ஆட்டிஸம் எனும் விந்தை!

ஆட்டிஸம்  எனும் விந்தை!
Published on

– மஞ்சுளா சுவாமிநாதன்

பிரிட்டனை சேர்ந்த Stephen  Wiltshire, 47, ஒரு திறமையான ஓவியர். இவர் ஒரு முறை ஒரு நிலப்பரப்பைப் பார்த்து விட்டால், இம்மி பிசகாமல் அந்த இடத்தை தத்ரூபமாக வரைந்துவிடுவார். இவருக்கு மூன்று வயதில் ஆட்டிஸம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவரை 'ஆட்டிஸம் சவான்' (வழக்கத்திற்கு மீறிய ஞாபக சக்தி / திறன் படைத்தவர்) என்கிறார்கள். இவரைப் போலவே ஆட்டிஸம் உடையவர்கள் பலர் அதீத திறமை சாலிகளாக  உள்ளனர்.  உலகம் முழுவதும் ஏப்ரல் மாதம் 'ஆட்டிஸம் விழிப்புணர்ச்சி' மாதமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் டிசார்டரை- Neuro  Diversified  Developmental  Difference  என்கிறார்கள் மருத்துவர்கள். இதனைப் பற்றி விரிவாக இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

"எனக்கு புரியாத மூளைகளில், ஆட்டிஸம்  மூளையும் ஒன்று," என்கிறார் புகழ்பெற்ற நரம்பியல் மருத்துவ நிபுணர் வில்லியனூர் ராமச்சந்திரன். டாக்டர்களுக்கே இப்படியென்றால், நமக்கு ஆட்டிஸம் புரிய சிரமமாகத்  தானே இருக்கும்.

"என்னுடைய 26 வயது மகன் சச்சிதானந்தனுக்கு (சச்சின்) ஆட்டிஸம் இருக்கிறது! இதற்கு நான் என்ன பாவம் செய்தேனோ? என்பதற்கு மாறாக என்ன புண்ணியம் செய்தேனோ!  என்றுதான் கடவுளிடம் நன்றி செலுத்துவேன்.  நான் தெய்வத்தால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளேன் ,"  என்கிறார் டாக்டர் தேவகி. இவர் ஒரு குழந்தைகள் நல மருத்துவர். மேலும், தனது மகன்  தந்த அனுபவத்தால், உளவியல் ஆலோசனையில் தேர்ந்து, இப்போது சென்னை தரமணியில் உள்ள ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டியில் மருத்துவர் மற்றும் ஆலோசகராக உள்ளார்.

இவரிடம் மங்கையர் மலர் சார்பாக பேசியதிலிருந்து…

ஆட்டிஸம்  குறித்து உங்களது சொந்த அனுபவங்கள்…
னது மகன் சச்சின் பிறக்கும் போது மற்ற எல்லா குழந்தைகள் போலத்தான் இருந்தான். ஆனால், அவனுக்கு இரண்டு வயது ஆன போது அவனால் மற்ற குழந்தைகள் போல பேச முடியவில்லை. அதனை அடுத்து அவனிடம் பல மாற்றங்களை கவனித்தேன். அவனால் இயல்பாக ஒரு உரையாடலில் ஈடுபட  இயலவில்லை. தீடீர் கோபம், அடம், காரணமில்லாமல் அழுகை, கூட்டத்தைப் பார்த்தால் விலகுவது, தனிமையை அதிகம் விரும்புவது,  என்று… சின்ன சின்ன மாற்றங்கள் கூட அவனுக்கு பிடிக்காமல் போகும்.

புலன் சார்ந்த தூண்டல்கள்  அதிகம் இருந்தது. எனது நண்பரின் காரின் வருகையை அவனால் வீட்டில் இருந்தபடியே கணிக்க முடியும். இது எனக்கு வியப்பாக இருந்தது.

