இதற்காகவா ஒரு கொலை?

இதற்காகவா ஒரு கொலை?
Published on
புதிய தொடர் – 1
– ஜி.எஸ்.எஸ்.

நிலத் தகராறுகள் கொலையில் முடிந்த சம்பவங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். முறை தவறிய உறவுகள் கொலைகளில் முடிந்ததுண்டு. கௌரவக் கொலைகள் (அல்லது ஆணவக் கொலைகள்) குறித்தும் கேள்விப்படுகிறோம். ஆனால், மிக மிக அற்பமான மற்றும் எதிர்பார்க்கவே முடியாத காரணங்களுக்காக சில கொலைகள் நடந்ததுண்டு… நடப்பதுண்டு. அவற்றைப் பற்றி இந்தத் தொடரில் பார்ப்போம்!

திமூன்று வயதுச் சிறுவன் கெவோன் வாட்கின்ஸ். இவன் தனது இருபது வயது அக்காவைக் கொன்றிருக்கிறான்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, அவர்களின் தாயும் தந்தையும் கதறி அழுவதைப் பார்த்து பல பெற்றோர்களும் பயத்துடன் சோக வயப்பட்டனர்.

சோகம் சரி, பயம் ஏன் என்கிறீர்களா? காரணம் உண்டு. அது அந்தக் கொலைக்கான காரணம். தங்கள் வீட்டிலும் இதுபோல் நடக்க வாய்ப்பு உண்டோ என்று பலரையும் யோசிக்க வைத்த வழக்கு அது.

அந்தச் சிறுவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இடையே அவ்வப்போது சிறையிலிருந்து வீட்டுக்குச் சென்று வரலாம் என்ற சலுகையும் அளிக்கப்பட்டது.

'என் மொத்த நீதிபதி பணியில் நான் மிகுந்த மன உளைச்சலுடன் இந்தத் தீர்ப்பை அளிக்கிறேன்' என்று கூறினார் நீதிபதி கோல்வின். 'நாம் எதை அலட்சியமாக நினைக்கிறோமோ, எதை இயல்பானது என்று நினைக்கிறோமோ அதில்தான் பெரும் சிக்கல்கள் உண்டாகலாம். வீட்டில் பெரும் குழப்பங்கள் அடிக்கடி நிகழ அனுமதிக்கக் கூடாது. குடும்ப உறுப்பினர்கள் மற்றவர்களின் சிறிய தவறுகளை மன்னிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். குடும்ப உறுப்பினர்களுக்குக் கட்டுப்பாடு என்பதன் அவசியம் அறிவுறுத்தப்பட வேண்டும். அதைத்தான் இந்த வழக்கு சுட்டிக்காட்டுகிறது' என்றார் கனத்த இதயத்துடன்.

என்னதான் நடந்தது? சென்ற பிப்ரவரி மாதம் நடைபெற்றது அந்த விபரீதம்.

கெவோன் வாட்கின்ஸ்
கெவோன் வாட்கின்ஸ்

'அன்று பள்ளிக்குச் சென்று என் மகனை அழைத்து வந்தபோதே அவன் எரிந்து விழுந்து கொண்டு கோபமான மூடில்தான் இருந்தான். வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக குடும்பத்தின் wi-fi சங்கேத மொழியை தனக்கு மட்டும் புலப்படும் விதத்தில் மாற்றி அமைத்தான். காரணம், குடும்பத்தில் அனைவருமே ஒரு குறிப்பிட்ட சங்கேத வார்த்தையைப் பயன்படுத்தி ஒரே சமயத்தில் கணினியை இயக்குவதால், அவனால் ஆன்லைன் கணினி விளையாட்டுகளை சிறப்பாக விளையாட முடியவில்லை. அந்த விளையாட்டு வீடியோக்கள் மிக மிக மெதுவாகவே இயங்கின. நடுநடுவே நின்று சக்கரம் சுற்றியது. தனக்கு மட்டுமே தெரிந்த சங்கேத மொழியைப் பயன்படுத்தி, தான் மட்டுமே அந்த விளையாட்டுக்களை விளையாடினால் அது வேகமாக இருக்கும் என்பதால் இப்படிச் செய்தான்.

