முத்துக்கள் மூன்று!

முத்துக்கள் மூன்று!
Published on
தொகுப்பு: பத்மினி பட்டாபிராமன்
ஒரு நாள் சப் – இன்ஸ்பெக்டர்

முதல்வன் திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன் ஒரு நாள் முதல்வராக நடித்தது போல ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உலக மகளிர் தினத்தை ஒட்டி புதுச்சேரியில், அரசு கல்லூரி மாணவி ஒருவருக்கு, "ஒரு நாள் எஸ்.ஐ."யாக கவுரவ பணி வழங்கப்பட்டது. புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லுாரியின் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு மாணவி நிவேதா, முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில், காலை 8:00 மணிக்கு, எஸ்.ஐ., இருக்கையில் அமர வைக்கப்பட்டு, நாள் முழுதும் பணியாற்றினார். முதல் பணியாக, போலீஸ் நிலையத்தில் 'ரோல் கால்' நடத்தினார்.
போலீசார் எந்தெந்த இடத்தில் பணி செய்ய வேண்டும் என, 'டியூட்டி' வழங்கினார்.காவல் துறை வாகனத்தில் ரோந்து சென்று, போலீசாரின் பணிகளை ஆய்வு செய்தார். பொதுமக்கள் பங்கேற்ற விழாக்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டார். பின், ஸ்டேஷனுக்கு வந்து, புகார்கள் மீது விசாரணை நடத்தினார்.
பாரதிதாசன் கல்லுாரியில் நடந்த மகளிர் தின விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். ஸ்டேஷனில் நடந்த போலீஸ் – பொதுமக்கள் நல்லுறவு கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

மாடல் மங்கையான பலூன் விற்ற பெண்

ராஜஸ்தானைச் சேர்ந்த இளம் பெண்ணான கிஸ்பு என்பவர், கேரளாவில் பலூன் விற்று பிழைத்து வருபவர். அண்டலூர் காவு திருவிழாவின் போது,இவரை அர்ஜுன் கிருஷ்ணன் என்ற புகைப்படக் கலைஞர், புகைப்படம் எடுத்துள்ளார். படத்தைப் பார்த்து தாய்க்கும் மகளுக்கும் மகிழ்ச்சி. மேலும், அர்ஜுன் இந்த படத்தை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்தார். இதற்கு நல்ல வரவேற்பு, இருந்தது.

அவரது நண்பர் ஷ்ரேயாஸ் என்பவருடன், கிஸ்புவை வைத்து தனியாக போட்டோஷூட் ஒன்றையும் நடத்தத் திட்டமிட்டு, கிஸ்புவின் குடும்பத்தில் பேசி, சம்மதமும் வாங்கி விட்டனர்.

ரம்யா என்ற ஸ்டைலிஸ்ட் உதவியுடன், கிஸ்புவை மாடர்னாக ஒரு மாடலாக மாற்றியிருக்கின்றனர்.  பலூன் வியாபாரியாக இருந்த பெண்ணின் 'Makeover' புகைப்படங்கள், இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

விவசாயம் செய்யும் பட்டதாரி ஆசிரியை

15 ஆண்டுகளாக பாரம்பரிய நெல் ரகங்களை உற்பத்தி செய்து, விளைவித்து அரசு விதைப் பண்ணைக்கு வழங்கி வருகிறார் திருப்பாலையைச் சேர்ந்த  ஆசிரியை பிரசன்னா. இவர் மதுரை மாவட்டத்திலேயே, முதல் முறையாக வீரபாண்டியில் இரண்டரை ஏக்கர் நிலத்தில் பாரம்பரிய ரகமான "மேம்படுத்தப்பட்ட நாட்டு வெள்ளைப் பொன்னி'" நெல்லை பயிரிட்டு சாதித்துள்ளார்.

வரப்பு வெட்டுதல், நாற்று நடுதல், களை எடுத்தல், உரம் இடுதல், வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவது என விவசாயப் பணிகள் அனைத்தையும் நன்கறிந்தவர்.

திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல் எடுத்ததற்காக தமிழக அரசு, 2016 ல் இவருக்கு விருது வழங்கியதோடு, ரூ.5 லட்சம் பரிசுத் தொகையும் அளித்து சிறப்பித்திருக்கிறது.

கணவரின் குடும்பம்  விவசாயத்தில் ஈடுபட்டிருப்பதால்.  இவரும் ஆர்வத்துடன், வகுப்பு நேரம் போக  மீதி  நேரங்களில் விவசாயியாக மாறி விடுகிறார்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com