
பாரதியாருக்கு ஒரு தனித்துவமான குணமிருந்தது. தான் எழுதிய பாடல்களின் பரிசோதனைக் கூடமாக அவர் தன்னையே அவ்வப்போது மாற்றிக்கொள்வார். ஒரு மகாகவிஞனுக்கு இருக்கும் விநோதமான இலக்கணங்களில் இதுவும் ஒன்றோ என்னவோ? அவர் பரிசோதனை செய்வதைப் பார்க்கின்ற பாக்கியம் ஒரு நாள் எட்டயபுரத்துக்கு வாய்த்தது.
எட்டயபுரம் அரண்மனைக்கு அருகே ராஜா தோட்டம் என்ற ஓர் இடமுண்டு. பற்பல பழ மரங்கள் நிறைந்த மனோரம்மியமான ஒரு சோலை அது. ஒரு நாள் பாரதியார், அங்கே தன் மனைவி செல்லம்மாவோடு உலா போகலாம் என்று முடிவெடுத்தார். இதைக் கேட்டவுடன் செல்லம்மா பதறிப்போய், 'கணவருடன் ஒரு பெண் உலா சென்றால் ஊராரின் தூற்றுதலுக்கு ஆளாக நேரிடுமே' என்று அஞ்சினார். இதைக் கேட்டவுடன், 'நம்முடைய மனிதர் தூஷிப்பதும் நமக்கு ஆனந்தமல்லவா, புறப்படு' என்றார் பாரதியார்.
இந்த நிகழ்ச்சியை மிக விரிவாக, 'பாரதியார் சரித்திரம்' என்ற தனது நூலில் செல்லம்மா பாரதி எழுதியிருக்கிறார்.
பாரதியார் உறுதியாகச் சொன்னதால் மறுபேச்சின்றி வெளியே செல்லப் புறப்பட்டார் செல்லம்மா. இருவரும் கைகோத்துக் கொண்டு தெருவில் நடந்து சென்றார்கள். அப்போது சிலர், 'ஓகோ, பைத்தியங்கள் எங்கேயோ உலாவப் போகிறதுகள் பார்' என்று நகைத்தார்கள். ஆனால், பாரதியாரோ கொஞ்சமும் அசராமல் செல்லம்மாவின் கையை இன்னும் இறுகப் பற்றிக்கொண்டு,
'நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்னி உரைப்பது கேட்டிரோ!'
என்று சத்தமிட்டுப் பாடியபடியே தொடர்ந்து பீடு நடை போட்டார்.
கணவர் என்ன சொன்னாலும் எதிர்ப்பில்லாமல் அப்படியே ஏற்கும் செல்லம்மாவின் போக்கைச் சக பெண்களே கண்டித்தது காலத்தின் ஆகப்பெரிய முரண்களில் ஒன்று. 'இப்படி ஒரு புருஷனோடு வாழ்வதைக் காட்டிலும், நாங்களாயிருந்தால் ஒரு செம்பைத் தேய்த்துக்கொண்டு, நாலு வீடு சென்று பிச்சை எடுத்து வயிறு வளர்ப்போம்' என்பார்களாம் அவர்கள்.
தன் மனைவியைப் புதுமைப்பெண்ணாகப் பார்க்க ஆசைப்பட்டு பாரதியார் நிகழ்த்திய பரிசோதனைக்கு எப்பேர்ப்பட்ட எதிர்வினைகள்! அவர் மட்டும் அந்த ஏச்சுமொழிக்கு அகம் உடைந்திருந்தால் இன்று பெண்கள் தலை நிமிர்ந்து நடக்க முடியுமா? தங்களைப் பற்றி நினைக்காமல் சமூகத்தில் உள்ள பெண்களின் நிலை முன்னேற வேண்டும் என்று பாரதியும் செல்லம்மாவும் சிந்தித்தது அவர்கள் ஆற்றிய விலை மதிப்பற்ற பெருந்தொண்டு.