சிறிது நேரம் கழித்து அவனது அக்கா வீட்டுக்கு வந்தபோது அவளால் இணைய வீடியோக்களை இயக்க முடியவில்லை. இணையத்தின் உள்ளே புக முடியவில்லை. எதனால் இப்படி என்று அவள் குழம்பிக் கொண்டிருந்தபோது, அவளது அம்மா அங்கு வந்தார். மகனைக் குடைந்து குடைந்து கேட்டதில் உண்மைக் காரணம் வெளிவந்தது.

வீட்டில் அனைவரும் இணையத்தைப் பயன்படுத்த வேண்டி இருக்கும்போது, அதெப்படி மகன் தான் மட்டும் அதைப் பயன்படுத்தும்படி சங்கேதச் சொல்லை மாற்றியமைக்கலாம்? அம்மா இதுகுறித்து கோபமடைந்தார். மகனைத் திட்டினார். மகனும் பதிலுக்கு ஏதேதோ பேசினான். விவாதம் கடுமையானது. ஒரு கட்டத்தில் சிறுவன் தன் அம்மாவைத் தாக்குவதற்கு முன் வந்தான். அம்மாவைக் காப்பாற்றுவதற்காக மகள் அலெக்ஸஸ் இடையில் வந்து தம்பியைத் தடுத்தாள்.

பின்னர் அக்காவுக்கும் தம்பிக்கும் கைகலப்பு நிகழ்ந்தது. கீழே விழுந்து புரண்டபடி சண்டையிட்டனர். அவர்கள் இருவரையும் பிரிக்க அம்மாவால் முடியவில்லை. சண்டை மேலும் மேலும் அதிகமாகவே காவல்துறைக்கு தகவல் அனுப்பி விட்டாள் அம்மா.

காவல்துறையினர் வந்து பார்த்தபோது, நின்ற நிலையில் தனது அக்காவின் கழுத்தை அழுத்திப் பிடித்துக்கொண்டு நின்றபடி மிக உக்கிரமாகக் காட்சியளித்தான் தம்பி. கடந்த பதினைந்து நிமிடங்களாகவே அவன் இப்படி பிடித்துக்கொண்டிருந்தான் என்பது பின்னர் தெரியவந்தது. காவல்துறையினரால்தான் அவன் விரல்களை அக்காவின் கழுத்தில் இருந்து நீக்க முடிந்தது.

பலவிதங்களில் முயன்றும் அவர்களால் அக்காவைக் காப்பாற்ற முடியவில்லை. மருத்துவமனையில் சேர்த்த கொஞ்ச நேரத்திலேயே அவள் இறந்து விட்டாள் என்ற தகவல் பரவியது.

'சிறுவனுக்கு தன் சகோதரியைக் கொல்ல வேண்டும் என்ற நோக்கம் கிடையாது' என்று வாதிடப்பட்டது. ஆனால், தொடர்ந்து அவன் அவள் கழுத்தை நெரித்துக் கொண்டிருந்தான் என்பது, அவள் இறப்பது குறித்து அவன் கவலைப்படவில்லை என்பதைத் தெளிவாக்கியது என்றது எதிர்த்தரப்பு. இவர்கள் இருவரின் சிறிய தம்பி தன் அண்ணனின் கைவிரல்களை அக்காவின் கழுத்திலிருந்து பிரித்துவிட முயன்றதும் அது முடியாமல் போனதும் எடுத்துக் கூறப்பட்டது.

மகோன் என்ற பகுதியில் வசித்து வந்தது அந்தக் குடும்பம். கெவோன், அவனது அக்கா, அவனது தம்பி, அவர்களது தாய் ஆகியோர் மட்டுமே அடங்கிய சிறிய குடும்பம். அதில்தான் இப்படி ஒரு சூறாவளி.

நீதிமன்றத்தை விட்டு வெளியேறி சிறைக்குச் செல்லும்போது தேம்பிக்கொண்டே, 'ஐ அம் சாரி' என்று கூறினான் கெவோன்.

தீர்ப்பை வாசித்த நீதிபதி, அந்தச் சிறுவனின் அளவற்ற கோபப்போக்கை பெரியவர்கள் முன்னதாகவே கவனித்து, 'கோப நிர்வாக வகுப்புகளுக்கு அனுப்பி இருக்கலாம்' என்று கூறினார்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com