கிழக்கு ஐரோப்பா பகுதி – 14

கிழக்கு ஐரோப்பா பகுதி – 14
Published on
பயண அனுபவம்: பத்மினி பட்டாபிராமன்
போர்களில் மீண்டு எழுந்த ஹங்கேரி

லகிலேயே மிக அழகான நாடாளுமன்றம், நகரை இணைக்கும், இயக்கும் பாலங்கள் , ஒரு நதியின் ஒரு கரையில் குன்றுகளும், மறுபுறம் சமமான தரைப் பகுதியும் இருக்க, அவற்றை இணைக்க அழகிய சங்கிலித் தொடராக சம இடைவெளியில் வரிசையாக பாலங்களும் இருந்தால் எத்தனை அழகாக இருக்கும்? அதுதான் புடாபெஸ்ட். ஹங்கேரி நாட்டின் தலைநகரம். புடா என்னும் குன்றுப் பகுதி. டானுபே நதிக் கரையின் மேற்குப் பகுதியிலும் பெஸ்ட் என்னும் சமவெளிப்பகுதி கிழக்குக் கரையிலும் இருக்க இரண்டும் சேர்ந்து புடாபெஸ்ட். கரைகள் இரண்டையும் எட்டு பாலங்கள் சம இடைவெளிகளில் இணைக்கின்றன.

'சுற்றுலா' இந்நாட்டின் முக்கிய வருமானங்களில் ஒன்று. உலகப் போருக்கு முன்பு வரை விவசாயத்தை மட்டுமே பெரிதும் நம்பி இருந்த ஹங்கேரி, பின்னர் தொழில் வளத்தைப் பெருக்க ஆரம்பித்தது. உலக சந்தையில் ஈடுபட்டு, அயல்நாட்டுக் வாணிபக் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வந்து, கொஞ்சம் கொஞ்சமாக பொருளாதாரத்தை மேம்படுத்தி வருகிறது. இன்று 80 சதவீதம் உற்பத்தி தனியார் நிறுவனங்கள் மூலம் கிடைக்கிறது.

புடா கேசில் (Buda Castle)

ஸ்லோவேகியாவிலிருந்து சுமார் மூன்று மணி நேர கோச் பயணத்தில் புடா பெஸ்ட் வந்து விட்டோம். எல்லாம் அருகருகே உள்ள நாடுகள் தானே…
"நோவோடெல் புடாபெஸ்ட் சிடி ஹோட்டல்"(Novotel Budapest City Hotel) என்ற பிரம்மாண்ட ஹோட்டலில் தங்கிய நாங்கள் காலையில் சென்ற முதல் இடம் 'புடா கேஸில்' எனப்படும் புடாபெஸ்ட் கோட்டை. 1265ல் கட்டி முடிக்கப்பட்டு, ஹங்கேரி அரசர்களின் வசிப்பிடமாக இருந்த கோட்டை, எதிரிகளை கண்காணிப்பதற்காக, ஒரு குன்றின் மேல் கட்டியிருக்கிறார்கள். ஆனால் தற்போது இருக்கும் பரோக் பாணி அரண்மனை 1769 ல் கட்டப்பட்டுள்ளது. 62 மீட்டர் உயரம் கொண்ட இதன் உச்சி டோம் டானுபே நதியை பார்த்த வண்ணம் இருக்கிறது.

கோட்டை முகப்பிலேயே, போர் வீரர்கள் தோற்றத்தில் பிரம்மாண்ட சிலைகள் வரவேற்கின்றன. கோட்டையின் உள்ளே, நேஷனல் கேலரி, புடாபெஸ்ட் ஹிஸ்டரி மியூசியம், நேஷனல் லைப்ரரி ஆகியவை அமைக்கப் பட்டுள்ளன. 200 அறைகள் இருக்கின்றனவாம். இரண்டாம் உலகப் போரில் மிகவும் சேதமடைந்த கோட்டை முற்றிலுமாக புனரமைக்கப்பட்டுள்ளது. பல மாடங்கள் மேலேறிச் செல்ல வேண்டியிருக்கிறது. ஒரு வழியாக படிகள், சிறு டனல்கள், மேலும் படிகள் என்று கோட்டையின் மேல்தளத்துக்கு வந்தோம். பரந்து விரிந்த காட்சிகளைக் கண்டதும் களைப்பெல்லாம் பறந்து விட்டது.

