உப்புச் சுரங்கத்தின் உள்ளே…

உப்புச் சுரங்கத்தின் உள்ளே…
Published on
பயணம் – கிழக்கு ஐரோப்பா – 10
– பத்மினி பட்டாபிராமன்

'சவுண்ட் ஆஃப் மியூசிக்' படம் எடுத்த அழகான சால்ஸ்பர்க் பார்க்கப் போகிறோம் என்று நாங்கள் ஆவலாகக் காத்திருக்க… பார்த்திருக்க, ஒரு சுரங்க வாசலில் கொண்டுவிடப் பட்டோம். அதுவும் உப்பு சுரங்கமாம். கடலில்தானே உப்பு கிடைக்கும் என்று நினைத்திருக்கிறோம். 'ஒருவேளை இந்தச் சுரங்கம் கடலுக்குள் செல்கிறதோ…' என ஏகப்பட்ட கேள்விகளுடன் இறங்கினோம்.

இந்த உப்புச் சுரங்கத்தின் உப்பு ஒரு சமயம் உலகில் மற்ற எல்லாவற்றையும் விட அதிக தேவையான ஒரு பொருளாகவும் பெரும் பணம் தரும் முக்கிய வணிகமாகவும் இருந்து வந்திருக்கிறது. மின்சாரமும், குளிர்சாதன வசதிகளும் கண்டுபிடிக்கும் முன்பு, பொருட்களை வீணாகாமல் பாதுகாக்கவும், தோல் பதனிடுவதற்கும் உப்பு தேவைப்பட்டிருக்கிறது.
ஏன், இன்றும் நம் உணவுப் பொருட்களை கெடாமல் வைத்திருக்க உப்பில்தானே ஊற வைக்கிறோம்.

உப்பு, எப்படி பூமிக்கடியில் சென்றது?

ல்லா உப்புமே கடலில் இருந்து கிடைப்பதுதான். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக கடல் படுகைகளில் படிந்திருக்கும் தாது உப்புக்கள் இறுகி படிகப் பாறை (Crystallization) ஆகின்றன. பூமிக்கடியில் ஏற்படும் மோதல்களால் மலைகள் உருவாகின்றன. அவற்றுக்கு அடியில் படிந்து விடும் உப்புப் பாறைகள் கண்டறியப்பட்டு, சுரங்கம் தோண்டப்பட்டு, உப்பு எடுக்கப்படுகிறது. இதுதான் ராக் சால்ட் (rock salt). அத்தகைய உப்பு சுரங்கங்களில் ஒன்று, சால்ஸ்பர்கில் நாங்கள் சென்ற ஹேலைன் (Hallein Salt Mine) சுரங்கம். அது ஒரு தனி அனுபவம்.

முதலில் ஒரு வெள்ளை ஓவர்கோட், தொப்பி அணிந்துகொள்ள வேண்டும். நுழைவாயிலில் இருந்து பொம்மை ரயில் போல் இருபுறமும் திறப்பு கொண்ட ஒரு மர ரயிலில் சுரங்கத்துக்குள் செல்ல வேண்டும். கூடவே இருட்டு ஆரம்பித்து விடுகிறது. சோடியம் மின் விளக்குகள் தேவையான அளவு மட்டுமே வைத்து ஒரு இருளும் ஒளியும் எஃபக்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. உப்பின் வரலாற்றை கைட் விளக்குகிறார்.

முதல் உலகப் போரில் இந்த சுரங்கத்தில் கிடைத்த உப்பு, பெரும் பணம் ஈட்டும் பொருளாக இருந்ததாம். 800 வருடங்களுக்கு மேலாக இந்த சுரங்கத்தில் உப்பு எடுக்கப்பட்ட பின், 1989ம் ஆண்டு ஜூலை மாதத்தோடு இங்கே தோண்டுவது நிறுத்தப்பட்டது என்றார்.
ரயிலில் பத்து நிமிடங்கள் பயணித்த பின் இறங்குகிறோம். ஸ்டேஷன் ஒன்றும் வரவில்லை. இனி, பூமியின் ஆழத்துக்குள் செல்ல வேண்டும். எப்படி இறங்கப்போகிறோம்?

குளிரோடு எங்கிருந்தோ சில்லென்ற உப்புக் காற்று வேறு. சுற்றிலும் பிங்க், பழுப்பு என லேசான அழுக்கோடு மினரல் க்ரிஸ்டல் பாறைகள். சர்ரென்று வந்து அருகில் நின்றன மரத்தாலான நீண்ட சறுக்கும் ஸ்லைடர்ஸ். அதில் இரண்டு பக்கமும் காலைப் போட்டு உட்காரும்படி சொல்லப்பட்டோம். பக்கவாட்டில் பிடிப்பு இருந்தது.