அவனை பரிசோதித்த போது  அவனுக்கு ஆட்டிஸம் என்றார்கள். 90 களில், மருத்துவரான எனக்கே ஆட்டிஸம் பற்றி தெரியவில்லை. கோயில்கள் சென்றேன், ஜாதகம் பார்த்தேன், பரிகாரம் செய்தேன், பெரும் மனஉளைச்சலுக்கு ஆளானேன்.

அவனுக்கு நான்கரை வயது இருக்கும் போது பெங்களூருவில் உள்ள NIMHANS மனநல மருத்துவமனையில் தான் ஆட்டிஸம் -க்கான  புரிதல் எனக்கு ஏற்பட்டது. அங்கேயுள்ள மருத்துவரின் பரிந்துரையின்  பேரில் நான் உளவியல் படித்து, இன்று என்னைப்போல ஆட்டிஸம் புரியாமல் குழம்பி தவிக்கும் பெற்றோருக்கு வழிகாட்டுகிறேன்.

டாக்டர் தேவகி
டாக்டர் தேவகி

ஆட்டிஸம்/ மனவளர்ச்சி  குறைபாடு / ADHD எனப்படும் கவனம் குன்றிய நிலை, இவை மூன்றுக்கும்  என்ன வித்தியாசம்?
பொதுவாகவே ஒரு நபர்  மற்றவர்களிலிருந்து சிறிது வித்தியாசமாக இருந்தால் பைத்தியம் என்று முத்திரை குத்திவிடும்  இந்த சமூகம். ஆனால், அந்த நபருக்கும்,  அவரது பெற்றோருக்கும் இது எத்தனை மனவேதனை அளிக்கக்கூடும்?

இவை மூன்றுமே முற்றிலும் வேறுபட்ட, ஆனால் மனவளர்ச்சி சார்ந்த குறியீடுகள். மனவளர்ச்சி குன்றியவர்களால்,  சாதாரண குழந்தை போல பள்ளிக்கு சென்று பாடம் படிக்க இயலாது. அவர்களது அறிவுத்திறன் குறைவாகவே இருக்கும்.

அதே சமயம் ADHD  உள்ள துறுதுறு குழந்தைகளுக்கு மூளையின் சிக்னல்கள் அதிவேகமாக இருக்கும். அவர்களால் சில நிமிடங்களுக்கு மேல் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த முடியாது.

ஆனால், ஆட்டிஸம்  உள்ள குழந்தைகளுக்கு  அறிவுத்திறன்  நன்றாகவே இருக்கும். அதே போல அவர்களுக்கு கவனக்குறைவு இருக்காது. மாறாக,  ஏதாவது ஒரு குறிப்பிட்ட காரியத்தில் அதிக கவனம்  கூர்மையாக இருக்கும். அதிலிருந்து அவர்களது கவனத்தை திருப்புவது மிகவும் கடினமாக இருக்கும். ஒரே மாதிரியான செயலை திரும்பத் திரும்ப சளைக்காமல் செய்வார்கள். உதாரணத்திற்கு, என் மகனை வீட்டிலிருந்து வெளியில் அழைத்து செல்லவே கடினமாக இருக்கும். பல விளக்கங்கள் கூறி அவனது மனதை அந்த மாற்றத்திற்கு நான் தயார் செய்ய வேண்டும்.

புலன்கள் ரீதியாக எந்த மாதிரி பிரச்னைகள் வரும்?
ழக்கமாக ஐம்புலன்கள் என்று சொல்லக்கூடிய புலன்களில் சிலருக்கு ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட புலன்கள் குறைவாகவோ, அதிகமாகவோ தூண்டப்படும். ஒரு சிலருக்கு முகரும் சக்தி அதிகமாக இருக்கும், சில  வாசனைகள் பிடிக்கும், சில பிடிக்காது. ஒரு சிலருக்கு சத்தம்  அதிகமாக இருந்தால் பிடிக்காது. ஒரு சிலர் விதவிதமான  துணி வகைகளை (கதர், பட்டு, நைலான், கம்பளி போன்றவை) விரும்பி அணிவார்கள்.

