திரைப்பட விமர்சனம் “ஆக்சிஜன்”.

திரைப்பட விமர்சனம் “ஆக்சிஜன்”.
Published on
-சுசீலா மாணிக்கம்.

"ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்" நயன்தாரா நடிக்கும் "ஆக்சிஜன்".
எழுத்து இயக்கம் G.S.விக்னேஷ்.

மீபத்தில் OTT – ல் ரிலீசான படம் O2. (Oxygen) பெயர் போடும் போதே அனிமேஷன் குருவியும் அதன் தாய்மை பரிதவிப்பும் தொடர்ந்த அதன் பசுமை உயிர்ப்பு போராட்டமுமாய் இன்றைய இயந்திர யதார்த்த வாழ்வை அழகாக சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.

இரண்டு மணி நேர திரில்லர். கோயம்புத்தூரிலிருந்து கொச்சின் செல்லும் பேருந்தில் ஆரம்பிக்கிறது மெயின் கதை. தன் சகாவுடன் ஓர் அரசியல்வாதி – காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் தன் தந்தையுடன் ஒரு பெண் – தனியே அவள் காதலன் -வெண்ணிற போதைப்பொருள் பையுடன் ஒரு காவல்துறை அதிகாரி – சிறையில் இருந்து விடுதலையாகி தன் தாயை ஒரு முறையேனும் பார்த்துவிடவேண்டும் என்ற தவிப்புடன்   நடுத்தர வயதுடைய ஒரு நபர் – நாளை நிச்சய தாம்பூலம் நடக்கவிருக்கும் ஓர் புது மாப்பிள்ளை – பேருந்து ஓட்டுனர் , கிளீனர் – இவர்களுடன் தனது 8 வயது மகனின் மருத்துவ சிகிச்சைக்காக நயன்தாரா  நோயுற்ற மகன் வீராவுடன். இவர்கள் உட்பட பேருந்து முழுவதும் நிரம்பி விடுகிறது. ஓட்டுனர் பிராத்தனை முடித்து விட்டு வண்டியைஎடுக்கிறார்.

அந்த குளிர்சாதன பேருந்து அழகான தேர் போல அசைந்து அசைந்து தனது பயணத்தை ஆரம்பிக்கிறது. பயணிகள் ஆசுவாசமாய் தத்தம் இருக்கைகளில் சாய்ந்து அமர்ந்து கொள்கிறார்கள்.

Cystic fibrosis எனும்  நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் வீரா சாதாரண மனிதர்களைப் போல மூச்சுவிட இயலாது. O2 support டில் தான் சுவாசிக்க இயலும். எப்போதும் oxygen cylinder  உடன் தான் இருக்கிறான் வீரா.  வெளியிடங்களுக்கு செல்லும் சமயமெலாம் எக்ஸ்ட்ரா cylinder ருடன் தான் இருக்கிறார் நயன்தாரா.

பஸ் வாளையாறு செக்போஸ்டில் தேங்கி நிற்கிறது. ஏதோ ஆக்சிடென்ட்.
4 – 5 மணி நேரம் தாமதமாகும் என அறிந்து, பஸ் ஓனரின் கட்டளையின்படி கொச்சின் போகிறவர்களை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவர்களை இறக்கி வேறு ஒரு வேனில் அனுப்பிவிட்டு நாம் மேற்சொன்ன நபர்களுடன் வேறு வழியில் செல்கிறது பேருந்து.

அந்த புது மாப்பிள்ளை மட்டும் பஸ் , வேன் இரண்டையும் தவற விட்டுவிட்டு வேறொரு ஜீப்பில் லிஃப்ட் கேட்டு  பேருந்தை துரத்திச் செல்ல… இரு பக்கமும் இயற்கை அழகுடன் இனிய பயணத்தை தொடர்கிறது அந்த பேருந்து. சுற்றிலும் மலைகள்- கூடவே மழையும்…

திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் பஸ் முழுவதும் மண் சரிந்து மலைபோல் மூடிக்கொள்ள முழுதாய் மண்ணுக்குள் புதைந்து கொள்கிறது அந்த பேருந்து. புதைந்த நிகழ்வு வெளியே தெரியவே பலமணிநேரம் ஆகிவிட (அதுகூட அந்த புது மாப்பிள்ளை மற்றும் நயன்தாராவின் தம்பியின் தொடர் முயற்சியால்) தேசிய பேரிடர் மீட்பு குழு ஸ்பாட்டுக்கு விரைகிறது.

செல் சிக்னல் முழுவதுமாய் அற்றுவிட, திடீர் திடீரென வந்து மோதும் பாறைகளாலும் மண் கட்டிகளாலும் பேருந்தினுள் ஏற்படும் அதிர்வுகளும், வெளிச்சப் பற்றாக்குறை, எப்படி தப்பிக்க போகிறோம் என்ற பயமுமாக… உயிர் மீட்சி போராட்டம் உள்ளே –  உயிர் மீட்பு போராட்டம் வெளியே.