யாரோ எங்கோ ஸ்விட்ச் போட்டார்கள். அவ்வளவுதான் சர்ரென்று கீழே ஆழத்திற்கு வழுக்கிக்கொண்டு செல்ல ஆரம்பித்தோம். ஒரே த்ரில்தான்… (எப்போதோ சிறு வயதில் பார்க்கில் ஆறடி சறுக்கி விளையாடியது.)
முதலில் அமர்பவருக்கு முன்னால் ஒரு தடுப்பு உண்டு. அகலம் குறைந்த பாதை.

நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக மனிதர் சுரங்கம் தோண்டிய காட்சிகள், ஆங்காங்கே உப்பாலான உருவச் சிலைகளுடன் சித்தரிக்கப் பட்டிருக்கின்றன. அந்த வழுக்கலில் இருந்து இறங்கியதும் இன்னொரு வழுக்கல், இன்னும் ஆழத்துக்குள் எங்களை அமுக்கிச் சென்றது.
நீண்டு தோன்றிய பயணத்துக்குப் பின் பாறைத் தரையில் கால் பதித்தோம்.
தலைக்கு மேல் கூரையில் உப்புப் பாறைகளில் கை பதித்தோம்.

கிரிஸ்டல் பாறைகளில்தான் என்ன பளபளப்பு… என்ன வண்ணங்கள்… என்ன ஒரு ஜாமெட்ரிகல் அமைப்பு. லேசாக நாக்கில் தொட்டு உப்பை ருசித்தோம். சுரங்கத்துக்கே உரிய, மின் விளக்கை விழுங்கும் இருட்டு, ஈரம். எங்கோ சொட்டும் நீர், உப்பின் வாசம் நின்ற இடத்துக்கு அடியில் அரைகுறை இருட்டில் மெதுவாக அசைந்து கொண்டு அமைதியாக ஒரு ஏரியைப் பார்த்து மெய்மறந்து நின்றோம். உள்ளே எடுத்துச் செல்ல கேமராக்களுக்கு தடை. ஃப்ளாஷ் இல்லாமல் செல்ஃபோனில் ஃபோட்டோ எடுத்தோம்.

"சரி… போட்டில் ஏறுங்கள்…" ஒரு குரல் கேட்டது. போட்டா…?
வியக்கும்போதே சுமார் பத்துப் பேர் அமரக்கூடிய சிறு படகு ஒன்று ஆடி வந்து நின்றது.

கூரையிலும் மேலும் பக்கவாட்டிலும் இறுகிக்கிடந்த வண்ணப் பாறைச் சுவர்களைப் பார்த்தபடி அந்தப் பாதி இருட்டுக்குள், ஏரியில் படகு சவாரி.
படகு சவாரி முடிந்து, மீண்டும் ஒரு லிஃப்ட் அமைப்பில் மேலே ரயில் நிற்கும் இடத்திற்கு வந்தோம். ரயிலிலிருந்து வெளியே… சுரங்கத்தின் வாசல். ஆக, ரயில், சறுக்குப் பலகை, படகு, லிஃப்ட் என்று சுமார் இரண்டு மணி நேரத்துக்குள் சில பயண அனுபவங்கள்.

வெளியே மியூசியம் போல சுரங்கத்தின் வரலாறு வைக்கப்பட்டிருக்கிறது. கருவிகள் இன்றி மனிதர் கையாலேயே உப்பெடுத்த ஆதிகாலக் கதை, உப்புப் பாறை தூக்கி வரும் மனிதனின் உப்புச் சிலை புகைப் படங்கள். சுற்றிலும் பார்க்கையில் சால்ஸ்பர்கின் பள்ளத்தாக்குப் பசுமை, அருகே தவழும் மேகங்கள்… வளைந்து வளைந்து கீழ் நோக்கிக் செல்லும் சாலைகள்… என்று அழகின் அலகிலா விளையாட்டு.

இசை மேதை மொசார்ட்

Wolfgang Amadeus Mozart – சுருக்கமாக மொசார்ட் என்ற மாபெரும் இசை மேதை பற்றி அறியாதவர் யாரும் இருக்க முடியாது. 1756ல் சால்ஸ்பர்கில் பிறந்தவர். 35 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தவர். அற்புதமான பாடல்களையும் சிம்ஃபொனிகளையும், ஒபேராக்களையும் உலகுக்குத் தந்த இசை மேதை. 600க்கும் மேற்பட்ட காம்போசிஷன்களை உருவாக்கியவர்.

இன்றைய இசைக் கலைஞர்களுக்கு பெரும் உந்துதல் சக்தியாக இருப்பவர்.
இவரது இசையைக் கேட்டால் குழந்தைகளின் அறிவு
வளரும் என்றும் நம்பப்பட்டதாக சொல்கிறார்கள். அவர்
வாழ்ந்த வீடு இருக்கும் வளாகத்துக்குள்
சென்றோம்.