இந்த ஐம்புலன்களையும் தாண்டி,  ஆறாம்  புலனாக  மூட்டுகளில் உள்ள proprioception  மற்றும் vestibular  உணர்வுகளில் மாற்றம் இருக்கும்.  இதன் காரணமாக ஒரு சில குழந்தைகள், எதிரில் உள்ள டம்ளரை எடுக்க அவர்கள் கையை பயன்படுத்தாமல், அருகிலிருப்பவர்களின்  கையை பயன் படுத்துவார்கள்.

ஆட்டிஸம் மரபியல் ரீதியாக வரக்கூடியதா? அதற்கு என்ன தான் தீர்வு?பெற்றோர்கள் இருவரும் நன்றாக இருக்க, குழந்தைக்கு ஏன்  ஆட்டிஸம்   வந்தது? என்று கேட்பவர்கள் உண்டு. அதற்கான ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆட்டிஸம்  குறித்த விழிப்புணர்வும் புரிதலும் சமீப காலமாக தான் மக்களிடம் ஏற்பட்டு வருகிறது.

மருந்து கொடுத்து குணப்படுத்தும் ஒரு நோயல்ல ஆட்டிஸம்.  அவர்கள் ஆற்றல் மேம்பட OT  எனப்படும் 'Occupational  Therapy'  மற்றும்   பேச்சு மேம்பட 'ஸ்பீச் தெரபியும்'  கொடுக்க வேண்டும். அதற்கு பலன்கள்  நிச்சயம் உண்டு. ஆனால் முற்றிலுமாக ஆட்டிஸம் தெரபி  மூலம் குணமாகிவிடுமா? என்றால், நம்பிக்கையுடன் காத்திருங்கள் என்பதே என் பதில்.

எனது மகன் சச்சின் மிகவும் திறமை வாய்ந்த drummer.  இந்த வாத்தியத்தை அவனுக்கு யாருமே கற்றுத்  தரவில்லை, தானாகவே வளர்த்துக் கொண்டான்.  ஆனால், இருபது வயதிற்கு மேல் ஆகியும் இன்னும் எங்களை சார்ந்து அவன் செய்யும் காரியங்களும் உண்டு. இந்த விசித்திர வேற்றுமைகளைப்  பெற்றோர் கவனித்துப்  புரிந்து கொள்ள வேண்டும். திறமையை ஊக்குவித்து, உதவ வேண்டிய இடங்களில்  உதவ வேண்டும்.

ஆட்டிஸம் குழந்தைகள் உள்ள பெற்றோருக்கு, மற்றும் பொது மக்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை…
பெ
ற்றோர்கள் முதலில் குற்ற உணர்ச்சியிலிருந்தும், சுயபச்சாபத்திலிருந்தும் வெளியே வர வேண்டும். அதுமட்டுமல்லாது அவர்கள் குழந்தையின் தேவைக்கு ஏற்ப ஒரு நல்ல ஆசிரியரை தேர்ந்தெடுக்க வேண்டும்.  சச்சினுக்கு பயிற்சி அளித்த அவனது ஆசிரியை ராஜி, அவனுக்கு இரண்டாம் தாய் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த  அளவிற்கு அவனை புரிந்து கொண்டு, அவனுக்கு வாழ்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களும் கற்றுத் தந்தார். 

ஆசிரியை ராஜி
ஆசிரியை ராஜி

ஆட்டிஸம்  பாதித்த குழந்தைகளுக்கு அவர்கள் கோபத்தை ( அ) அவர்கள் கஷ்டத்தை வெளியே சொல்ல முடியவில்லை   என்பது அவர்கள் குற்றமல்லவே! இதை பெற்றோர்கள் முதலில் உணர வேண்டும். ஒரு திருமணத்திற்கோ, பொது இடத்திற்கோ அவர்களை  அழைத்துச் செல்லும் முன் பெற்றோர்கள் பேசி புரிய வைத்துவிட்டால், அவர்கள் முழுமையான ஒத்துழைப்புத் தருவார்கள்.

