ஒரு வார்த்தை!

ஒரு வார்த்தை!
Published on

ன்னுடைய உறவினர் ரமாமணி, ஜெராக்ஸ் கடை வைத்திருக்கிறார். வருமானத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை; ஆனா… அவருடைய மகள், பி.எச்.டி. முடிச்சுட்டுதான் கல்யாணம் என உறுதியாக இருக்கிறாள்; மகனோ 'சினிமா கனவைத் துரத்தியபடி இசை, குறும்பட இயக்கம்னு இருக்கானாம்!

"எனக்கும் மற்ற பெண்கள் போல, காலா காலத்துல பேரன் – பேத்தி எடுத்து, ஹாய்யா கொஞ்சிக்கிட்டு, நார்மல் வாழ்க்கை வாழ ஆசை இருக்காதா? இன்னும் எத்தனை நாளைக்குத்தான் கடையைக் கட்டிக்கிட்டு அழறது? எனக்கு வாழவே சலிப்பா இருக்கு!" என்று நொந்து கொண்டார்.

***************

ப்படித்தான் ஒரு குடும்பஸ்தனுக்கு வாழப் பிடிக்காமல், துறவி ஆயிடலாம்னு காட்டுப் பக்கமா போனானாம்!

"கடவுளே… நான் பிளான் போட்டது எதுவும் டயத்துக்கு நடக்கலே! நான் வாழ்க்கையை வாழ ஏதாவது ஒன் ரீஸன் ப்ளீஸ்!"னு கடவுள்கிட்ட மனமுருகிக் கேட்டு அழுதானாம்.

உடனே கடவுள் அவன் முன்னால தோன்றி, "மகனே… இந்தக் காட்டை ஒருமுறை சுற்றிப் பார்!"ன்னாராம்.

"உம்… பார்த்தாச்சு சாமி! காடு முழுக்க புதர்ச் செடிகளும், மூங்கில் மரங்களும்தான் தெரியுது."

"அப்பனே… புதர்ச்செடி, மூங்கில்… இந்த இரண்டுக்கும் ஒரே சமயத்துலதான் விதைகளைப் போட்டேன்! அவற்றுக்குத் தேவையான நீர், வெளிச்சம், ஊட்டம் எல்லாமே சமமாதான் தந்தேன். ஆனா, புதர்ச்செடி கிடுகிடுன்னு வளர்ந்துடுச்சு… மூங்கில் மரமோ மூணு, நாலு வருசம் கழிச்சுதான், முளைக்கவே செஞ்சுது. ஆனாலும் நான் அதை கை விடலை… தொடர்ந்து பராமரிச்சேன்."

"ஆனா, ஆறாவது வருஷம் மூங்கில்கள் நல்ல உறுதியா, கம்பீரமா வளர்ந்து நின்னுது… புதர்ச் செடியோ அதன் காலடியில் பரவியிருந்தது!"

"இவ்ளோ வருஷ காலத்தில் மூங்கில் விதை செத்துப் போகலை; தான் வாழறதுக்குத் தேவையான அளவுக்கு, வேர்களை ஆழமாகவும், அகலமாகவும் பரப்பியிருந்தது. அதற்குப் பிறகுதான் மூங்கில் தன்னோட முழு வளர்ச்சியைக் காண்பிச்சுது."

"அதேபோலத்தான்… என்னோட படைப்புகளுக்கு பல்வேறு சவால்களைச் சந்திக்கிற சக்தியை நான் கொடுக்கிறேன். நீ எப்போதெல்லாம் பிரச்னைகளால் கஷ்டப்பட்டாயோ, அப்பல்லாம் நீ வேர் விட்டு வளர்ந்து வந்திருக்கிறாய் என்று அர்த்தம். உன்னை எப்பவும் மத்தவங்களோட ஒப்பிட்டுப் பார்க்காதே! ஒருவேளை அவங்க முட்புதர்களாகக் கூட இருப்பார்கள்!"

"மூங்கிலோ, புதர்ச்செடியோ இரண்டுமே காட்டினை அழகாக்குபவைதான். ஆனால், இரண்டும் வெவ்வேறானவை என்பதைப் புரிஞ்சுக்கணும்… உனக்கான நேரத்துக்காகக் காத்திரு… மூங்கில் போல உயர்வாய்!"னு சொல்லிட்டு மறைஞ்சுட்டாராம்!

***************

ஆமாம் கண்மணீஸ்… பொறுமையுடன் நம்பிக்கையுடன் முயற்சி செய்வோம்! மூங்கில் போல வளர்வோம்! ஏன்னா… கடவுள் முயற்சி செய்பவர்களை முந்தச் செய்வார் நிச்சயம்!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com