
எருக்கன் செடிகளில் பல வகைகள் உண்டு. எருக்கம் பூ, செடி என அனைத்தின் பாகங்களிலும் ஏதேனும் மருத்துவப் பயன்பாடு நிச்சயம் உள்ளது. மருத்துவப் பயன்கள் மட்டுமின்றி, இறை வழிபாட்டிற்கும் சிறந்த மலராக எருக்கன் பூ திகழ்கின்றது.
'அர்க்க புஷ்பம்' என சமஸ்கிருதத்தில் அழைக்கப்படும் எருக்கம் பூ, விநாயகரை அர்ச்சிக்க உகந்த மலர். சூரியனுக்கு, 'அர்க்கன்' என்று பெயருண்டு. சூரியனுக்கு உகந்த எருக்கம் பூவை விநாயகருக்கு அணிவித்து வணங்கும்போது, விக்னங்கள் நீங்குவதுடன் சூரியனின் அருளால் ஆத்ம பலமும், ஆரோக்கியமும் உண்டாகும். அனைவரும் எளிதாய் வணங்கும் விநாயகரை சாதாரணமாய் பூத்துக் கிடக்கும் எருக்கம் மலரில் வழிபட்டாலே அனைத்து அருளையும் வழங்குவார்.
– பொ.பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி
சாத்தூர் அருகே போத்திரெட்டிபட்டியில் உள்ள, 'சுட்ட விநாயகர்' கோயிலில் தீப்பெட்டி தொழிலில் வேலை செய்யும் தொழிலாளர்கள், தினம் ஒரு தீக்குச்சி வீதம் கொளுத்தி வழிபாடு செய்து, எரிந்த தீக்குச்சியை வீட்டில் சேமித்து வைக்கிறார்கள். காரணம், விபத்து நேராமல் இந்த விநாயகர் காப்பார் என்பது அவர்களது நம்பிக்கை.
– ஆர்.பிரசன்னா, ஸ்ரீரங்கம்