250 ஆண்டுகளுக்கும்
முன் வாழ்ந்த அந்த
இசை மேதைக்கு
அஞ்சலி செலுத்திய பின் சால்ஸ்பர்கில் நகர்
வலம் வந்தோம்.

சவுண்ட் ஆஃப் மியூசிக் லொகேஷன்கள்

னிக் குல்லாயுடன் கிழக்கு ஆல்ப்ஸ் மலைத்தொடரின் பின்னணியில் இருக்கும் சால்ஸ்பர்கின் அழகிய பள்ளத்தாக்குகளும், குன்றுகளும், அரண்மனைகளும், தோட்டங்களும், புல்வெளிகளும் கோட்டைகளும், 'சவுண்ட் ஆஃப் மியூசிக்' படத்தின் மாபெரும் வெற்றிக்கான காரணங்களில் ஒன்று. 'சவுண்ட் ஆஃப் மியூசிக் டூர்' என்றே ஒரு பேக்கேஜ் சுற்றுலாப் பயணிகளுக்காகக் காத்திருக்கிறது. அதில் ஒன்று மிராபேல் அரண்மனை (Mirabell palace), அதனுடன் இணைந்த, வண்ண மலர்களும் அழகிய சிலைகளும் கொண்ட தோட்டத்தைச் சுற்றிப் பார்க்கிறோம். ஜூலி ஆண்ட்ரூஸ், குழந்தைகளுடன் இதே தோட்டத்தில் ஓடியாடி பாடும் காட்சிகள் நினைவுக்கு வருகிறது.

அடுத்து, ஹோகென்சால்ஸ்பர்க் கோட்டை (Hohensalzburg Fortress) மலைப் பின்னணியில், 500 மீட்டர் உயரத்தில் பிரம்மாண்டமான கோட்டை. கி.பி 1007ல் கட்டப்பட்ட கோட்டை இது. முதல் உலகப் போரின்போது கைதிகளை வைக்கும் சிறையாகவும் இதன் ஒரு பகுதி இருந்திருக்கிறது. கோட்டையை ஒட்டி ஸல்சாச் (Salzach) நதி. கோட்டைப் பின்னணியில் நிறைய பாடல்கள் படத்தில் வருகின்றன.

(யூ ஆர் சிக்ஸ்டீன், செவன்ஸ்டீன் டூயட் பாடல் வீடியோவில் போட்டுப் பாருங்கள்.) நாமும் அந்த பின்னணியில் ஃபோட்டோ மட்டும் (மழை வேறு) எடுத்துக் கொண்டோம்.

கோட்டைக்குள் அவ்வளவு சுலபமாக விட்டு விடுவார்களா?
1200களில் நிர்மாணிக்கப்பட்ட, நகரின் மையமான பழைய பகுதி அல்ஸ்ட்டட் (Altstadt), கடைகளும் கதீட்ரலுமாய் களைகட்டுகிறது. கதீட்ரல் 1600களில் கட்டப்பட்டது. குறுகலான தெருக்கள், டவுன் வீடுகள் சுத்தமான தெருக்கள். எல்லாம் சுற்றும்போது இதமான குளிரில் களைப்பே தெரியவில்லை. மொசார்ட்டின் ஊராச்சே… பெரிய ஒபேரா ஹவுஸ் இல்லாமலிருக்குமா?

காதல் பூட்டுப் பாலம் (Love Lock Bridge)

தி மேல் இருக்கும் பாலத்தில் நடந்தோம். தூரத்தில் கோட்டை. பாலத்தின் பக்கவாட்டுத் தடுப்பு முழுவதும் வண்ண வண்ணப் பூட்டுக்கள் தொங்குகின்றன. 'காதலில் லாக் ஆனவர்கள், தங்கள் காதல் நிறைவேற இப்படிப் பூட்டுப் போடுவார்கள்' என்றார் கைடு. என்ன நம்பிக்கையோ…?
நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் மெர்க்யூர், ஆஸ்ட்ரியாவின் புகழ் பெற்ற ஒன்று.

மஹாராஜா என்ற இந்திய உணவு விடுதியில் இரவு உணவை முடித்துக் கொண்டு மெர்க்யூர் திரும்பினோம்.

"நாளை இன்னொரு நாட்டில் ஒரு அழகான ஏரியில் பயணித்து, ஒரு தனித் தீவில் தனியாக இருக்கும் மேரி மாதாவை சந்திக்கப்போகிறோம்" என்றார் வழிகாட்டி. அது எந்த நாடு? எந்த மேரி மாதா…?
(தொடர்ந்து பயணிப்போம்)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com