கல்லாதது கடலளவு!

கல்லாதது கடலளவு!
Published on
 தொடர் – 10 
-நாராயணி சுப்ரமணியன் 

சுறா மீன்களுக்குக் குருத்தெலும்புதான் இருக்கிறது என்கிறார்களே, அதனால் என்ன பயன்? 

சுறாமீன்களுக்கு எலும்புகளே கிடையாது, அவற்றின் உடலுக்குள் குருத்தெலும்புகள் (Cartilage) மட்டுமே உண்டு. நமது மூக்கு, காது மடல் ஆகியவற்றில் காணப்படும் வளையக்கூடிய தன்மை கொண்டவை இந்த குருத்தெலும்புகள். இவற்றுக்கு வலு உண்டு என்றாலும் எலும்புகளைப் போல அடர்த்தி கிடையாது 

உடலில் குருத்தெலும்புகள் மட்டுமே இருப்பதால் சுறாக்களின் உடல் எடை குறைவாக இருக்கும். உடலை எளிதில் வளைந்து நெளிக்ககூடிய தன்மையும் கிடைக்கும். ஆற்றலை அதிகமாக விரயமாக்காமல் சுறாமீன்கள் நீந்துவதற்கும், கடல்நீரில் மிதப்பதற்கும், சிறு மீன்களை விரட்டி துரத்தி வேட்டையாடவும் இந்த குருத்தெலும்புகள் உதவுகின்றன. 

மீன்களின் வயதை எப்படி கண்டுபிடிப்பார்கள்? 

மீன்களின் செதில்கள் மூலம் சிலநேரம் வயது கண்டுபிடிக்கப்படுகிறது. மரங்களின் வளையங்களை வைத்து வயதைக் கணிப்பதுபோல, செதில்களில் உள்ள வளையங்களை வைத்து கணக்குகள் போட்டு விஞ்ஞானிகள் வயதைக் கண்டுபிடிக்கிறார்கள். 

நம்முடைய காதுக்குள்ளே குட்டியூண்டு எலும்புகள் இருப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். மீன்களின் காதுக்குள்ளும் Otolith என்ற எலும்புகள் உண்டு. இவற்றை எடுத்து தீவிரமாக ஆராய்வதன்மூலம் மீன்களின் வயதைக் கண்டுபிடிக்கலாம். சில நேரங்களில் முதுகெலும்புகள், துடுப்புகளில் உள்ள முட்கள் போன்ற உறுப்புகளை ஆராய்வதன்மூலமும் வயது கணிக்கப்படுகிறது. 

இப்போதைக்கு கடலுக்கு இருக்கும் பெரிய அச்சுறுத்தல்கள் என்ன? 

காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மாசுபாடு, பெரிய கப்பல்களின் போக்குவரத்தால் ஏற்படும் பாதிப்புகள், ப்ளாஸ்டிக்/நெகிழி குப்பைகள், நிலத்திலிருந்து வரும் கழிவுநீர் மற்றும் உரம்/பூச்சிக்கொல்லிகள் கலந்த நீர் ஆகியவை கடல் சூழலுக்குப் பெரிய அச்சுறுத்தல்களாக இருக்கின்றன 

மீன்களைப் பொறுத்தவரை தேவைக்கதிகமாக மீன்பிடிக்கும் ராட்சத வலைகள், தேவையற்ற மீன்களைப் பிடித்துவிட்டு கடலிலேயே கொட்டுவது ஆகியவை பெரிய அச்சுறுத்தல்களாக இருக்கின்றன. கப்பல்களின் இரைச்சல் திமிங்கிலங்களை பாதிக்கிறது. பெரிய வலைகளில் மாட்டி சுறாக்கள் மற்றும் கடலாமைகள் இறக்கின்றன. 

சமீபத்தில் உலகமெங்கும் பரவிவரும் ஆழ்கடல் கனிம சுரங்கங்கள் புதிய அச்சுறுத்தலாக மாறியிருக்கின்றன
(நிறைந்தது) 

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com