்பதால் அதற்கான மரியாதையைக் கொடுத்து நாம் விலகியிருக்கவேண்டும் என்றும் கூறுகிறார்கள்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com