திருமங்கை ஆழ்வார்!

திருமங்கை ஆழ்வார்!
Published on
பகுதி -12
-ரேவதி பாலு

ன்னிரு ஆழ்வார்களில் மிகச் சிறந்தவராகக் கருதப்படுகிறவர்  திருமங்கை ஆழ்வார். இவர் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் சோழ நாட்டில் உள்ள திருக்குரையலூர் என்னும் ஊரில் ஆலி, வல்லிதிரு ஆகியோருக்கு மகனாக அவதரித்தார். இவர் திருமாலின் கையிலுள்ள சார்ங்கம் என்னும் வில்லின் அம்சமாகக் கருதப்படுகிறார். இவர் அரசகுல மரபிலான முத்தரையர் வம்சத்தில் பிறந்தவர்.  இவர் தந்தை சோழ மன்னருக்கு சேனாதிபதியாக இருந்தார்.  இவர் பிறக்கும்போது நீல நிறத்தில் இருந்ததால் இவர் பெற்றோர் இவருக்கு நீலன் என்று பெயரிட்டனர். இளமையிலேயே வீரத்திலும், பக்தியிலும் சிறந்து விளங்கினார்.  இவருடைய வீரத்தைப் பார்த்த சோழ மன்னன் படைத்தலைவனாக இருந்த நீலனை திருமங்கை என்னும் நாட்டிற்கு சிற்றரசனாக்கினான். இவர் வீரமாக போர் புரிந்து எதிரிகளை வெற்றிகொண்டதால் பரகாலன் (எதிரிகளின் எமன்) என்றும், திருமங்கையை ஆண்டதால் திருமங்கை மன்னன் என்றும் அழைக்கப்பட்டார்.

இவர் குமுதவல்லி என்னும் மங்கை மீது காதல் வயப்பட்டார்.  அவளைத் திருமணம் செய்துகொள்ள அவள் போட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டார். அதில் முக்கியமானது அவர் தன் வாழ்க்கையையே எம்பெருமானின் சேவைக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பதாகும். அவள் சொல்படி அவர் தன் நெற்றியில் திருமண் இட்டுக்கொண்டு தினமும் எம்பெருமானின் சேவையில் ஈடுபட்டார். திருக்கோவில் கைங்கர்யங்களை தவறாது செய்துவந்தார். அதைத்தவிர தினமும் 1008 வைணவ பக்தர்களுக்கு அமுது செய்விக்க வேண்டும் என்றாள் குமுதவல்லி.

எல்லாவற்றிற்கும் உட்பட்டு அவளைத் திருமணம் செய்துகொண்ட திருமங்கை மன்னன் அவள் விருப்பப்படி தினமும் அடியார்களுக்கு அமுது படைத்தார்.  இதனால் அவன் தன் பெரும் செல்வங்களை இழக்க நேர்ந்தது. அடியவர்களுக்கு அமுது படைக்க செல்வம் இல்லாததால் அதைக் களவாடியாவது அடியவர்களுக்கு அன்னதானம் செய்ய எண்ணினார்.  செல்வத்தை இழந்ததனால் அரசருக்கு கப்பம் கட்டவும் இயலவில்லை. அவரது பெரும் கடன் சுமையைத் தீர்க்கும் விதத்தில் பெருமாள் அவர் கனவில் தோன்றி தான் பொருளுதவி செய்வதாகக் கூறினார்.  அவ்வாறே பெருமாள் சொன்ன இடத்தில் சென்று தோண்டியதில் பெரும் புதையல் ஒன்று கிடைத்தது. அதில் கப்பம் கட்டிவிட்டு மீதி செல்வத்தை அடியவர்களுக்கு தினமும் அமுது படைக்க செலவிட்டார். நாளடைவில் அந்தச் செல்வமும் தீர்ந்துபோனது. திரும்பவும் பணக்காரர்களிடம் கொள்ளையடித்து பணம் சம்பாதித்து அடியவர்களுக்கு அன்னதானம் செய்தார்.

