இதற்காகவா ஒரு கொலை?

இதற்காகவா ஒரு கொலை?
Published on
 -ஜி.எஸ்.எஸ். 
தொடர் – 10 

ரு சாதாரணப் பின்னணியிலிருந்து வந்து ஒரு தொழில் சாம்ராஜ்யத்தையே உருவாக்கியவர் அவர்.  மற்றவர்கள் பின்பற்றக் கூடிய  ஒரு ரோல்மாடல் வாழ்க்கையை வாழ்ந்திருக்க வேண்டிய 'சரவண பவன்'  ராஜகோபால் ஜோதிடத்தின் மீது வைத்திருந்த அளவற்ற வெறி காரணமாக ஒரு கொலையை செயல்படுத்தி தன் மீது எதிர்மறையான பிம்பம் மட்டுமே பதியும் அளவுக்கு ஆக்கிக்கொண்டு விட்டார்.

புன்னையாடி என்ற, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள, ஒரு கிராமத்தில் பிறந்தவர் ராஜகோபால்.  அவர் அப்பா ஒரு வெங்காய விற்பனையாளர்

1973ல் சென்னைக்கு வந்த ராஜகோபால்  கேகே நகரில் முதலில் துவக்கியது உணவகத்தை அல்ல, மளிகைக் கடையை.  அதற்குச் சில வருடங்கள் கழித்துதான் சரவண பவன் என்ற பெயரில் தனது முதல் உணவகத்தைத் தொடங்கினார்.

தீ தொடர்பான ஒரு தொழிலில் இறங்கினால் வெற்றி கிடைக்கும் என்று ஒரு ஜோதிடர் அவரிடம் கூறினார்.  இதை ஏற்றுதான் ஹோட்டல் வணிகத்தில் இறங்கினார் ராஜகோபால்.  அதில் அளவில்லாத வெற்றி கிடைத்தது.  ஜோதிடத்தை மிக மிக அதிகமாக நம்பத் தொடங்கினார்.

சுத்தமான முறையில் பரிமாறியது, பல வித உணவு வகைகள் எப்போது போனாலும் கிடைத்தது, எந்த சிற்றுண்டிக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட சைட் டிஷ்கள் என்று பல விதங்களில் சரவண பவன் வாடிக்கையாளர்களைக் கவர்ந்தது.  அதன் எந்த கிளையில் சாப்பிட்டாலும் சிற்றுண்டி அதே சுவை மற்றும் தரத்தில் இருப்பதை உறுதி செய்தார் ராஜகோபால்.  வெளியூர்களுக்குச் செல்பவர்கள் சரவணபவன் ஹோட்டல் இருக்கிறதா என்று தேடி சாப்பிடத் தொடங்கினார்கள்.

அதன் ஊழியர்களுக்கு சிறந்த ஊதியம் கொடுக்கப்பட்டது.  அதில் கணிசமான ஊதியத்தை ஊரிலிருந்த ஊழியர்களின் பெற்றோருக்கு அவர் நேரடியாகவே அனுப்ப, குடும்பமே ராஜகோபாலைக் கொண்டாடியது.  பென்ஷன், இலவச மருத்துவம், வீட்டுக் கடன் என்றெல்லாம் ஊழியர்களுக்கு அவர் வாரி வழங்கியது அவரது போட்டியாளர்களை வாயடைக்க வைத்தது.  முருகன் ஆலயங்களுக்கும் பெரும் நன்கொடை அளித்தார்.

இந்தியாவின் பெருநகரங்களில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் சரவணபவன் தன்னை விரிவாக்கிக் கொண்டது.  ஆக சரவண பவனில்  ஒரு கட்டத்தில் சுமார் ஐயாயிரம்  பேர் பணியாற்றினார்கள்.

ராஜகோபால்
ராஜகோபால்

அண்ணாச்சி என்று அழைக்கப்பட்ட ராஜகோபாலுக்கு வள்ளி, கிருத்திகா என்று இரண்டு மனைவிகள்.  தன் ஊழியரின் மனைவியாக இருந்த கிருத்திகாவைத்தான் ராஜகோபால் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

அடிக்கடி ஜோதிடம் பார்க்கும் பழக்கம் உண்டு ராஜகோபாலுக்கு.  ஒருதரம் அவரது  பார்வை சரவண பவன் ஊழியர் ஒருவரின் மகள் ஜீவஜோதியின் மீது விழுந்தது.  ஜீவஜோதியின் ஜாதகத்தை எப்படியோ பெற்று அதைத் தன் ஜோதிடரிடம் காட்டினார்.   அந்தப் பெண்ணைத்  திருமணம் செய்துகொண்டால் ராஜகோபாலின் செல்வமும் செல்வாக்கும் பல மடங்கு உயரும் என்று ஜோதிடர் கூறிவிட்டார்.   ஆனால் ஜீவஜோதி இதற்குள் சாந்தகுமார் என்பவரைக் காதலித்து திருமணமும் செய்து கொண்டு விட்டார்.