கோட்டையின் மேல்மாடத்திலிருந்து கீழே தெரியும் டானுபே நதியும், மறுகரையில் மிக அழகான பாராளுமன்றமும், சம இடைவெளிகளில் பாலங்களும் கண் நிறைந்து போகும், மூச்சு முட்ட வைக்கும் அழகு. திரும்பி வரும்போது, கேசில் அருகே ஃபிஷர்மேன்ஸ் பாஸ்டியன் (Fisherman's Bastion) என்ற நினைவுச்சின்னம் சென்றோம். போர் தளபதிகளுக்கு பாதுகாப்பு கொடுத்த மீனவர்களின் குடியிருப்பாக இருந்ததாம். இங்கே கட்டப் பட்டிருக்கும் ஏழு உயரமான கல் தூண்களும், கி.பி. 895ல் ஹங்கேரியை உருவாக்கிய ஏழு தலைவர்களின் நினைவாக நிற்கின்றன.

நாங்கள் சென்ற சமயம் அங்கே ஏர் ஷோ நடந்து கொண்டிருந்தது.விர் விர்ரென்று விமானங்கள் விண்ணில் பறந்து கொண்டிருந்தன. அங்கே உள்ளூர் பெண்கள், தங்கள் கையால் நெய்த க்ரோஷா டாப்ஸ் விற்றுக் கொண்டிருந்தார்கள். அருமையாக நெய்திருந்த அவற்றை போட்டி போட்டு வாங்கினோம்.

உலகிலேயே மிக அழகான நாடாளுமன்றம்

பெஸ்ட் என்னும் கிழக்குக் கரையில் இருக்கும் ஹங்கேரி நாடாளுமன்றம், இம்ரே ஸ்டெய்ண்டில் (Imre Steindl) என்னும் கட்டிட வடிவமைப்பாளரால் டிசைன் செய்யப்பட்டு உருவாக்கப் பட்டது. 1885 லிருந்து 1902 வரை கட்டி முடிக்க 17 ஆண்டுகள் ஆயின என்கிறார்கள். இதை நேஷனல் அசெம்ப்ளி என்றும் சொல்கிறார்கள்.

இதற்குள், 10 வளாகங்கள் (Courtyards), 27 வாசல்கள், 29 மாடிப்படிகள், 690 அறைகள், அதில் 200க்கும் மேற்பட்ட அரசாங்க அலுவலகங்கள் இருக்கின்றன. டானுபே நதிக் கரையில் பகலில் பார்க்கும் போது பிரமிப்பைத்தரும் பாராளுமன்ற வளாகம், மாலையானதும் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப் படுகிறது. பாலங்களும் முழுவதும் விளக்குகளின் ஒளியில் ஜொலிக்கின்றன.

படகுகளில் வலம் வந்தபடியே ஜொலிக்கும் பாராளுமன்றத்தையும், பாலங்களையும் பார்க்கும் போது கண் பெற்ற பயனை நினைத்து மனம் மிக மிக பரவசமாகிறது. நீரில் பிரதிபலிக்கும் கட்டிடம் பாலங்கள் அவற்றின் விளக்குகள் என்று வேறு உலகத்துக்கு அழைத்துச் செல்கின்றன. வீடியோ ஃபோட்டோ என்று கேமராக்களில் பதிவு செய்வதா கண்களுக்குள் நிறைத்துக் கொள்வதா என்று திண்டாடித்தான் போகிறோம்.

ஹீரோ சதுக்கம் (Heroes' Square)

புடாபெஸ்ட் நகரின் முக்கிய அடையாள இடங்களில் ஒன்று ஹீரோஸ் ஸ்கொயர் என்னும் சதுக்கம். இதன் நடுவில் இருக்கும் தூண், 1900 மாவது ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது இதனால் இதை மில்லேனியம் மானுமென்ட் (Millennium Monument) என்றும் அழைக்கிறார்கள். நாட்டின் சுதந்திரத்துக்காக போரிட்ட ஏழு வீரத் தலைவர்களுக்காக எழுப்பப் பட்ட நினைவுத் தூண் இது.

இதன் உச்சியில் ஹங்கேரியன் புனித கிரீடத்தை கையில் வைத்திருக்கும் ஆர்ச் ஏசஞ்சல் கேப்ரியல் சிலை காணப்படுகிறது. பரந்து விரிந்த சதுக்கம் முழுக்க நடக்கும் போது இன்னும் 14 சிலைகளைப் பார்க்க முடிகிறது. எல்லாம் ஹங்கேரியை ஆண்ட மன்னர்களின் சிலைகள்.

