சுவாமியே சரணம் ஐயப்பா!

சுவாமியே சரணம் ஐயப்பா!
Published on

ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி

பதினெட்டுப் படி :
பரிமலை ஐயப்பன் சன்னிதானத்திற்கு முன்புறமுள்ள பதினெட்டுப் படிகள் மிகவும் புனிதம் வாய்ந்தவை. மாலை அணிந்து, கடுமையான விரதமிருந்து, இருமுடி கட்டியவர்கள் மட்டுமே இந்தப் படிகளில் ஏறிச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

சபரிமலையில் பதினெட்டு தேவதைகளே பதினெட்டுப் படிகளாக இருப்பதாக ஐதீகம். இந்தப் படிகளைக் கடந்து செல்லும் உண்மையான ஐயப்ப பக்தர்களின் பாவங்களை இந்த தேவதைகள் நீக்குகின்றனர். பதினெட்டுப் படிகளும் மகிமை வாய்ந்தவை. அவை சில தத்துவ உட்பொருட்களையும் மறைவாக உணர்த்துகின்றன.

பூதங்கள் ஐந்து, பொறிகள் ஐந்து, புலன்கள் ஐந்து ஆகிய பதினைந்து ஆன்ம தத்துவங்களின் துணையோடு, ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மயக்கங்களைக் கடப்பது பக்தி சாதனத்தின் ஒரு நிலையாகும். பதினெட்டுப் படிகளும் இதையே உணர்த்துகின்றன.

பரிமலையின் பதினெட்டுப் படிகளும் பதினெட்டு புராணங்கள் ஆகவும், ஒவ்வொரு படியையும் ஒரு மலை தெய்வமாகவும் கருதி, படி பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற பூஜை வேறு எந்தக் கோயில்களிலும் இல்லை. சபரிமலை, பொன்னம்பலமேடு, கவுண்டல் மலை, நாக மலை, சுந்தர மலை, சிற்றம்பலமேடு, கல்கி மலை, மாதங்க மலை, மைலாடும் மேடு, ஸ்ரீபாத மலை, தேவர் மலை, நீலக்கல் மலை, தலப்பாளை மலை, நீலி மலை, கரிமலை, புதுச்சேரி, களைகட்டி, இஞ்சிப்பாறை ஆகிய பதினெட்டு மலை தேவதைகளை வழிபடுவதற்காகத்தான் படி பூஜையை பக்தர்கள் நடத்துகிறார்கள்.

மகிமைமிகு பதினெட்டுப் படிகளிலும், பதினெட்டு திருநாமங்களுடன் மணிகண்டன் எழுந்தருளியிருக்கிறார் என்ற ஐதீகமும் உண்டு.

1.குளத்தூர்பாலன், 2.ஆரியங்காவுஆனந்தரூபன், 3.கரிமேலிஏழைப் பங்காளன், 4.ஐந்து மலைத்தகன், 5.ஐங்கரச் சகோதரன், 6.கலியுகவரதன், 7.கருணாகர தேவன், 8.சத்திய மரிபாலர், 9.சற்குணசீலன், 10.சபரிமலைவாசன், 11.வீரமணிகண்டன், 12.விண்ணகர் தேவன், 13.விஷ்ணு மோகினிபாலன், 14.சாந்தசொரூபன், 15.சற்குணநாதன், 16.நற்குணக் கொழுந்தன், 17.உள்ளத்தமர்வான், 18.ஐயப்பன். இந்தப் பதினெட்டு திருநாமங்களையும் மனதில் தியானித்து பதினெட்டுப் படிகளைக் கடந்து ஐயப்பனை தரிசித்தால் மிகுந்த பலன் உண்டு.

தங்க அங்கியும் திருவாபரணப் பெட்டியும் :

வ்வொரு ஆண்டும் நவம்பர் 16ம் தேதி முதல் ஜனவரி 15ம் நாள் வரை சபரிமலை ஐயப்பன் சன்னிதானம் முக்கியத் திருவிழா காண்கிறது. இந்தக் காலத்தில் மண்டல பூஜையும், மகர விளக்கு திருவிழாவும் நடைபெறும். மண்டல காலத்தில் 41 நாட்கள் மதியம் நடக்கும் உச்சி பூஜையில் மணிகண்ட சுவாமிக்கு தங்க அங்கி அணிவிக்கப்படும். அந்த அங்கி 420 பவுன் எடை கொண்டது. திருவிதாங்கூர் மகாராஜா சித்திரை திருநாள் பாலராமவர்மா 1973ல் சுவாமிக்குக் காணிக்கையாகக் கொடுத்த அங்கி இதுவாகும்.

