ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம்!

ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம்!
Published on
83 – திரைப்பட விமர்சனம்
– தனுஜா ஜெயராமன்

பில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதன்முறையாக கிரிக்கெட் உலக கோப்பையை வென்ற சரித்திர  நிகழ்வை மையக் கருத்தாக கொண்ட திரைப்படம்.  எதிர்பார்ப்புகள் ஏதுமற்ற இந்திய அணி இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் எப்படி கோப்பையை தட்டி செல்கிறார்கள் என இயல்பாக, நடந்ததை மிகைப்படுத்தாமல், படமாக்கியிருக்கிறார்கள் .

கபில் தேவ்வாக நடிக்கும் ரன்வீர் சிங் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி  இருக்கிறார். மகிழ்ச்சி, சோகம், அவமானம் என பல்வேறு முகபாவங்களை இயல்பாக வெளிகாட்டுகிறார்.

இத்திரைப்படத்தை கபிர்கான் இயக்கியுள்ளார்.  காலிறுதிக்கு முன்பே இங்கிலாந்திலிருந்து இந்தியா திரும்ப டிக்கெட் போடும் இந்திய கிரிக்கெட் சங்கம். அதனை மாற்ற அடிக்கடி டிக்கெட் நிலவரத்தை விசாரிக்கும் டீம் மானேஜர். இந்திய கிரிக்கெட் அணியை ஏகமாய் விமர்சிக்கும் இங்கிலாந்து பத்திரிக்கைகள் என சுவராசியத்திற்கு  கதையில் சற்றுமே பஞ்சமில்லை.

கபில்தேவின் அரைகுறை ஆங்கிலம், ஶ்ரீகாந்தின் அவசரகுடுக்கை தனமான துறுதுறு நடவடிக்கைகள், ஏனைய இந்தியன் டீமின்  வெகுளித்தன காமெடிகள் என ஆங்காங்கே ஹாஸ்யத்திற்கும் பஞ்சமில்லை.

இலவச உணவிற்காக ஓடுவதும் ,  தன் துணிகளைத் தானே துவைத்துப் போடுவதும் 1983ற்கு முன்பு இந்திய கிரிக்கெட் சங்கத்தின் நிதிநிலையை அப்பட்டமாக பறைசாற்றுகிறது. இறுதிகாட்சியில் இந்தியா உலக கோப்பையை வென்ற அந்த இரவில் சாப்பிட உணவு கிடைக்கவில்லை என்ற தகவலை நிஜ கபில்தேவ் சொல்லும் போது தற்போது இந்திய கிரிக்கெட் சங்கம் மற்றும் கிரிக்கெட் வீரர்களின் அபரிமிதமான வசதி வாய்ப்புகள் கண்முன்னே வந்து போகிறது. இந்திய கிரிக்கெட்டின் தற்போதைய மாபெரும் வளர்ச்சிக்கு அந்த 83 குழுவினரின் உழைப்பும் அர்பணிப்பும் தான் காரணம் என்றால் மிகையில்லை.

கபில்தேவ் மனைவியாக வரும் தீபிகா படுகோனே , ஶ்ரீகாந்தின் கதாபாத்திரத்தில் வரும் ஜீவாவும் ரசிக்க வைக்கிறார்கள். மொகிந்தர் அமர்நாத், கபில்தேவ் என நிஜமுகங்களும் அவ்வப்போது வந்து செல்கின்றனர்.

ஏதோ தொழில்நுட்ப கோளாறுகளால் இதுவரை படம்பிடித்து வைக்காத 83- உலகக் கோப்பையில், சிம்பாப்வே அணிக்கு எதிராக கபில்தேவின் 175 நாட்-அவுட் சாதனையை இப்படத்தில் கண்முன்னே நிறுத்துகிறார்கள்.  படத்தின் பலகாட்சிகள் நம்மை புல்லரிக்க வைக்கின்றன. படத்தின் இடையே  மிக லேசாக 83 ஆம் ஆண்டுக்கான அரசியல் மற்றும் போர் நிலவரங்களை தொட்டு செல்கிறார்கள். இந்தியாவில் முதன்முதலாக லைவ் கிரிக்கெட் காட்சிகளை மக்கள் பார்க்க துவங்கியது அப்போது தான் என்ற தகவலையும் சொல்லி போகிறார்கள்.

இந்தியா இறுதிப் போட்டியில் கோப்பையை தட்டி செல்லும் வரலாற்று நிகழ்வை காண இயலாத பலருக்கும் இந்த திரைப்படம் ஒரு விஷூவல் ட்ரிட்.

ஒரு விளையாட்டு திரைப்படத்திற்கான முழு இலக்கணங்களோடு சுவராசியத்திற்கு பஞ்சமில்லாத இத்திரைப்படத்தை கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்ல அனைவருமே கண்டுகளிக்கலாம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com