ஆட்டிஸம்  பாதிக்கப்பட்டவர்களை புரிந்து, அவர்களது பெற்றோரின் நிலையை அறிந்து அவர்களுக்கான மரியாதையை கொடுத்து நடக்க வேண்டியது சமுதாயத்தின் கடமை. ஆனால்,  சமுதாயம் பெரும்பாலும் அதை செய்வதில்லை.

ஆட்டிஸம் உள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் ஒரு குழு
(support  group)  அமைத்து  அவர்களுக்குள் ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள். அது மிகவும் வரவேற்கத்தக்க ஒரு விஷயம்.

டாக்டர் சரஸ் பாஸ்கர்
டாக்டர் சரஸ் பாஸ்கர்

ஆட்டிஸம் பற்றிய புரிதல் இன்றி வளர்ந்த குழந்தைகள் இன்று பெரியவர்களாய், பெற்றோராய், தம்பதிகளாய், முதலாளியாய், தொழிலாளியாய் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு
என்ன தாக்கங்கள் இருக்கும்? அவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கி,
சுயகாலில் நிற்பதற்குண்டான பயிற்சிகள் அளிக்க முடியுமா? என்பது பற்றி உளவியல் ஆலோசகர் டாக்டர் சரஸ் பாஸ்கரிடம்
  கேட்டோம்…

Undiagnosed, untreated adults இன் முக்கியமான பாதிப்புகள் (அ) குறைபாடுகள்.

  • பேச்சுத்திறன் குறைபாடு (எண்ணங்களை வெளிப்படுத்த இயலாமல் போவது).
  • உணர்வு கட்டுப்பாடு இன்மை.
  • மற்றவர்களுடன் லாவகமாக பழகும்  திறனின்மை.

இந்த தாக்கம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக வெளிப்படாது. இங்குதான் Multiple Intelligence கைகொடுக்கிறது. இங்கு பல்வகை நுண்ணறிவுத் திறனை இவர்களுக்கு தெரபி மூலமாக பயிற்சி அளிக்கலாம். இதுபோன்ற Independent Living Skills பயிற்சி அளிப்பதற்கென்றே உரிய பயிற்சி பெற்ற உளவியல் ஆலோசகர்கள் இருக்கிறார்கள்.

Individual Treatment Plan போட்டு அறிவாற்றல் சீரமைப்பு, உணர்வுகளை வெளிப்படுத்தும் முறை, நடைமுறை மாற்றங்கள் என்று பல வாழ்வியல் முறைகளை அவர்கள்  ஏற்று நடக்கக்கூடிய விதமாய் சொல்லிக் கொடுப்பார்கள். இதற்கு பாதிக்கப்பட்டவரும், அவர் குடும்பத்தினரும் ஒத்துழைப்பு தருவது மிகவும் அவசியம்.

ஸ்பெக்ட்ரம் டிசார்டர், மனவளர்ச்சியில் பாகுபாடு,  ஆலோசனை, தெரபி என்று சில வார்த்தைகள் நமக்கு புரியும், சில புரியாது. ஆனால், ஆட்டிஸம் மட்டுமல்லாது மனநலம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் உள்ள அனைத்து நபர்களையும், நாம் புரிந்து கொள்ளவேண்டாம்,  ஏற்றுக்  கொள்ளவேண்டாம், அவர்களையும், அவர்களை சார்ந்தவர்களையும் மேலும் புண்படுத்தாமல் இருக்க முயற்சிக்கலாமே! உலகையே மாற்றும் பெரிய சக்தி  அன்பு மட்டுமே!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com