மூன்றாம் உலகப்போரைத் தவிர்த்த இரண்டு ரஷ்யர்கள்!

மூன்றாம் உலகப்போரைத் தவிர்த்த இரண்டு ரஷ்யர்கள்!
Published on
-வெங்கடராமன் ராமசுப்ரமணியன்

ரண்டாம் உலகப்போருக்குப் பின்பு, அமெரிக்கா மற்றும் ரஷ்யா என்ற இரண்டு வல்லரசுகளுக்கு இடையே பனிப்போர் தொடங்கியது. இந்தப் பனிப்போரில் இரண்டு நாடுகளும் மிகப்பெரிய ஆயுத சேகரிப்பில் இறங்கின. பனிப்போர் உச்சகட்டமாக இருந்த போது, மூன்றாம் உலகப்போர் ஆரம்பித்திருந்தால், அது அணு ஆயுதங்களின் பயன்பாட்டின் காரணமாக, கோடிக்கணக்கான மக்களை நொடிகளில் கொன்று குவித்திருக்கும். அத்தகைய சூழல்கள் வரலாற்றில் குறிப்பாக இரண்டு முறைகள் வந்தன. அந்த இரண்டு சூழ்நிலைகளிலும், இரண்டு ரஷ்யர்களின் நிதானமான, உணர்ச்சிவசப்படாத, அமைதியான ஆணித்தரமான முடிவுகளால் மூன்றாவது உலகப்போர், குறிப்பாக அணு ஆயுதப் போர் தவிர்க்கப்பட்டது.

அந்த இரண்டு ரஷ்யர்களுக்கு உலகம் கடமைப் பட்டுள்ளது. நாம் அவர்களை நினைவு கூர்ந்து, நன்றி கூறுவது அவசியமான ஒன்று.

அவர்களைப் பற்றி பார்ப்போம்.

  1. வசிலி ஆர்கிபோவ்(Vasili Archipov) – கப்பற் படை அதிகாரி உலகை காப்பாற்றிய தினம் அக்டோபர் 27, 1962 –
  2. ஸ்டானிஸ்லவ் பெட்ரோவ்(Stanislav Petrov) – விமானப் படை அதிகாரி உலகை காப்பாற்றிய தினம் செப்டம்பர் 26, 1983.

அவர்கள் இருவரும் எவ்வாறு உலகைக் காத்தனர் என்று விரிவாகக் காண்போம்.

வசிலி ஆர்கிபோவ்:

1962ம் ஆண்டு, அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே பனிப்போர் உச்சகட்டமாக இருந்த காலம். அமெரிக்கா ஐரோப்பாவில் துருக்கி, இத்தாலி போன்ற நாடுகளில் அணு ஆயுத ஏவுகணைத் தளங்களை நிறுவியது. இதன் மூலம், அமெரிக்காவினால் ரஷ்ய தலைநகரான மாஸ்கோவினை எளிதில் தாக்க முடியும். இதே நேரத்தில், அமெரிக்காவிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, தனது நாட்டில் ஏவுகணைத் தளங்களை நிறுவுமாறு ரஷ்யாவினை கியூபா கேட்டுக் கொண்டது. ரஷ்யாவும் இதற்கேற்றவாறு தனது ஏவுகணைகளை கியூபாவில் நிறுவத் தொடங்கியது. இதன் காரணமாக, கோபமடைந்த அமெரிக்கா, கியூபாவின் மீதான போர் தளவாடங்களை கொண்டு செல்லுதலுக்கு தடை விதித்தது. சாதாரண பயணங்கள் அனுமதி உண்டு. ஆயுதங்கள் பயணிக்க அனுமதி இல்லை. அமெரிக்காவின் கடற்படை கியூபாவினை சுற்றி வளைத்து, எந்த ஒரு ஏவுகணையும் கியூபா செல்லாதபடி பாதுகாத்து வந்தது. இது கியூபா ஏவுகணை நெருக்கடி என்று வரலாற்றில் குறிக்கப்படுகிறது.