'பெண்கள் மனத்தில் களங்கமின்றி ஆண் மக்களோடு பழக வேண்டும். அங்ஙனமே ஆடவர்களும் ஸ்தீரிகளின் மத்தியில் உள்ளத்தில் மாசின்றி உறவாட வேண்டும். இப்படி ஜாக்கிரதையுடன் சிறிது காலம் நடந்தால் தனியே ஒவ்வொருவர் மனமும் பரிசுத்தமாகி விடும்' என்பது பாரதியாரின் நிலைப்பாடு.
என்னதான் புதுமைப்பெண்ணைக் கிட்டத்தட்ட செதுக்கி உருவாக்கிவிட்டாலும் பாரதியாரின் மனதில் ஒரு குறை இருந்தது. இன்னும் இது முழுமையடையாதிருக்கிறதே என்று உள்ளுணர்வு நெருடியது. இறுதியில் பளிச்சென்று அவர் மனதில் ஒரு சிந்தனை மின்னல் வெட்டியது.
இந்த உலகத்தை இயக்கி, உயிர்களை வாழவைத்துக் கொண்டிருப்பவள் ஜகன்மாதாவாகிய பராசக்தி அல்லவா! ஏன் அப்படிச் செய்கிறாள்?
இதற்குச் சைவ சித்தாந்தத்தின் அடிப்படையைக் கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டும். சிவனும் சக்தியும் ஒன்றா? வேறு வேறா? இறைவனும் இறைவனது அருளும் ஒன்றா? வேறு வேறா?
கடவுளையும் அவனது கருணையையும் எப்படிப் பிரிக்க முடியாதோ, அதேபோல் சிவம், சக்தி ஆகிய இரண்டையும் பிரிக்க முடியாது. இயக்கமற்ற நிலையில் இருக்கும் இறையின் பெயர் சிவம். அதே இறைநிலை இயங்கத் தொடங்கினால் அதற்குப் பெயர் சக்தி. சிவனே என்று இருந்தேன் என்ற பழமொழியின் உண்மையான பொருள் இதுவே.
இறைநிலை அருள்கொண்டு இயங்கும்போதுதான் பிரபஞ்சம் உண்டாகி, உலகம் உண்டாகி பிறகு உயிர்களெல்லாம் உருவாகின்றன. நம் நாட்டு மரபின்படி பெண்கள், கருணையின் வடிவங்கள். அதனால்தான் சக்தி என்னும் தெய்வ நிலையை நாம் பெண் தெய்வமாக வழிபட்டோம். பராசக்தியான அவளே இந்த உலகத்து உயிர்கட்கெல்லாம் தாய். பாரதியாருக்கும் அவள்தான் தாய்.
அவள், இந்த உலகெனும் மாயையை எதற்காக உண்டாக்கினாள்? இன்பங்களையும், துன்பங்களையும் ஏன் மாறி மாறிக் கொடுக்கிறாள்? மெய் போலத் தோற்றமளிக்கும் இந்தப் பொய்யுலக வாழ்வைக் கடந்து மனித உயிர் இறைவனோடு கலக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
இந்த விழுமியத்தை மஹாகாளியின் புகழ் என்ற தலைப்பில், ஓர் அற்புதமான காவடிச் சிந்துப் பாடலைப் பாரதியார் எழுதியிருக்கிறார்.
'காலமாம் வனத்திலண்டக் கோலமா மரத்தின் மீது
காளிசக்தி யென்றபெயர் கொண்டு – ரீங்
காரமிட் டுலவுமொரு வண்டு
அன்புவடி வாகிநிற்பள் துன்பெலா மவளிழைப்பள்
ஆக்கநீக்கம் யாவுமவள் செய்கை – இதை
ஆர்ந்துணர்ந்த வர்களுக்குண் டுய்கை….'
இப்பேர்ப்பட்ட பராசக்தியை விடுத்து, நாம் எதையும் சிந்தித்ததில்லையே! அவ்வாறெனில் புதுமைப்பெண்ணை எப்படி நாம் பராசக்தியோடு இணைந்து சிந்திக்கத் தவறினோம்! அடடா! காணும் பெண்கள் யாவரும் அந்தப் பராசக்தியின் அம்சங்களே!
