முத்துக்கள் மூன்று!

முத்துக்கள் மூன்று!
Published on
தொகுப்பு: பத்மினி பட்டாபிராமன்
அறிவியல் சூத்திரங்களை வைத்து உலக சாதனை!

டலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்தவர் ஜோதிகா. புதுச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் கணிப்பொறி அறிவியல் மூன்றாம் ஆண்டு படித்து வருபவர்.

இவர் கடந்த பிப்ரவரி மாதம் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு 50X80 அடி நீள அகலத்தில் அறிவியல் சூத்திரங்களை எழுதி, அதன் மூலம் அறிவியல் அறிஞர் சி.வி.ராமனின் உருவப்படத்தை உருவாக்கி புதிய உலக சாதனைப் படைத்துள்ளார்.

சிதம்பரத்தில் பிறந்த இவர் சிறு வயதிலேயே தந்தையை இழந்து விட்டார். இவரது அம்மாதான் வீட்டு வேலை செய்து படிக்க வைத்திருக்கிறார்.

பள்ளி நாட்களில், ஆசிரியர்கள் தந்த ஊக்கத்தால் பேச்சுப் போட்டி, நடனப் போட்டி என்று கலந்து கொண்டிருக்கிறார்.

அம்மாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் உலக சாதனை செய்ய வேண்டும் என்று விரும்பியிருக்கிறார். நமது விஞ்ஞானி சர்.சி.வி.ராமன்  அவர்கள் நோபல் பரிசு வாங்கிய தினம், தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடப் படுகிறது. அதனை முன்னிட்டு, ராமன் அவர்களின் உருவப் படத்தை வரைந்து, அதற்குள், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறிவியல் சூத்திரங்களை எழுதியிருக்கிறார்.

விழிகள் அமைப்பைச் சேர்ந்த நண்பர்கள் உதவியுடன் தொடர்ந்து 18 மணி நேரம் உழைத்து,  "கலாம் உலக சாதனைப் புத்தகத்தில்" இடம் பெற்று, விருது வாங்கியிருக்கிறார் ஜோதிகா. இந்த விருதை தன் தாய்க்கும் ஆசிரியைகளுக்கும் நண்பர்களுக்கும் சமர்ப்பிப்பதாக குறிப்பிடுகிறார்.

………………………………..

அறிவியல் கண்டுபிடிப்புக்களில் சாதனை!

கனடாவைச் சேர்ந்தவர் 24 வயது ஆன் மகோசின்ஸ்கி. சிறுவயதில் இருந்தே அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் கொண்ட இவர், தன் 14 வயதில் மனித உடலின் வெப்பத்தின் மூலம் இயங்கக்கூடிய 'ஹாலோ பிளாஷ் லைட்' டைக் கண்டுபிடித்தார். இது கையிலிருக்கும் வெப்பத்தைக் கொண்டு  இயங்கக்கூடியது.

இந்த கண்டுபிடிப்பு,  பிரபலமாகி, கலிபோர்னியாவில் நடந்த 'சர்வதேச கூகுள் அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசையும், 25 ஆயிரம் டாலரையும் வென்றுள்ளது.

சூடான காபி நிரம்பிய கோப்பையின் வெப்பத்தின் மூலம் கைப்பேசியை சார்ஜ் செய்யும் 'இ-ட்ரிங்க்' எனும் கருவியை கண்டுபிடித்திருக்கிறார்.  இயற்கை சார்ந்த, சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத கண்டுபிடிப்புகளுக்காக கனடியன் அமைப்பில் இருந்து  50 ஆயிரம் டாலர் வென்றிருக்கிறார்.

எழுத்தாளர், தன்னம்பிக்கை பேச்சாளர் என பன்முகத் திறமை பெற்றவறான ஆன், தற்போது கல்லூரியில் படித்துக்கொண்டே 'மாகோட்ராநிக்ஸ்' எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

கூகுள் சயின்ஸ் கண்காட்சி,  இன்டெல் சர்வதேச அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சிகளில் கலந்துகொண்டு பரிசுகளும் பெற்றுள்ளார்.

 G7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கனடா நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஐந்து பேரில் ஒருவராக இடம் பெற்றவர் இவர்.

………………………………..

புற்று நோய் விழிப்புணர்வில் சாதனை!

புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரிப்பன்களைக் கொண்டு உலக சாதனை செய்துள்ளார் விழுப்புரம் மாவட்டம், சுந்தரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவி வாணிஸ்ரீ.

விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவருக்கு, மற்ற மாணவர்கள் பல போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பெறும் போது, தானும் ஏதாவது சாதனை செய்ய வேண்டும், அது விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் வலுத்திருக்கிறது.

இதற்காக, கடந்த பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி புதுவையில் உள்ள தனியார் கல்லூரியின் அரங்கத்தில், 10  மணி நேரத்தில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரிப்பன்களைக்கொண்டு புற்றுநோய் விழிப்புணர்வுக்கான ரிப்பன் வடிவத்தை உருவாக்கி, கலாம் உலக சாதனை அங்கீகாரம் பெற்று விருது வென்றிருக்கிறார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை, உணவு, மருந்து வகைகள், தடுப்பு வழிமுறைகள் இவற்றையெல்லாம் இதற்குள் குறிப்பிட்டிருக்கிறார். மருத்துவராகி தான் பிறந்த கிராமத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்புவதாக கூறுகிறார்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com