அக்டோபர் 27, 1962 அன்று, ரஷ்யாவிலிருந்து மிக ரகசியமாக B59 நீர்மூழ்கி கப்பல் மற்ற சில நீர்மூழ்கி கப்பல்களுடன், கியூபாவிற்கு சென்றது. அது அணுகுண்டு ஏவுகணையை தாங்கிச் சென்றது. இந்த நீர்மூழ்கிக் கப்பலை அமெரிக்காவின் கப்பற்படை கண்டு, அதனை நீருக்கு மேலே கொண்டுவருவதற்காக சில சிறிய குறைந்த ஆழம் செல்லும் வெடிகுண்டுகளை நீர்மூழ்கி கப்பலுக்கு அருகே வீசியது. இவை எச்சரிக்கை குண்டுகளே. இந்த வெடிகுண்டுகள் ஆபத்தானவை அல்ல. இவை கையெறி குண்டுகளைப் போன்றவையே. நீர்மூழ்கிக் கப்பல், நீரின் ஆழத்தில் இருந்தபடியால், மாஸ்கோவுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. யுத்தம் ஆரம்பித்துவிட்டதா இல்லையா என்று அறிய முடியவில்லை. யுத்தம் போன்ற நேரத்தில், ஆயுதங்களை கையாள முழு சுதந்திரம் ரஷ்யாவினால் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. எந்த நேரமும் அவர்கள் கொல்லப்படலாம் என்ற பயம் ஏற்பட்டது.  நீர்மூழ்கிக் கப்பல் படைக்கு மூவர் தலைமை இருந்தது. அப்போது, அணுகுண்டு ஏவுகணையை ஏவலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய, மூவரின் அனுமதியும் வேண்டும்.

வாலன்டின் சவிஸ்கி நீர்மூழ்கி கப்பலின் மீகாமனாக இருந்தார். இவண் மஸலெனிகோவ் நீர்மூழ்கி கப்பலின் துணை அரசியல் அலுவலராக இருந்தார். வசிலி ஆர்கிபோவ் நீர்மூழ்கி கப்பல்களின் அணிவகுப்பிற்கு தலைவராக இருந்தார். மற்ற இருவரான, சவிஸ்கி, மஸலெனிகோவ் அணுகுண்டு ஏவுகணையை ஏவலாம் என்ற முடிவுக்கு வாக்களித்தனர். கப்பலின் மீகாமன் வாலன்டின் சவிஸ்கி மிகவும் கோபத்திலிருந்தார். அமெரிக்காவினை நோக்கி அணு ஆயுதத்தை திருப்புவதில் குறியாக இருந்தார். நீர்மூழ்கி கப்பலில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருந்தது. மின்கலன்களின் செயல்பாடு குறைவு ஏற்பட்டது.

அதனால், கிட்டத்தட்ட 50 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் நிலவியது. கடும் வெப்பத்திலும் ஆர்கிபோவ் பிரச்சனைகளை அமைதியாக, உணர்ச்சிவயப் படாமல், அணுகி, அணு ஆயுதத்தின் பயங்கரங்களை உணர்ந்து, அதனை தவிர்க்க விரும்பினார். அதற்கு ஒரு வருடம் முன்பு, 1961ம் ஆண்டு, அணுஆயுத நீர்மூழ்கி கப்பலின் கதிரியகத்தில் பாதிக்கப்பட்டு, அதன் விளைவுகளை உணர்ந்தவர் அவர். அதன் காரணமாக, மற்ற இருவரும் அனுமதி தந்தபோதும், ஆர்கிபோவ் அணு ஆயுதத்தை ஏவ அனுமதி தர மறுத்துவிட்டார். கடுமையான சூழ்நிலையில் ஆர்கிபோவ் நிதானமாக, மென்மையாகப் பேசி, மற்றவர்களை தனது யோசனையை ஏற்றுக் கொள்ள வைத்தார். 'குண்டுகள் கப்பலை நோக்கி விழவில்லை. தள்ளியே விழுகின்றன. இது நம்மை நோக்கிய தாக்குதலில்லை' என்று அவர்களுக்கு புரிய வைத்தார். இதே நேரத்தில், அமெரிக்க அதிபர் கென்னடி, நீர்மூழ்கி கப்பல் ஏதேனும் தாக்குதலில் ஈடுபடுமோ என்ற கவலையில் ஆழ்ந்தார். ஆர்கிபோவ் ஆலோசனைப்படி, கப்பல் மேலெழும்பியது. கப்பல் மறுபடி ரஷ்யாவை நோக்கி பயணித்தது. அடுத்த மாதத்திலேயே கியூபாவின் பீரங்கி நெருக்கடி, கென்னடி மற்றும் குருஷேவின் பேச்சுவார்த்தையினால் முடிவுக்கு வந்தது. ஒருவேளை ஆர்கிபோவ் அணுஆயுத தாக்குதலுக்கு ஆதரவு அளித்திருந்தால், ஹிரோஷிமா, நாகசாகி போன்று பெரிய வெடிகுண்டு அமெரிக்காவில் பல்லாயிரக்கான மக்களை கொன்றிருக்கும். பதிலுக்கு, அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருப்பின், அது மூன்றாம் உலகப் போருக்கு வழி வகுத்திருக்கும்.

1998ம் ஆண்டு, 72வது வயதில் புற்றுநோயினால் ஆர்கிபோவ் மரணமடைந்தார். புற்றுநோய் அணுஆயுத கதிரியக்கத்தினால் நிகழ்ந்திருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.

