
'ஹிஜாப்' என்பது என்ன?
அது 'பர்தா' அல்ல; தலையை மூடும் ஸ்கார்ஃப்! மதப் பண்பாட்டில் ஈடுபாடு மிக்க இஸ்லாமிய குடும்பங்களில், ஒரு பெண் பருவமடைந்ததும் இந்த 'ஹிஜாப்' அணிவிக்கப்படுகிறது. அது தலையை மட்டும் மூடாமல், தோள், மார்பு, இடை வரை மூடக்கூடிய மெல்லியப் போர்வை.
நம்முடைய 'தாவணி' போல ஒரு மேலாக்கு! பூப்படையும் சிறுமி, வளர்ந்து குமரி ஆகும்போது, அவளது அங்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் பிறர் கண்ணில் படாதவாறு மறைத்து, கண்ணியம் காக்கும் பாதுகாப்பான ஆடைதான்.
ஆனால் அதை அரசியலாக்கி, ஆதாயம் தேடுவது யார்? ஏன்?
வயர்லெஸ் இயர்பீஸ், ப்ளுடூத்துடன் கூடிய மினியேச்சர் கேமரா சகிதம் ஐ.ஏ.எஸ். ஆபீசர் ஒருவர் பரீட்சையில் காப்பி அடித்து, சென்னையில் மாட்டிக் கொண்டது நினைவிருக்கக்கூடும். அதுபோன்று காப்பி அடிப்பதைத் தவிர்க்கவே, ஹிஜாப்பைக் கழற்றி வைத்து விட்டுத் தேர்வு எழுத வருமாறு சொல்லியிருக்கிறார் முதல்வர். இதில் மத துவேஷம் எதுவுமில்லை என்கிறது நிர்வாகத் தரப்பு.
இதை எதிர்த்து அந்த மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அந்த இஸ்லாமிய மாணவிகளுக்கு எதிராக இந்து மாணவ – மாணவியர் காவித்துண்டு, தலைப்பாகை அணிந்து எதிர்வினைப் போராட்டம் நடத்தினார்கள். இதனால் வன்முறை, போலிஸ் பாதுகாப்பு, சர்ச்சை என அதகளமானதோடு, "ஹிஜாப் எங்கள் அடிப்படை உரிமை" என மாணவிகள் வழக்குப் போட்டுள்ளனர்.
"மழலையர் பள்ளியிலிருந்து ஹிஜாப் அணிந்து வருகிறோம். கல்விக்கு இனணயாக ஹிஜாப்பை மதிக்கிறோம். 'கல்வியா, ஹிஜாபா' என்றால் ஹிஜாப்தான் முக்கியம்; புனிதத்தைக் காக்க, கல்வியைத் துறக்கத் தயாராக இருக்கிறோம்!" என்று ஆவேச முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
ஆனால் அதற்கு பதிலடி தரும் விதமாக, காஷ்மீரத்தைச் சேர்ந்த அருசா பர்வேஸ் என்ற இளம்பெண் (12ம் வகுப்பில் 499/500 மதிப்பெண் பெற்று காஷ்மீர் மாநிலத்தில் முதலிடம் பிடித்தவர்.) ஹிஜாப் அணியாமல் தன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
"ஹிஜாப் அணிவதும் அணியாமல் இருப்பதும் ஒவ்வொருவரின் மதத்தின் மீதான நம்பிக்கையை வரையறுக்காது. நான் ஓர் இஸ்லாமியப் பெண், இதயத்தால்; ஹிஜாப்பால் அல்ல!" என்று பதிவிட, அவரது தலையை வெட்ட வேண்டும் என்று ஹிஜாப் ஆதரவாளர்கள் கொந்தளித்துள்ளனர்.
இதுபோல, வகுப்பறையிலும் வகுக்கப்பட்ட உடை விதிகள் என்னவோ அதை மாணவ – மாணவியர் அனைவரும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்பதுதானே நியாயம்? ஜாதி, மத, இன, பாகுபாடு ஏதுமில்லாமல், 'கல்வி' மற்றும் அது சார்ந்த நற்பண்புகளை, வாழ்வியல் கோட்பாடுகளை ஆழமாக, அறிவார்த்தமாகக் கற்க வேண்டிய பருவம் அது அல்லவா?
'ஹிஜாப் கண்டிப்பாக அணிவோம்' என்றால், அதற்கான பிரத்யேகப் பள்ளிகளை நாடலாமே?
*******************
'தாலி' அடிமைச் சின்னம்; 'ஹிஜாப்' மட்டும் மத உரிமை, புனித அடையாளமா?
மருதாணி, மூக்குத்தி, பூ, பொட்டு, ருத்ராட்சம், விபூதி, தாயத்து போன்றவற்றை அணிய பல கிறித்துவக் கல்விக் கூடங்களில் தடை இருப்பதோடு அபராதமும் விதிக்கிறார்கள்…
அதை இந்துக்கள் இத்தனைக் காலம் பொறுத்துக் கொள்ளவில்லையா? நீங்கள் மட்டும் முரண்டு பிடிப்பது ஏன்?
*******************