பாட்டொன்று கேட்டேன்…

பாட்டொன்று கேட்டேன்…
Published on
பகுதி-1
இது மங்கையர் மலரின் விவிதபாரதி…

றுபதுகளின் ஜாலியான இளைஞன். தமிழ் திரை உலகில் எம்ஜிஆர் , சிவாஜிக்குப் பிறகு அறுபதுகளில்   இவரும் ஜெய்சங்கரும் ஒரு சகாப்தம்.  இவரின் ஸ்டைல் அப்போதைய ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகள் இவரின் தீவிர ரசிகர்களாக இருந்தனர். இவரின் நடை உடை பாவனையை பலரும் காப்பி அடித்தனர். இவரது பெரும்பாலான படங்கள் 150 நாட்களை தாண்டி ஓடியவை. இவரின் சில மேனரிசங்கள் – இவரின் புன்னகை, இவரின் ஸ்டைல், ரசிகர்களை (குறிப்பாக ரசிகைகளை) இவர் பால் ஈர்த்தது. கண்டுபிடித்துவிட்டீர்களா யாரென்று? ஆம் நீங்கள் கண்டுபிடித்தது மிகவும் சரிதான். ஒளிப்பதிவாளர் பி.என் சுந்தரம் மூலம் , இயக்குனர் ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை படத்தில் 1964ஆம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்தான் நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான ரவிச்சந்திரன் அவர்கள். இந்தப் படத்தில் "விஸ்வநாதன் வேலை வேண்டும் ". "உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா" இந்த பாடல்கள் பட்டித்தொட்டியெங்கும் கலக்கியது உங்களுக்கு எல்லாம் நினைவிருக்கலாம். கதாநாயகனாக நடித்து சில வருடங்களுக்கு பிறகு குணச்சித்திர வேடத்திலும் நடித்து தூள் கிளப்பியவர் இவர்.

இவர் வில்லனாக நடித்த ஊமைவிழிகள் படத்தை யாராலும் இன்றளவும் மறக்க முடியாது. 60, 70 களில் கனவு நாயகனாக இவர் திரையில் பாடிய பாடலை தான் இன்று நாம் நினைத்தாலே இனிக்கும் பகுதியில் கேட்கப் போகிறோம்… 'சபதம்' திரைப்படத்தில் ஜி. கே. வெங்கடேஷ் ஸார் இசையமைக்க கண்ணதாசனின் வரிகளில் இளமையான எஸ்.பி.பி ஸார் பாடும் பாடல்…

 "தொடுவதென்ன தென்றலோ மலர்களோ

 பனியில் வந்த துளிகளோ கனிகளோ உடலெங்கும் குளிராவதென்னஎன் மனமெங்கும் நெருப்பாவதென்ன தேரில் ஏறி தேவதை வந்து – இங்கு நீரில் ஆடும் என்னுடன் நின்று உடல் தேய்த்து விட்டாளோ முகம் பார்த்து விட்டாளோ இன்று சித்திர முத்தங்கள் சிந்திய ரத்தினம் யாரோ அவள் யாரோம்ம்ம்ஆஆஆஆ .. தொடுவதென்ன தென்றலோ மலர்களோ! 

காமதேனு பால் கறந்தாளோ, அதில் கன்னி மங்கை தேன் கலந்தாளோ, அதை நடக்க விட்டாளோ, என்னை மிதக்க விட்டாளோ…

 இந்த பட்டு முகம் கொண்ட பட்டு குலமகள் யாரோ? அவள் யாரோ? ... ம்ம்ம்ஆஆஆஆ.. தொடுவதென்ன தென்றலோ மலர்களோ!"

இசையமைப்பாளர் ஜி வெங்கடேஷ் அவர்களின் இசையில் இளமை ததும்ப பாடலைப் பாடியிருப்பார் எஸ்.பி.பி அவர்கள். இந்தப் பாடலில் எஸ்.பி. பி கொஞ்சுவார் குழைவார்… ஆஹா ஹா என்ன இன்பம். கேட்டுப் பாருங்கள்! உங்களுக்கே புரியும் அதிலும் அவர் குறிப்பாக ம்ம்ம்… என்று 'ஹம்' பண்ணும் விதம் அவரைத் தவிர வேறு யாராலும் செய்திருக்க முடியாது . ஜில் தண்ணியில நாமே குளிக்கிற மாதிரி என்னமா ஒரு இசை போட்டிருப்பார் ஜி.கே. வெங்கடேஷ்.

இந்தப் பாடலின் இன்னொரு சிறப்பு எத்தனை முறை கேட்டாலும் முதல் முறை கேட்பது போலவே புத்தம் புதுசாக இருப்பதுதான். பாலு சாரின் உச்சரிப்பில்… ஒவ்வொரு வரியும்/வார்த்தையும் நம்மை எங்கோ மாய உலகத்திற்கு அழைத்துச் செல்லும். எவ்வளவு வருத்தங்கள் நம் மனதில் இருந்தாலும், இந்தப் பாடலைக் கேட்கும்போது மனம் தன்னாலேயே ரிலாக்ஸ் ஆகிவிடும்.  டீசண்டான காட்சியமைப்பு.(இப்ப வரும் படங்களிலும் காட்சி அமைப்புகள் இருக்கிறதே… ஆண்டவா எங்களை காப்பாற்று) படத்தில் ரவிச்சந்திரன் சார் கற்பனை பண்ணி பாடுவதாக அமைந்திருக்கும். (கற்பனை என்றாலே எப்போதும் அழகானது சுகமானது) எஸ்.பி.பி அவர்களின் குரலில் ததும்பும் இளமை+ இனிமை, துள்ளல் நடையில் எஸ்.பி.பி  பாடும் அழகே அழகு. பாடல் முழுவதிலும் என்னமாய் குரல் குழையும். ரவிச்சந்திரன் சாரின் முகபாவங்கள் அவ்வளவு அருமையாக பொருந்தியிருக்கும். இந்தப் பாடலில் கே ஆர் விஜயா அம்மாவைப்பற்றி சொல்லவே வேண்டாம். கண்கள் பேசும். அதிலும் கடைசியாக , பாடலை முடிக்கும் தருணத்தில் ரவிச்சந்திரன் சார் துண்டை தொடும் அழகு இருக்கிறதே… அவ்வளவு அழகாக இருக்கும். (இவ்வளவு விஷயங்கள் இந்த பாடலைப் பற்றி சொல்லிவிட்டு ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லாமல் விடுவதா?  இந்த பாடலின் இசையமைப்பாளர் ஜி.கே வெங்கடேஷ் அவர்கள் தான் நம் இசைஞானியின் குரு. இதை அவரே பல முறை பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்.)

உங்களுக்கும் இந்த பாடலைக் கேட்கணும்னு இருக்கா? கேளுங்க கேளுங்க… சந்தோஷமா கேளுங்க நினைத்தாலே இனிக்கும்.

என்றென்றும் அன்புடன்
ஆதிரை வேணுகோபால்
Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com