‘ஜீவி’ அஸ்வினி!
நேர்காணல் : ராகவ் குமார்
"அப்பா சிண்டிகேட் பேங்கில் உயர் பதவியில் இருக்கிறார். அம்மா
சுஜாதா சந்திரசேகர் கர்நாடக அரசின் கெசடட் அதிகாரியாகப் பணியாற்றியவர். சினிமாவிற்கும் எங்கள் குடும்பத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. நம்ம வீட்டிலிருந்து, சினிமாவில் நடிக்கப் போவதா? என்று முதலில் மறுத்தவர்கள், பின்பு ஏற்றுக்கொண்டார்கள்" என்கிறார் 'ஜீவி 1' மற்றும் 'ஜீவி 2' ஹீரோயினாக நடித்துள்ள அஸ்வினி. பெங்களூருவில் என்ஜினீயரிங் படித்தவர். பெண் சுதந்திரம், அரசியல் எனப் பல விஷயங்களைப் பேசுகிறார்.
அம்மா?
அம்மா கர்நாடக கவர்ன்மெண்ட்டில் கெசடட் பதவியில் இருக்கிறார். வேலை, குடும்பம் என இரண்டு தண்டவாளங்களிலும் சரியாகப் பயணிப்பவர். பணியின் அழுத்தத்தைக் குடும்பத்திலும், குடும்பத்தின் சுமையைப் பணியிலும் காட்டாதவர். அம்மாவின் ஆக்கப்பூர்வமான செயலுக்குப்பின், அப்பா உறுதுணையாக இருந்து வருகிறார். அம்மாவின் வெற்றிக்குப் பின்னால் அப்பா இருக்கிறார்.
ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு ஆண் இருப்பார். சரியா…?
இருந்தால் இன்னமும் ஜொலிக்க முடியும். பெண்கள் இயல்பிலேயே தன்னம்பிக்கைக் கொண்டவர்கள். இவர்களின் தன்னம்பிக்கையை வெளிக்கொணர்வதற்கும், ஒரு moral சப்போர்ட்டாக ஆண்கள் இருந்தால், பெண்கள் இன்னமும் பல சாதனைகள் புரிவார்கள்.
நம் நாட்டின் எழுபத்தைந்தாவது சுதந்திர தின விழா கொண்டாடும் இந்தச் சூழலில் பெண் சுதந்திரம் பற்றி…?
பெண்களுக்கு ஓரளவு சுதந்திரம் கிடைத்துள்ளது. இன்னமும் பரவலாகக் கிடைக்கவில்லை என்பது என் கருத்து. அதாவது, நகரத்து நடுத்தரக் குடும்பப் பெண்கள் சுயமாக எடுக்கும் முடிவுகளைப் போல கிராமப்புற ஏழைப் பெண்களால் இன்னமும் எடுக்க முடிவதில்லை. இந்த நிலை மாற வேண்டும்.
பிடித்தப் பெண் தலைவர்?
ஜெயலலிதா அம்மாதான்.
காரணம்?
நான் சென்னைக்கு வந்த புதிதில் இரவு 2 மணிக்கு நிறைய இளம் பெண்கள் நைட் ஷோ சினிமா பார்த்துவிட்டு வருவதைப் பார்த்து இருக்கிறேன். தென் மாநிலங்கள் எங்கேயும் இப்படி நடு இரவில் பெண்கள் வருவதைப் பார்த்தது இல்லை. தமிழ்நாட்டில் இது சாத்தியப்பட்டு இருக்கிறது என்றால், ஜெயலலிதா அம்மா முதல்வராக இருந்ததுதான் காரணம் என்பதை உறுதியாகச் சொல்வேன்.
இன்றைய தலைவர்களுள்…?
பிரதமர் மோடிதான். கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு, நமது நாட்டை மெல்ல மெல்ல மீட்டுக் கொண்டுவருவதற்குப் பல நிர்வாகத் திறமைகளைக் கையாண்டுயுள்ளார். கோவிட் பிரச்னைக்குப் பின்பு பல உலக நாடுகள் இன்னமும் மீளாமல் இருக்க, நமது பிரதமரின் செயல் திறனால் நம்மால் சமாளிக்க முடிகிறது.
தெளிவாப் பேசுறீங்களே… எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் ஐடியா?
இப்போதைக்கு சினிமா மட்டும்தான். எதிர்காலத்தில்… இப்போ சொல்ல முடியாது.
'ஜீவி' படத்தில் கண் தெரியாமல் நடித்தது – பயிற்சி எடுத்தீங்களா?
நிறைய பேரை அப்சர்வ் செய்தேன். டைரக்டர் சொல்லிக்கொடுத்தபடி நடித்தேன்.
கனவு கதாபாத்திரம்?
பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடிக்க ஆசை.
உங்கள் கனவு நிறைவேற வாழ்த்துகள்.