ஸ்டானிஸ்லவ் பெட்ரோவ்:

பெட்ரோவ் சோவியத் ரஷ்யாவின் விமானப்படையில் அதிகாரியாக இருந்தவர்.1983ம் ஆண்டு, அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்குமிடையான பனிப்போர் உச்சகட்டத்தில் இருந்த நேரம். மாஸ்கோவின் தெற்கிலிருந்த, ஸெர்புகோவ் – 15 என்ற ரகசிய நகரத்தில், மிகப் பெரிய பதுங்கு குழியில், ஓகோ அல்லது கண் என்றழைக்கப்பட்ட, அமெரிக்காவின் அணு ஆயுத தாக்குதலை கண்காணிக்கும் எச்சரிக்கை மையத்தினை, செப்டம்பர் 26, 1983 அன்று பெட்ரோவ் நிர்வகித்து வந்தார். சில வாரங்களுக்கு முன்பு தான், சோவியத் விமானம் ஒன்று அமெரிக்க பயணிகள் விமானத்தினை தவறுதலாக சுட்டு வீழ்த்தியதன் காரணமாக 269 பயணிகள் கொல்லப்பட்டிருந்தனர். அமெரிக்க அதிபர் ரீகன், ஐரோப்பாவில் அமெரிக்காவின் அணுஆயத பாதுகாப்பிற்கு திட்டங்களை அறிவித்திருந்தார்.

அப்போது, ஓகோ மையத்தில் திடீரென அபாய விளக்குகள் எரியத் தொடங்கின. அமெரிக்காவிலிருந்து தொடர்ந்து அணுகுண்டு ஏவுகணைகள் ஏவப்படுவதாக எச்சரிக்கை மையம் கூறியது. ஓகோ எச்சரிக்கை மையத்தில், தவறாக அபாய விளக்குகள் எரிய வாய்ப்புகள் குறைவு. அந்த பதுங்கு குழியில், எல்லாரும் மிகவும் பதட்டத்தில் இருந்தனர். பெட்ரோவ் இத்தகைய அபாய விளக்குகள் தவறாக இருப்பதற்கு 50-50 சாத்தியக்கூறுகள் உள்ளன என்று கருதினார். மூன்றாவது உலகப்போர் உருவாக தான் காரணமாக இருக்க கூடாது என எண்ணினார். பதில் தாக்குதல் நடத்த வேண்டாமென, தனது கட்டளைக்கு உட்பட்ட மையத்தின் வீரர்களுக்கு தெரிவித்தார்.

அவர் எண்ணியது நிஜம்தான். பின்னர், அதனைப் பற்றி விரிவாக 6 மாதங்களுக்கு புலனாய்வு செய்த போது, சூரியனிலிருந்து வந்த கதிர்கள் மேகத்தில் பிரதிபலித்தது, தவறாக அமெரிக்க ஏவுகணைகளாக கருதப்பட்டது தெரிய வந்தது. இது மிக அரிதான விஷயம். அவரது முடிவு, அணுஆயுதப் போரைத் தவிர்த்தது.

இதைப் பற்றி, அவரை பாராட்டிய சமயம், அவர் தனது கடமையை செய்ததாக, சாதாரணமாக பதிலளித்தார். பிற்காலத்தில், இவ்வாறு தவறான புரிதலினால், அணு ஆயுத தாக்குதல்கள் நடைபெறலாம் என தொடர்ந்து அறிவுறுத்தி வந்தார். இத்தகைய அணு ஆயுதங்களை ஏவும் சமிக்ஞைகள் மனிதர்களின் கையில்தான் உள்ளன. மனிதன் தவறு செய்வதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, அணு ஆயுதங்கள் மிகவும் கவனமாக கையாளப்பட வேண்டுமென்று தொடர்ந்து கூறி வந்தார். 2017ம் ஆண்டு, செப்டம்பர் 18ல் , தனது 77வது வயதில் இயற்கை எய்தினார்.

உலக மக்கள் அனைவரும் இந்த இரண்டு ரஷ்யர்களுக்கு கடமை பட்டுள்ளோம். அவர்கள் நிதானமாக எடுத்த முடிவு, மற்றொரு ஹிரோஷிமா, நாகசாகியை தவிர்த்து, மூன்றாம் உலகப்போரை தவிர்த்தது. மற்றொரு விஷயம். நாம் எந்த பொறுப்பில் இருந்தாலும், நாம் எடுக்கக்கூடிய தவறான முடிவுகளால் விளையும் தீமைகளை உணர்ந்து, பொறுப்புணர்வுடன் நடந்துக் கொள்வதன் அவசியத்தை, இந்த இரண்டு ரஷ்யர்களும் நமக்கு காட்டுகின்றனர்.

அணு ஆயுதமில்லாத உலகம் உருவாகுமென்று நம்புவோம்.
Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com