புதுமைப்பெண்ணும் அந்த உலகநாயகியின் இன்னோர் உருவே! ஆம்! இப்போதுதான் என், 'புதுமைப்பெண்' முழுமை அடைகிறாள். தெய்வாம்சம் துளியும் இல்லாமல் நாம் எந்தவொரு விழுமியத்தையும் முன்னிறுத்துவதில்லையே! தன் மனதில் எழுந்த இந்த எண்ணத்துண்டுகளையெல்லாம் ஒன்றாகக் கோத்து ஓர் அற்புதமான சித்திரமாக்கினார் பாரதியார். பூமிக்கு அவர் அளித்த கொடையாகக் குன்றென நிமிர்ந்து நின்றாள் புதுமைப்பெண்.
'ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்'
தன் மனைவியைப் புதுமைப்பெண்ணாக மட்டும் அவர் பார்க்கவில்லை. பராசக்தியின் வடிவமாகவும் கண்டு மெய்சிலிர்த்தார்.
'காதல் செய்யும் மனைவியே சக்தி கண்டீர்
கடவுள் நிலை அவளாலே எய்தல் வேண்டும்'
சக்தியின் வடிவமாகப் பிறப்பெடுத்திருக்கும் சகத்துப் பெண்களையும் அவர்தம் பெண்மையையும் ஆசை தீரக் கொண்டாடியவர் பாரதியார்.
'பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா
தண்மை இன்பம்நற் புண்ணியஞ் சேர்ந்தன
தாயின் பெயரும் சதியென்ற நாமமும்.
அன்பு வாழ்கென் றமைதியில் ஆடுவோம்
ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்
துன்பம் தீர்வது பெண்மையி னாலடா
சூரப் பிள்ளைகள் தாயென்று போற்றுவோம்.
வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா
மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்
கலி யழிப்பது பெண்க ளறமடா
கைகள் கோத்துக் களித்துநின் றாடுவோம்'
பாரதியாருக்கு இருக்கும் தெளிவான தொலைநோக்குப் பார்வை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. ஒரு பெண்ணைச் சக உயிரியாக முதலில் மதித்து, பிறகு சம உயிரியாக மதித்து, இறுதியில் சக்தி உயிரியாகச் சிகரத்தில் கொண்டுபோய் ஓர் ஆண் நிறுத்த வேண்டும் என்பது பாரதியாரின் அவா. 'Be the change you want to be' என்றார் மகாத்மா காந்தி. அதையே வேதவாக்காகக் கொண்டு தன் வாழ்க்கையில் நடத்திக் காட்டினார் பாரதியார். இதுபோல் பல பரிசோதனைகளை அவர் செய்திருக்கிறார். அவ்விதத்தில் பார்த்தால் அவர் ஒரு சமூக விஞ்ஞானி. பிற மனிதர்களின் எள்ளல்களை அவர் எட்டுணை அளவும் பொருட்படுத்தவில்லை. பற்பல ஆண்டுகள் பின் தங்கியிருந்த மக்களைக் கண்டு அவருக்கு இரக்கம்தான் ஏற்பட்டது.
தான் எழுதிய புதுமைப்பெண் கவிதையை இவ்வாறு நிறைவு செய்கிறார் பாரதியார்,
'போற்றி, போற்றி, ஜயஜய போற்றிஇப்
புதுமைப் பெண்ணொளி வாழிபல் லாண்டிங்கே
மாற்றி வையம் புதுமை யுறச்செய்து,
மனிதர் தம்மை அமரர்க ளாக்கவே
ஆற்றல் கொண்ட பராசக்தி யன்னைநல்
அருளினா லொரு கன்னிகை யாகியே
தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள்
செல்வம் யாவினும் மேற்செல்வம் எய்தினோம்.
பாரதியார் காட்டிய நெறியில் சக்தியின் வடிவங்களாக, சாதனைச் சிகரங்களாக நம்மிடையே வாழ்ந்து வரும் புதுமைப்பெண்களை மனமார வாழ்த்துவோம். புதுமைப்பெண் என்னும் ஒப்பற்ற கருத்தாக்கத்தை மீட்டெடுத்து புதுப்பொலிவோடு புவனத்துக்கு அளித்த மகாகவி பாரதியாரைப் போற்றி வணங்குவோம்.
(நிறைந்தது)