புடாபெஸ்ட்டில் 'சலாம் பாம்பே', 'தாஜ்மஹல்' , 'கறி ஹவுஸ்' உட்பட பல இந்திய உணவு விடுதிகள் உண்டு. அங்கே உணவை முடித்துக் கொண்டு மீண்டும் ஆண்ட்ரஸ்ஸே அவென்யூ, ஒபேரா ஹவுஸ், என்று சுற்றிய பின்னர்,
"இன்று இரவு டின்னருக்கு ஹங்கேரிய நாட்டின் பழமையான 19ம் நூற்றாண்டு உணவு விடுதிக்கு செல்கிறோம், ஹங்கேரியன் பாரம்பரிய உணவு சாப்பிடுகிறோம், கிராமிய ஆட்டம் பாட்டம்களில் கலந்து கொள்கிறோம்," என்றார் எங்கள் கைட்.

சைவ உணவு தான் என்பதை நிச்சயப் படுத்திக் கொண்டேன்.எங்களுடன் சில ஜெயின் குடும்பத்தினர் வந்திருந்ததால் சைவ உணவு எங்கும் கிடைத்தது. அந்த பழமையான விடுதிக்குள் நுழைந்த போது உண்மையிலேயே 19ம் நூற்றாண்டு கட்டிடம்தான். கற்களால் ஆன சுவர்கள், அந்தக் கால பாத்திரங்கள், தட்டுக்கள்.

ஆளுயர வயோலாவை வாசித்துக் கொண்டிருந்த ஹங்கேரியர் ஒருவர் என்னிடம் கோலை நீட்டி வாசிக்கும் படி சொன்னார். வீணை போலத்தானே என்ன, ஆளுயரம் இருப்பதால் நின்றபடி வாசிக்க வேண்டும் அவ்வளவுதானே என்று நினைத்து வாசிக்க ஆரம்பித்தேன். யம்மா… செம வெயிட் … ஏதோ எனக்கத் தெரிந்ததை வாசித்தேன், ஒரே கைதட்டல் தான்.

ங்கேரிய பாரம்பரிய உணவு என்று தட்டுக்களில் ஏதோ வந்தது. குடைமிளகாய்க்குள் உப்புமா போல ஏதோ ரவையில் செய்து வைத்து அப்படியே ஓவனில் பேக் செய்திருந்தார்கள். தொட்டுக்கொள்ள, வெந்த உருளைக் கிழங்குகள், மிளகு தூவி, மற்றும் காய்கறி சலாட், சுவையாகவே இருந்தது. ஒயின், பியர் என்று லோகல் சரக்குகளும் டேபிள்களில் டிஸ்ப்ளே செய்யப்பட்டிருந்தது. பாரம்பரிய இசையை சிலர் பாடத் துவங்க, கிடுகிடுவென்று ஆணும் பெண்ணுமாக வந்து ஜோடி நடனம் ஆட ஆரம்பித்தார்கள். எல்லோரையும் சேருமாறு அவர்கள் அழைக்கவே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களும் எழுந்த சென்று நடனமாட தொடங்கினார்கள். என் கணவரும் அந்த ஆட்டத்தில் இணைந்து கொண்டார்.

அந்தக்கால அமைப்பு, அன்பான உபசரிப்பு, சுவையான, பாரம்பரிய இசை, நடனம் என்று வித்தியாசமானதாக இருந்தது ஹங்கேரியன் அனுபவம்.

அடுத்த நாள் எங்கள் பயணம் எமிரேட்ஸ் விமானத்தில் துபாயிலிருந்து சென்னை வந்து நிறைவடைந்தது. ஐரோப்பிய நாடுகளின் அழகும், போர் வரலாறும், அதிலிருந்து அவர்கள் மீண்ட விதமும், வாழ்க்கையை எதிர்கொள்ளும் விதமும் இதயத்தில் பதிந்து போனவை. எத்தனை கட்டுரைகள் வேண்டுமானாலும் எழுதலாம். ஓரளவு என்னுடைய அனுபவங்களை மங்கையர் மலர் வாசகிகளுடன் இதுவரை பகிர்ந்து கொண்டேன். நன்றி.

(நிறைந்தது)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com