உள்ளே இருக்கும் எட்டு பேருக்கும் இடையேயான பாசப் பிணைப்பு, அதன் பின்னான கருத்து வேறுபாடுகள்,சண்டை, ஒரு கொலை, ஆக்சிஜன் பற்றாக்குறை ,கார்பன்-டை-ஆக்சைடு மிகுதலால் ஏற்படும் விளைவுகள், hallucination, behaviour changes என ஒரு மாபெரும் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமயம் வீராவுக்கு அடிப்படைத் தேவையான எக்ஸ்ரா ஆக்சிஜன் சிலிண்டர் அங்கிருக்கும் ஒருவரால் பிடுங்கிக் கொள்ளப்பட, " நாம் இப்போது ஒர் சவப்பெட்டிக்குள் இருக்கிறோம் " என நயன்தாரா படத்தில் ஓரிடத்தில் கூறியது நினைவுக்கு வர நாம் கண்கள் தெறிக்க பார்த்துக்கொண்டே இருக்கிறோம்.

அரசாங்கத்தின் பேரிடர் மீட்பு குழு இவர்களை மீட்க வெளியே போராட, உள்ளே இவர்கள் ஆக்சிஜனுக்காய் போராட… அப்பப்பா… பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கே மூச்சு திணறுகிறது.

மீட்புக் குழு அனைவரையும் உயிருடன் மீட்டதா? வீராவுக்கு என்ன ஆனது என்பதுதான் மீதிக்கதை. சும்மா granted தானே நாம் கருதும் உயிர் மூச்சு ஆக்சிஜனின் முக்கியத்துவத்தை மிக அழகாக சொல்கிறது இந்தப் படம். மரங்கள் அழிப்பு, நிலச்சரிவு, நீர் நில மாசு ,மனித மனத்தின் மாறுபட்ட பக்கங்கள்,  இயற்கை நிலைபாட்டுக் கருத்துக்கள், ஆயிரம் இருந்தாலும் மனிதனின் கடைசி ஷணம் கை கொடுக்கப் போவது இயற்கைதான் என படம் முழுவதும் விழிப்புணர்வு கருத்துக்கள் தெளிக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.

" பெப்பரோமியா பெல்லுசிடா"

"ஒரு மனிதன் சும்மா இருந்தாலே ஒரு நிமிஷத்துக்கு 11 லிட்டர் காற்று தேவை" "Nature takes the most ruthless form when she's threatened " போன்ற வாக்கியங்கள் படம் முடிந்த பின்னும் மனதுக்குள் எதிரொலிக்கின்றன. உயிர் மூச்சாம் ஆக்சிஜனின் முக்கியத்துவம் அறிவதற்காக இயற்கை தந்த பேரிடர்தான் இந்த கொரோனாவோ  என யோசிக்கவும் வைக்கிறது இந்தப் படம். பள்ளி மாணவர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் இது.

ரு தாய் தன் பிள்ளைகளின் நலனுக்காய் தன் உயிரையும் பொருட்படுத்த மாட்டாள் என்பதை மிகச்சரியான பின்னணி இசையுடன் எடுக்கப்பட்ட விதம்தான் கதையின் பலம். சிலிண்டரில் ஆக்சிஜன் அளவு குறைய குறைய ஒரு தாய் தவிக்கும் பரிதவிப்பு , யாருக்கும் தெரியாமல் எக்ஸ்ட்ரா சிலிண்டரை ஒளித்து வைக்கும் பாசப்பிணைப்பு, அது பறிபோன நிலையில் காட்டும் சீற்றம், கைப்பற்ற போராடும் போராட்டம் என தாய்மை உணர்வை மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார் நயன்தாரா. ஒரு தாயின் உயிர் காக்கும் போராட்டம் – உயிரோட்ட போராட்டம்தான் இந்த ஆக்சிஜன்.

வழக்கம்போல நயன்தாராவின் நடிப்பு வெகு சூப்பர்.அதிலும் தாய்மையை வெளிக்காட்டும் உணர்வுகள் மிக அழகு ஆழம். மற்ற கதாபாத்திரங்களும் நடிக்கவில்லை அவரவர் பாத்திரங்களாகவே வாழ்ந்து இருக்கிறார்கள் என்றுதான் கூறவேண்டும்.

சில இடங்களில் மனம் லாஜிக் கேள்விகள் கேட்டாலும் படத்தின் விறுவிறுப்பு அதையெல்லாம் மீறி விடுகிறது. அறிமுக இயக்குனர் விக்னேஷ் மற்றும் படத்தின் விறுவிறுப்புக்கேற்ப சுறுசுறுப்பான இசையமைத்துள்ள விஷால் சந்திரசேகருக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்…

இவ்வளவு நாட்கள் நாம் சுவாசித்த ஆக்சிஜனை நேரில் பார்த்த அனுபவம். படம் முடிந்த பின் பல நீண்ட பெருமூச்சுகள் விட்டுத்தான் நமது சுவாச பாதையை சீராக்கிக் கொள்ள வேண்டி இருக்கிறது.
ஆக்சிஜன் அவசியம்…

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com