கவிதைத் தூறல்!

கவிதைத் தூறல்!

Published on

விவசாயி!

லைப்பாகையே
மணிமகுடம்!
ஏர் கலப்பையே
செங்கோல்!
வியர்வைத் துளியே
வாசனை திரவியம்!
இடுப்புக் கச்சையே
வெண்பட்டாடை!
இறைவனைத்
தொழுவதற்கு பதில்
இவ்வுலகம்
உழவனைத் தொழலாம்!
நிலா, திருச்சி

வேதனைப்படுகிறான்
விவசாயி
விதைக்கும்போது
காய்கிறது வெய்யில்
அறுவடையின்போது
பெய்கிறது மழை!

றுவடை முடிந்ததும்
நெல் விற்ற பணத்தில்
ஒழுகும் வீட்டிற்கு
ஓலை மாற்ற வேண்டும்
இனி, தைக்க இடமில்லை என
கிழிந்த புடவை கட்டியிருக்கும்
மனைவிக்கு ஒரு புடவை
எடுக்க வேண்டும்
'ஒரு நாளாவது டவுனுக்குக்
கூட்டிப் போய் பீச்சைக்
காட்டுப்பா' என அடிக்கடி
கேட்கும் குழந்தையை
டவுனுக்கு அழைத்துப்
போக வேண்டும்
இப்படி எண்ணற்ற ஆசைகள்
ஆசைகள் அனைத்தும்
அழிந்துபோயின
இரவு பெய்த மழையில்
மூழ்கிப்போனது வயல்!


ர் ஓட்ட இரண்டாயிரம்
நாற்று நட நாலாயிரம்
உரம் போட மூவாயிரம்
மருந்தடிக்க இரண்டாயிரத்து ஐநூறு
களை எடுக்க ஓராயிரம்
அறுவடைக்கு ஆயிரத்து எண்ணூறு
உழைச்ச கணக்கு பார்த்தா
ஒரு ரூபாயும் மீறவில்லை
வாங்கிய கடனை அடைக்க
வழி ஏதும் தெரியவில்லை
கடன் கொடுத்தவங்க காசு கேட்டு
வீடு வந்து நிக்குறாங்க
'வட்டி கட்டக்கூட வழியில்லையா?' என
வாய்க்கு வந்தபடி திட்டுறாங்க
அசிங்கப்பட்டு, அவமானப்பட்ட பிறகு
உடம்பில் இன்னும் உயிர் எதுக்கு?
பம்பு செட்டுக்குள்ள
பயிருக்கு அடிச்ச பூச்சி மருந்து
இன்னும் பாதி மீதம் இருக்கு!
பி.சி.ரகு, விழுப்புரம்

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com