ரு நாள் பெருமாள் மணக்கோலத்தில் ஸ்ரீ லட்சுமி தேவியுடன் உலா வந்துக்கொண்டிருந்தார். திருமங்கை மன்னன் அவரிடம் தன் படை யினருடன் சென்று மிரட்டி அவர்களது நகைகளை பெற்றுக்கொண்டார். ஆனால், பெருமாளின் காலில் இருந்த மிஞ்சியை மட்டும் அவரால் கழட்ட இயலவில்லை.  பெருமாளிடம் கழற்றிக் கொடுக்கும்படி கேட்டதற்கு அவர், "என்னால் முடியவில்லை. முடிந்தால் நீயே கழற்றிக்கொள்!" என்றார்.  திருமங்கை மன்னனும் கீழே குனிந்து பெருமாளின் பாதங்களை பற்றிக்கொண்டு கால் விரலிலுள்ள மிஞ்சியை தன் பற்களால் கடித்து இழுத்தார். அவர் கீழே விழுந்ததையே சரணாகதியாக ஏற்றுக்கொண்டு பெருமாள் மன்னனின் காதுகளில் நாராயண மந்திரத்தை உபதேசித்தார். வந்திருப்பது நாராயணன் என்பதை அறிந்து கொண்ட மன்னன் திரும்பவும் கீழே வீழ்ந்து பணிந்தான், பெருமாளை சரணடைந்தான்.  அன்றிலிருந்து மக்கள் அவரை திருமங்கை ஆழ்வார் என அழைக்க ஆரம்பித்தனர். இந்த உபதேசம் பெற்ற பிறகு திருமங்கை ஆழ்வார் திவ்ய பிரபந்த நூலில் பாட்டுக்களை எழுத ஆரம்பித்தார். நல்ல கவிகளை இயற்றியதால் 'நற்கவிபெருமாள்' என்னும் சிறப்புப் பெயரும் இவருக்கு உண்டு.

நாராயணா என்னும் நாமத்தின் சிறப்பை தான் எப்படி கண்டுகொண்டேன் என்பது பற்றி திருமங்கை ஆழ்வார் விளக்கும் விதமே தனி அழகு. இது பெரிய திருமொழியில் வருகிறது.

குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார்
படுதுயர் ஆயின எல்லாம்
நிலம் தரும் செய்யும்; நீள் விசும்பு அருளும்;
அருளொடு பெரு நிலம் அளிக்கும்;
வலம் தரும்; மற்றும் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்;
நலம் தரும் சொல்லை நான்
கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்

நாராயணா என்னும் நாமத்தை ஜெபிப்பதன் மூலம் உயர்ந்த மேன்மை, செல்வம், கிடைக்கும். நம் துயர்களைத் துடைக்கும். நிலம் தரும். இறைவன் அருளைத் தரும். வீடுபேறு தரும். பலம் தரும், தாயினும் மிஞ்சிய அன்பும் தரும்அத்தகைய சிறப்புடைய சொல், நாராயணா என்னும் நாமம் என்பதை கண்டுகொண்டேன்.

திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி, குருந்தாண்டகம், நெடுந்தாண்டகம், சிறிய திருமடல், பெரிய திருமடல் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். இவர் மொத்தத்தில் 1137 பாசுரங்களை இயற்றிருக்கிறார்.  இவர் 108 திவ்யதேசங்களுக்கும் சென்று பெருமாளை வழிப்பட்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. 46 கோயில்களை தனியாகவும் பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து 36 கோயில்களையும் மங்களாசாஸனம் செய்துள்ளார். 12 ஆழ்வார்களில் இவரே அதிக கோயில்களை மங்களா சாஸனம் செய்தவர் என்னும் பெருமையைப் பெருகிறார். இவரே ஆழ்வார்களில் கடைசி ஆழ்வாராவர்.

சமயக்குரவர் நால்வரில் திருஞானசம்பந்தர், திருமங்கை ஆழ்வாரின் சமகாலத்தவர். இவர்கள் இருவரும் சந்தித்து இறைவனைப் பற்றி அளவளாவி மகிழ்ந்திருக்கிறார்கள். அநேக வருடங்கள் இறைப் பணியாற்றி, இறுதியில் திருமங்கை ஆழ்வார் சித்தியடைந்த இடம் திருக்குறுங்குடி.

