விருதுக் காட்டில் கணிதப் புலிகள்! 

விருதுக் காட்டில் கணிதப் புலிகள்! 

Published on

 –ஜி.எஸ்.எஸ்.

புனேவைச் சேர்ந்த அனன்யா ராஜஸ், டெல்லியைச் சேர்ந்த அனுஷ்கா மற்றும் குஞ்ஜன், நாசிக்கைச் சேர்ந்த சனிகா அமோல் போரடே ஆகிய நால்வரும் கொண்டாட்ட மனநிலையில் இருக்கிறார்கள்.  அவர்களால் இந்தியாவும் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இவர்கள் விளையாட்டில் சாதனை படைக்கவில்லை.  உடல் திறமைக்கு மாறாக ​மூளைக்கு சவால் விடும் ஒன்றில் சாதனையை நிகழ்த்தியிருக் கிறார்கள்.  அது கணிதவியல்.  ஹங்கேரியி​ல் எகெர் நகரில் நடைபெற்ற சர்வதேச கணிதவியல் ஒலிம்பியாட் போட்டிகளில் வெண்கலப் பதக்கத்தை நம் நாட்டுக்குப் பெற்றுத் தந்திருக்கிறார்கள்.

மேலே குறிப்பிட்ட நால்வரும் பத்தாவது மற்றும் பன்னிரண்டாவது வகுப்பில் படிக்கு​ம் மாணவிகள்.   

சர்வதேச கணித ஒலிம்பியாட் என்பது என்ன என்பதை அறிந்தால் இந்த சாதனையின் வீச்சு தெளிவுபடும். 

ல நாட்டு மாணவர்கள் பங்கு கொள்ளும் ஒரு சர்வதேச கணிதவியல் போட்டி இது.  ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் எந்தப் பள்ளி மாணவரும் இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியும்.   20 வயதிற்கு உட்பட்டவராக போட்டியாளர் இருக்கவேண்டும் என்பது கட்டாயம்.

முதன்முதலில் இந்த போட்டி 1959இல் ருமேனியாவில் நடந்தது.  ​நூறுக்கும் மேற்பட்ட நாடுகள் இதில் ஆண்டுதோறும் கலந்து கொள்கின்றன. ஆறு மாணவர்களைக் கொண்ட குழுவாக இதில் பங்கேற்கலாம்.  இந்தப் போட்டியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள மாணவர்களுக்கு ஒவ்வொரு நாட்டிலும் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒரு தனிநபர் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.  உலக அளவில் பெரும் அங்கீகாரம் இந்த விருதுக்கு அளிக்கப்படுகிறது.

ஒரு நாட்டிலிருந்து அதிகபட்சம் ஆறு மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் இதில் கலந்து கொள்ள முடியும்.   எண் கோட்பாடு, இயற்கணிதம், சேர்வியல், வடிவியல் போன்ற நான்கு கணித உட்பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.

இதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு விடையளிக்க அதிக நேரம் ஆகும்.  புதிய முறையில் சிந்திக்கும் அவசியமும் நேரிடும்.  இறுதிச் சுற்றில் கலந்து கொள்பவர்களுக்கு ஆறு கேள்விகள் கேட்கப்படும்.  முதல் நாள் மூன்று கேள்விகள், இரண்டாம் நாள் மூன்று கேள்விகள் என்று கேட்கப்படும்.  ஒவ்வொரு நாளும் தீர்வுகளை அளிக்க நான்கரை மணி நேரம் வழங்கப்படும்.  ஒரு தீர்வுக்கு அதிகபட்சம் ஏழு மதிப்பெண்கள்.  எனவே ஒரு மாணவர் அதிகபட்சம் 42 மதிப்பெண்கள் பெறமுடியும்.  இப்படி பங்கேற்கும் மாணவர்களின் மதிப்பெண்களைக் கூட்டி கிடைக்கும் மொத்த மதிப்பெண்கள் மூலம் தரவரிசை தயார் செய்யப்படுகிறது.

ஒரு நாட்டின் ஆறு மாணவர்களும் அனைத்துக் கேள்விகளுக்கும் முழுமையாக தீர்வு அளித்தால் அந்த நாட்டுக்கு 252 மதிப்பெண்கள் கிடைக்கும்.  அதிகபட்ச மதிப்பெண்கள் பெறும் முதல் மூன்று நாடுகளுக்கு முறையே தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் அளிக்கப்படும்.

எந்த கேள்விக்காவது மிக அற்புதமாக எதிர்பாராத கோணத்தில் விடை அளிக்கும் மாணவர்களுக்கு 'ஹானரபிள் மென்ஷன்' என்ற கெளரவம் வழங்கப்படும்.

மும்பையில் உள்ள ஹோமி பாபா அறிவியல் கல்வி மையத்தில் மேற்படி
ஒலி​ம்பியாவில் பங்கேற்க மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது (இயற்பியல், வேதியல், உயிரியல், வானியல் போன்ற பல சர்வதேசப் போட்டிகளிலும் பங்கேற்க மாணவர்களை இங்கு தயார் செய்கிறார்கள்).    மேலே குறிப்பிட்ட நான்கு மாணவிகளும் இந்தியா திரும்பியதும் அவர்களுக்கு இந்த மையத்தில்  பாராட்டு விழா நடந்தது.

தனி நப​ராகப் பெறும் விருதுகளில் அனன்யாவும் அனுஷ்காவும் வெறும் ஒரே மதி​ப்பெண்ணில் வெள்ளிப் பதக்கத்தை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.   அதனாலென்ன, ஒரே மாணவர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை இந்த ஒலிம்பியாடில் கலந்து கொள்ளலாமே!  வெள்ளியையும்
த​ங்கத்தையும் அடுத்த முறை அறுவடை செய்து விடமாட்டார்களா என்ன?

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com