சபரிமலைவாசன் ஸ்ரீஐயப்ப சுவாமிக்குக் கொண்டு செல்லும் திருவாபரணப் பெட்டியில் கீழ்க்கண்ட நகைகள் இருக்கும்.

திருமுகம், பிரபபிரபா, சத்யகமார், இரண்டு தங்க யானைகள், தங்க புலி, நவரத்தின மோதிரம், வாள், அரைமணி, சரப்பொலி மாலை, மணிகண்ட மாலை, வில்லுத மாலை, எரிக்கல் பூமாலை, தங்கக்குடம், நெற்றிப்பட்டம் மற்றும் தங்கப் பாத்திரங்கள். ஐயனுக்குரிய இந்தப் புனிதமான ஆபரணங்கள் அடங்கிய திருவாபரணப் பெட்டி உத்ஸவம் சபரிமலையில் வெகு பிரசித்தம்.

அச்சன்கோயில் ஐயப்பன் :
ச்சன்கோயிலில் ஐயப்பன் நெற்றியில் திருமண் இட்டு வாளுடன் வனராஜாவாகக் காட்சி தருகிறார். தேரோட்டம் நடைபெறும் ஒரே ஐயப்பன் கோயில் இது ஒன்றுதான். திமிலை, மத்தளம், கொம்பு, சங்கு, தாளம் ஆகிய ஐந்தும் ஐயப்பனுக்கு உகந்த பஞ்ச வாத்தியங்களாகும். அச்சன்கோயிலில், ஐயப்பன் மணிகண்ட சாஸ்தாவாக வணங்கப்படுகிறார். இங்கு ஐயப்பன் பூர்ண புஷ்கலாவுடன் அருள்பாலிக்கிறார். இங்குள்ள பதினெட்டு படிகளின் இருபுறமும் விநாயகரும் முருகனும் பாதுகாவலராக உள்ளனர்.

ஐயப்ப பூஜை :
சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு அதிகாலை பூஜையின்போது அஷ்டாபிஷேகம் நடத்தப்படும். அதாவது விபூதி, பால், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், பன்னீர், தூயநீர் ஆகிய எட்டு பொருட்களால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு திருமதுரம் என்னும் பிரசாதம் நைவேத்தியம் செய்யப்படும். இதை பழம், தேன், சர்க்கரை சேர்த்து தயாரிப்பர். பின்னர் நெய்யபிஷேகம் நடக்கும். நண்பகலுக்கு முன் 15 தீபாராதனைகள் நடைபெறும். அந்த தீபாராதனையின்போது பச்சரிசி சாதம் படைக்கப்படும்.

மதிய பூஜையின்போது இடித்துப் பிழிந்தெடுத்த தேங்காய்ப்பாலுடன் கதலிப்பழம், சர்க்கரை, சம்பா பச்சரிசி, சுக்கு, நெய் ஆகியவை சேர்த்து பாயசம் தயாரிக்கப்படும். இதை மதிய உணவாக ஏற்கிறார் ஐயப்பன். 'மகா நைவேத்தியம்' என்று இதற்குப் பெயர். இரவு பூஜையின்போது அப்பம், பானகம், பச்சரிசி சாதம் ஆகியவை நைவேத்தியமாகச் செய்வர்.

சாஸ்தா தரிசனம் :
கொல்லம் அருகேயுள்ள அச்சன்கோயிலில் ஐயப்பன் மிகப்பெரிய திருவுருவத்தோடு, இடக்காலை மடித்து அமர்ந்த கோலத்தில் இடக்கரத்தை ஊன்றி, வலக்காலை நிமிர்த்தி, அந்த முழங்காலில் படிந்த வலக்கரத்தில் கதாயுதத்தைத் தாங்கி தலைக்கேசங்கள் சுருளாகத் தோளோடு இழைய உச்சியில் கொண்டையும், மார்பில் முப்புரி நூலும், நெற்றியில் திருநீறும், கழுத்தில் பதக்கமும், தோள்களில் கோதண்டராமப் பதக்கமும் விளங்கக் காட்சி தரும் திருக்கோலத்தினை கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகில் உள்ள தலத்தில் தரிசிக்கலாம்.