சாந்தகுமார் பள்ளி மாணவர்களுக்கு கணிதம் சொல்லிக் கொடுத்தவர்.  ஜீவஜோதியை எப்படியாவது  திருமணம் செய்து கொள்ள ராஜகோபால் தீர்மானித்த பிறகு, அந்தப் பெண் தன் பார்வையிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக சாந்தகுமாரையும் சரவணபவனின் ஊழியர் ஆக்கிக்கொண்டார்.

ஜோதிடர் கூறியது அவர் மனதில் மீண்டும் மீண்டும் சுழன்றது.  கிருத்திகாவைப் போலவே ஜீவஜோதியும்  தன் வழிக்கு வந்து விடுவார் என்று ராஜகோபால் நினைத்திருக்க,  அப்படி நடக்கவில்லை.  சாந்தகுமாருக்கும்  ஜீவஜோதிக்கும் பலவித அச்சுறுத்தல்களை அளித்தார் ராஜகோபால்.   ' விவாகரத்து செய்து விடுவதுதான் உங்களுக்கு நல்லது.  பெரும் பணம் தருகிறேன்.' என்ற அவரது  அச்சுறுத்தலுக்கு தம்பதியர் இருவருமே பணியவில்லை.  ஒரு கட்டத்தில் இதுகுறித்து காவல்துறையின் உதவியை நாடினார் சாந்தகுமார்.  ஆனால் செல்வாக்குமிக்க ராஜகோபாலுக்கு எதிராக காவல்துறை செயல்பட மறுத்தது.

கடும் கோபம் அடைந்தார் ராஜகோபால்.  ஆட்களை விட்டு சாந்தகுமார் கடத்தப்பட்டார். கொடைக்கானலில் திட்டமிட்டபடி கொலை நடந்தது. அவர் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டதாக மருத்துவர்கள் கூறினர்.   வழக்கு நீதிமன்றத்துக்கு வந்தது. ராஜகோபாலுக்கு ஜாமீன் கிடைத்தது.  ஆனால் அடுத்த இரண்டு வருடங்களில் அவர் ஜீவஜோதிக்கு சில லட்சங்களை அளித்து வழக்கை நீர்த்துப்போக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

ஜீவஜோதி
ஜீவஜோதி

ஜீவஜோதிக்கு ராஜகோபால் பலவித உதவிகள் செய்ததாகவும், நகை மற்றும் புடவைகள் வாங்கித் தந்ததாகவும் கூறப்பட்டது.  ஒருமுறை ஜீவஜோதி உடல்நலமின்றி மருத்துவமனையில் இருந்தபோது, அவரது மறுப்பையும் மீறி வேறொரு மருத்துவமனைக்கு ஜீவஜோதி மாற்றப்பட்டார்.  அங்கு அவருக்கு பலவித சோதனைகள் நடத்தப்பட்டன.

ராஜகோபாலுடன்  கொலைக்கு உடந்தையாக இருந்த எட்டு பேரும் பத்து வருட சிறை தண்டனை பெற்றனர்.  50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. உயர்நீதிமன்றத்துக்கு மேல் முறையீடு நடந்தது.  கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை சரியானதுதான் என்று கூறியதோடு சிறை தண்டனையை அதிகமாக்கியது உயர்நீதிமன்றம்.  ஆயுள் தண்டனை அளித்தது.  உச்ச நீதிமன்றமும் இந்தத் தீர்ப்பை உறுதி செய்தது.

2009 ஜூலை 9 அன்று தனது ஆயுள் தண்டனையை அனுபவிப்பதற்காக நீதிமன்றத்தில் சரணடைந்தார் ராஜகோபால். அடுத்த நான்கே நாட்களில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.  விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் ஜூலை 18, 2009 அன்று  காலமானார்.

'வெற்றி மீது ஆசை வைத்தேன்' என்ற பெயரில் ஒரு நூலை  எழுதியிருந்தார் ராஜகோபால்.  கூடவே அவர் ஜோதிடத்தின் மீதும் மாற்றான் மனைவி மீதும் ஆசை வைத்துவிட்டதினால்தான் சக மனிதர்களின் எண்ணத்தில் வீழ்ச்சி அடைந்தார்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com