பாட்டொன்று கேட்டேன்!

பாட்டொன்று கேட்டேன்!
Published on
இது மங்கையர்மலரின் விவிதபாரதி…

 பகுதி – 5

 -ஆதிரை வேணுகோபால்

ங்கையர்மலர் விவிதபாரதியில் நாம் இன்று கேட்க விரும்பும் பாடல்…
80's காதலர்கள் கொண்டாடிய பாடல்! காதல் சோகப்பாடல்! அனுபவம் மிக்க வார்த்தைகள்,  தாள வாத்தியம் இசை, டி.எம்.எஸ் அவர்களின் கணீர் குரல், உயிரோட்டமான வரிகள்… 1981ம் வருடம் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்த பாடல்!

டி.எம்.எஸ் அவர்களின் திரை இசை யாத்திரையில் ஒரு வைர மைல்கல் இந்தப் பாடல்.  இந்தப் பாடலுக்கு முன்னால் வரை அவர் பாடிய பாடல்களைக் கேட்கும்போது அது  எம்.ஜி.ஆர். ஆகவோ அல்லது சிவாஜியாகவோதான் தோன்றும். ஆனால் இந்த பாடலில் டி.எம்.எஸ். அவர்கள்தான் நம் கண் முன் வருவார். அந்த அளவுக்கு உருகி உருகிப் பாடி இருப்பார்!

அட போதும்பா பில்டப்பு… பாட்டச் சொல்லுங்க! என்று கேட்கிறீர்களா? அல்லது கண்டுபிடிச்சிட்டீங்களா?! கண்டுபிடிச்சவர்களுக்கு
ஒரு மிகப் பெரிய ராயல் சல்யூட்.

டி.ஆர் அவர்களின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, இயக்கத்தில்  1981ம் வருடம் வெளிவந்த 'ரயில் பயணங்களில்'
படத்தில் இடம் பெற்ற…

"வசந்த ஊஞ்சலிலே …

அசைந்த பூங்கொடியே …

உதிர்ந்த மாயம் என்ன…

 உன் இதய சோகம் என்ன..

 உன் இதய சோகம் என்ன ..

நூலும் இல்லை வாலும் இல்லை
வானில் பட்டம் விடுவேனா.'.. என்ற அதி அற்புதமான பாடல்தான்.

ஹீரோயினைத் தொடாமலேயே காதல் செய்யும் ஹீரோ கேரக்டர்கள்தான் டி.ஆரின் பிரத்யேக பாணி. பிரபல பாடகரான ஹீரோவின் மீது எழுத்தாளராக இருக்கும் நாயகிக்கு தீராக்காதல். ஹீரோவின் பாடல் நிகழ்ச்சியில் தவறாமல் ஆஜராகி விடுவார். பரஸ்பரம் பேசிய பிறகு காதல் இருந்தும் அதை இருவரும் சொல்லிக் கொள்ளாமலேயே இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் ஹீரோவிற்கு அவர்கள் வீட்டில் பெண் பார்க்கிறார்கள்.

ஹீரோயினுக்கும் ராஜீவை (படத்தின் வில்லன்)  மணக்க வேண்டிய சூழல். திருமணத்திற்கு பிறகு, மானசீக காதல் தெரியவர சொற்களால் அர்ச்சனை செய்கிறார் ராஜீவ். விவாகரத்தும் கேட்கிறார். ஹீரோ ஹீரோயினை மறக்க முடியாமல் தேவதாஸ் ஆகிறார். இருவருக்கும் பொதுவான ஒரு எழுத்தாள பெண்மணி அவள் படும் அவஸ்தையை ஹீரோவிடம் சொல்ல, ராஜீவை சந்தித்துப் பேசுகிறார் ஹீரோ எதிர்பாராத ட்விஸ்ட் உடன் படத்தை முடித்திருப்பார் டி.ஆர்.படத்தின் அடுக்கு மொழி  வசனங்களுக்கு தியேட்டரில் விசில் பறந்தது.

40 வருடங்கள் கடந்தும் மனதில் பதிந்து நிற்கும் வசனங்கள்! வசனம் மட்டுமல்ல பாடல்கள் ஒவ்வொன்றும் தேனில் தோய்த்த பலாச்சுளை…

"வசந்தம் பாடி வர"…

 "அட யாரோ பின்பாட்டு பாட…"

"அமைதிக்கு பெயர் தான் சாந்தி"…

"படுக்கை விரித்து போட்டேன் அதில் முள்ளாய் அவளின் நினைவு… பாழும் உலகை வெறுத்தேன் அதில் ஏனோ இன்னும் உயிரு'…

அவளை நினைக்க வேண்டாம் என நினைத்து அவளையே நினைத்துக் கொண்டிருப்பது தான் காதல் எனும் அரிய தத்துவத்தை அளித்த பாடல் இது.

"பூத்தால் மலரும் உதிரும்

 நெஞ்சில் பூத்தாள் உதிரவில்லை.."

"நிலவோ தேய்ந்து வளரும் ..

அவள் நினைவோ தேய்வதில்லை"

"பாடையிலே போகையிலும் தேவி உன்னைத் தேடி உயிர் பறந்திடுமே…

என்ன ஆழமான வரிகள்.

ண்மை காதலை சுமப்பவர்களுக்கு இப்பாடல் ஒரு பொக்கிஷம். உண்மையான அன்பு கொண்ட இதயங்களில் ஏற்பட்ட காயங்களின் (ரணங்களின்) வெளிப்பாடு என்றே இந்த பாடலை சொல்லலாம். பாடலும் வரிகளும் ஒளிப்பதிவும் உணர்வினை உயிர்ப்பிக்கும் உயிரோட்டம் கொண்ட இந்த பாடலை… கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க!

என்றென்றும் அன்புடன்
ஆதிரை வேணுகோபால்

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com