l செங்கோட்டையிலிருந்து ஐம்பது கி.மீ. தூரத்தில் உள்ள குளத்துப்புழை திருக்கோயிலில் பாலகனாக அருள்பாலிக்கிறார்.

l சீர்காழி தென்பாதித் தெருவில் உள்ள திருக்கோயிலில் சாஸ்தா யானை வாகனத்தில் பூரணை, புஷ்கலை சமேதராக தரிசனம் தருகிறார்.

l திருச்சியிலிருந்து பெரம்பலூர் செல்லும் வழியில் சிறுகனூர் அருகில் உள்ள திருப்பட்டூர் என்ற கிராமத்தில் மகாசாஸ்தாவாக அருள்புரியும் அவரது கையில், சுவடி இருப்பதைக் காணலாம்.

l காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் இருக்கும் சாஸ்தாவின் கையில் பூச்செண்டு இருக்கும். இத்திருக்கோயிலில் பூரணை, புஷ்கலா சமேதராகக் காட்சி தருகிறார்.

l எரிமேலியில் பந்தள மன்னன் ராஜசேகர பாண்டியன் கட்டிய தர்மசாஸ்தா கோயில் உள்ளது. இத்திருக்கோயிலில் வேட்டைக்குச் செல்ல வில், அம்பு ஏந்தி நின்ற திருவுருவக் காட்சியை தரிசிக்கலாம்.

l அச்சன்கோயிலில் அருள்பாலிக்கும் சுவாமி ஐயப்பன் இரண்டு கால்களும் குத்திட்டிருக்க யோகப்பட்டை முதுகையும், கால்களையும் சுற்றியிருக்க வலக்காலை மடித்துக் கொண்டிருப்பதுடன் வலக்கையில் வாள் வைத்திருக்கிறார். பூரணை, புஷ்கலையுடன் குதிரை பீடத்தில் அமர்ந்திருக்கிறார்.

l செங்கோட்டை புனலூர் பாதையில் உள்ள ஆரியங்காவு திருத்தலத்தில் வலக்காலைத் தொங்கவிட்டு, இடக்காலைக் குத்திட்டு வலக்கையில் நீலத் தாமரை ஏந்தி, கிரீடமணிந்து யானை மேல் அமர்ந்திருக்கிறார் ஐயப்பன். இத்தலத்தில் ஐயப்பன் பூரணை, புஷ்கலை தேவியருடன் அருள்பாலிக்கிறார்.

l சிதம்பரம் நடராசர் ஆலயத்தின் எட்டுத் திசைகளிலும் சாஸ்தாவின் எட்டு அவதாரங்களைப் பிரதிஷ்டை செய்துள்ளார்கள். அத்தலத்தின் எட்டுத் திசைகளிலும் சாஸ்தா வலம் வருகிறார் என்பது ஐதீகம். அந்த அவதாரங்கள் : 1.மகா சாஸ்தா, 2.ஜகன்மோக சாஸ்தா, 3.பால சாஸ்தா, 4.கிராத சாஸ்தா, 5.தர்ம சாஸ்தா, 6.விஷ்ணு சாஸ்தா, 7.பிரம்ம சாஸ்தா, 8.ருத்ர சாஸ்தா.

l சபரிமலையிலிருந்து பந்தளத்துக்கு திருவாபரணம் கொண்டு செல்லும் வழியில் பெருநாடு கோயில் உள்ளது. இங்கும் ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்படுகின்றன. இங்கு பெண்களும் ஐயப்பனை தரிசித்து வழிபடலாம்.

l குளத்துப்புழை பாலகன் பாபநாசம் சிவனை நோக்கியும், ஆரியங்காவு ஐயன் திருக்குற்றாலத்தை நோக்கியும், அச்சன்கோயில் ஐயப்பன் சங்கரநயினாரை நோக்கியும் காட்சி தருகிறார்கள்.

l சபரிமலை செல்கிறவர்கள் சென்று வர வேண்டிய மற்ற கோயில்கள் : திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில், கொல்லம் ஆனந்தவல்லீஸ்வரர் கோயில், வைக்கம் திருநக்கரை மகாதேவர் கோயில், பந்தனத்திட்டை மலையாளப்புழை தேவி கோயில்களாகும்.

l கேரள நாட்டில் சிரஞ்சீவியான பரசுராமரால் சாஸ்தாவுக்காக ஸ்தாபிக்கப்பட்ட கோயில் குளத்துப்புழை கோயிலாகும்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com