முடிவுரை

முதல் மூன்று ஆழ்வார்கள் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் குறித்து படித்தபோது, அது என்னை வியப்பில் ஆழ்த்த, ஒரு கட்டுரை மங்கையர் மலரில் எழுதினேன்.  ஒரே வருடத்தில் ஒரே மாதத்தில் அடுத்தடுத்த நாட்களில் பிறந்த  பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் அவர்கள் மூவரையும் சந்திக்க வைக்க இறைவன் திருவுளம் கொண்ட சம்பவம்தான் அது. 'ஒருவர் படுக்கலாம், இருவர் உட்காரலாம், மூவர் நிற்கலாம்' என்னும் நெருக்கடியான இடத்தில்,  இருட்டில் இறைவனும் வந்து அவர்களை நெருக்கி நின்றுகொண்டு அவர்கள் தன்னைப் பற்றிப் பாடிய பாடல்களைக் கேட்டு மகிழ்ந்தான் என்பதுதான் அந்த சம்பவம்.

அடுத்தது தொண்டரடிப்பொடியாழ்வார் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் குறித்து ஒரு கட்டுரை. தேவதேவி என்னும் கணிகைக்குக் கொடுக்க பணம் இல்லாமல் தவித்த விப்ரநாராயணனுக்கு பெருமாளே தன் சன்னதியிலிருந்த தங்க வட்டிலைக் கொடுத்தனுப்பி அவரை ஆட்கொண்ட சம்பவம்.

மிகத் தற்செயலாக எழுதப்பட்ட இந்த இரண்டு கட்டுரைகளும் பிரசுரமானதும், மங்கையர் மலர் ஆசிரியர் என்னைக் கூப்பிட்டு, "ஆழ்வார்கள் 12 பேர்கள்தானே? மிச்சம் உள்ள எட்டு பேர்களைப் பற்றியும் எழுதி முடித்து விடுங்களேன்?" என்று சொன்னதும் எனக்கு ஒன்றும் புரியவில்லை.  மகான்களைப் பற்றி எழுதுவது சாமானியமான காரியமா என்று பிரமித்துப் போனேன். அப்போது ஷீரடி ஸ்ரீ சாயிபாபா தன் சத்சரித்திரத்தை எழுத முனைந்த ஹேமத்பந்துக்குச் சொன்னது நினைவிற்கு வந்தது. "நீ குறிப்புகளையெல்லாம் எடுத்து வைத்துக்கொள். நானே உன் கைகளில் புகுந்து என் சரிதத்தை எழுதி என் பக்தர்களின் ஆவலை பூர்த்தி செய்வேன்" என்றார் பாபா.

மகான்களின் சரிதத்தை எழுதும்போது அவர்களே நம் கைகளில் புகுந்து தங்கள் சரிதத்தை எழுதிக்கொள்வார்கள் என்னும் புரிதலுடன் பயபக்தியுடன் விஷயங்களைச் சேகரித்து 12 ஆழ்வார்களைப் பற்றியும் எழுதி முடித்தாகி விட்டது.  இதில் நம்மாழ்வாரின் சரிதமும் மதுரகவி ஆழ்வாரின் சரிதமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தது. அதேபோல்தான் பெரியாழ்வார், ஆண்டாள் நாச்சியார் சரிதங்கள். தன் சீடனுக்கு அவமதிப்பு ஏற்பட்டதால் இனிமேல் அந்த ஊரில் இருக்கக்கூடாது என்னும் முடிவுடன் கிளம்பும் திருமழிசையாழ்வார், "நீயும் உன் பைந்நாகப் பையை (ஆதிசேஷனை) சுருட்டிக்கொள். கிளம்பலாம் வா! "என்று பெருமாளுக்கே கட்டளையிட, பெருமாள் அவர் சொல்படி ஆதிசேஷனை ஒரு பையைப் போல சுருட்டிக்கொண்டு அவர் பின்னால் சென்றார். அரசன் மன்னிப்பு கேட்டு, அந்த பிரச்னை தீர்ந்ததும், திரும்பவும் "நீ உன் நாகப் பையில் படுத்துக் கொள்!" என்று கட்டளையிட, அதை ஏற்று பெருமாள் திரும்பவும் கோயிலுக்கு வந்து ஆதிசேஷன் மேல் படுத்து சயன திருக்கோலம் அருளினார். இதுபோன்று ஆழ்வார்கள் வாழ்வில் நடக்கும் எல்லா நிகழ்வுகளுமே பிரமிப்பும் பரவசமும் ஊட்டுவதாக அமைந்துள்ளன.

என்னை ஊக்குவித்து ஆழ்வார்களின் திவ்ய சரிதத்தை எழுத வைத்த மங்கையர்மலர் ஆசிரியருக்கு கோடானுகோடி நன்றிகள்.
(நிறைந்தது)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com