
நேரம்: மாலை ஐந்து மணி.
பாத்திரங்கள்: சந்தோஷ், அவனது நண்பன் பாபு
இடம்: தனியார் நிறுவன அலுவலகம் இருவரும் ஆஃபீஸ் விட்டு வெளியே வருகிறார்கள்.
பாபு: ஹாய் சந்தோஷ்…
சந்தோஷ்: ஹாய் பாபு…
பாபு: நாம் ரெண்டு பேரும் ஒரே ஆஃபீஸ்னாலும் வேற செக் ஷன் மாத்தினாலும் மாத்தினாங்க.. உன்னை லன்ச்லேயும் ஆஃபீஸ் விட்டு கிளம்பறப்பவும்தான் பாக்க முடியுது சந்தோஷ்… அது சரி… இன்னிக்கு என்ன சீக்கிரமே ஆஃபீஸ் விட்டு கிளம்பிட்டே. ஆச்சர்யமா இருக்கு… கம்ப்யூட்டர்லே தலையை புதைச்சுக்கிட்டு, ஏதாச்சும் டவுன்லோட் அப்லோட்னு டேட்டாவோட மன்னாடிக்கிட்டு இருப்பே..
சந்தோஷ்: ஒரு ஸ்பெஷல் டே வருது… கடைக்குப் போகணும்… கிஃப்ட் வாங்கணும் நீயும் கூட வர்றே…
பாபு: என்னடா ஸ்பெஷல். யாருக்கு கிஃப்ட்? வீட்லே பொண்ணு பார்க்க அரேஞ்ச் பண்ணிருக்காங்களா..
சந்தோஷ்: அதெல்லாம் இல்லடா. வீட்டுலே இன்னம் ஆரம்பிக்க மாட்டேங்கறாங்களே… நானும் படிப்பு முடிச்சு வேலைக்கு சேர்ந்து மூணு வருஷம் ஆகுது. எங்க அக்கா கூட பேச்சை ஆரம்பிக்க மாட்டேங்கறா.
பாபு: இரண்டாவது டெலிவரிக்கு வந்துருக்காங்க இல்ல அவங்க.. அதுசரி கிஃப்ட் யாருக்கு..
சந்தோஷ்: கரீனாவுக்கு..
பாபு: யாரு அந்த ஃபேஸ்புக் ஃப்ரண்ட்தானே.
சந்தோஷ்: அது ஆறு மாசம் முன்னாடி. இப்ப அவ என் லவர்.. வருங்கால மனைவி..
பாபு: கொஞ்சம் கொஞ்சம் சமந்தா ஜாடையா இருப்பாளே அவதானே… என்னடா வாங்கப் போறே?
சந்தோஷ்: ஃபர்ஸ்ட் க்ளாசா ஒரு சுரிதார்…வாங்கறேன்…ஃபீனிக்ஸ் மாலுக்குப் போறோம் இப்ப…
பாபு: அளவெல்லாம் எப்படிடா சரியா இருக்கும்?
சந்தோஷ்: அதான் ஃபேஸ்புக்லே ஃபோட்டோ போட்டிருக்காளே. அதை டவுன்லோட் செய்து கேலரியிலே வச்சிருக்கேன் இல்லே, அதைக் காட்டி கேட்கலாம்னு இருக்கேன்… சேல்ஸ் கேர்ல் யாராச்சும் இருந்தாங்கன்னா கேக்கலாம்..
பாபு: வாங்கினதை எப்படி அனுப்புவே..? வீட்டு அட்ரஸ் இருக்கா?
சந்தோஷ்: அவ அப்பா ரிட்டயர்ட் மிலிட்டரி ஆஃபீஸர்னு சொல்லியிருக்கேன்ல.. அவர் ரொம்ப ஸ்ட்ரிக்டாம்.. அவங்க அப்பார்ட்மென்ட் இருக்கிற கேம்பஸ்லேயே இன்னொரு ப்ளாக்லே அவ ஆஃபீஸ்ல ஒர்க் பண்ற லேடிஸ் ரெண்டு பேர் இருக்காங்களாம். கான்டாக்டுக்கு அவங்க அட்ரஸ்தான் கொடுத்திருக்கா. சர்ப்ரைஸா இந்த ட்ரெஸ்ஸை கூரியர் பண்ணிடலாம்னு இருக்கேன். நாளைக்கு கிடைச்சிடும்.. பர்த்டே அன்னிக்கு போட்டுக்க சொல்லப் போறேன்.. சரி வா போகலாம்..
பாபு: நீ என்னவோ பண்ணு… பட்ஜெட் எவ்வளவு..?
சந்தோஷ்: ம்ம்ம்ம் (யோசனையுடன்) என்னாலே மேக்ஸிமம் 1500 தாண்டா முடியும்.. வீட்டுலே இப்ப ஏகப்பட்ட செலவு… அக்கா வேற வந்திருக்கா..அப்பாவும் ரிட்டயர் ஆகிட்டாரா..என்னாலே இப்ப இவ்வளவுதாண்டா முடியும்..
பாபு: சரி சரி… வா போகலாம். போறச்சே ஏதாவது டிஃபன் சாப்பிட்டுப் போகலாம் வா.
இடம்: மாலுக்கு வெளியே
நேரம்: மாலை ஆறு மணி
பாத்திரங்கள் : சந்தோஷ், பாபு
பாபு: ஏண்டா சந்தோஷ்.. 1500 ரூபாதான் பட்ஜெட் ன்னு சொன்னே… இப்ப மூவாயிரம் ரூபாய் ஆயிடிச்சே.
சந்தோஷ்: என்ன பண்ண… ஆனா சுரிதார் எவ்வளவு அழகா இருக்கு… முத முதலா வாங்கிக் கொடுக்கிற கிஃப்ட். நல்லா இருக்க வேணாவா? அதான் பட்ஜெட் எகிறினாலும் பரவாயில்லேன்னு வாங்கிட்டேன்..வேற ஏதாச்சும் செலவை நான் அட்ஜஸ்ட் பண்ணிக்க வேண்டியதுதான்..
பாபு: இன்னும் இதை அனுப்பற செலவு வேற இருக்கு..
சந்தோஷ்: பெட்ரோலை கட் பண்ணிட்டு பஸ்லே கொஞ்ச நாளைக்கு ஆஃபீஸ் போக வேண்டியதுதான். சரி வா, கூரியர் ஆஃபீஸ் போய் இப்ப அனுப்பினா, நாளைக்கே போயிடும். அப்படியே உன்னை வீட்டுலேயே ட்ராப் பண்றேன்.
பாபு: இல்லே சந்தோஷ்… நீ போ… கூரியருக்கு லேட்டாயிடும். நான் ஆட்டோ பிடிச்சு போயிக்கறேன்.
நேரம் : விடிகாலை 5 மணி.
எங்கோ கோயிலில் இருந்து வெங்கடேச சுப்ரபாதம் மெல்லிதாக காற்றில் வருகிறது.
இடம் பாபுவின் வீடு..
காலிங் பெல் அடிக்கிறது.
பாபு: யாரு.. சந்தோஷா….. என்னடா இவ்வளவு அதிகாலயிலே வந்திருக்கே.. உள்ளே வா… ஏன் முகமெல்லாம் ஒரு மாதிரியா இருக்கு… உள்ள வா. அம்மா.. நம்ம சந்தோஷ் வந்திருக்கான் பாரு காஃபி குடு..
சந்தோஷ்: இருக்கட்டும் முதல்லே உன் ரூமுக்கு போலாம் வா…
பாபு: சரி வந்தாச்சு இப்ப சொல்லு..
சந்தோஷ்: டேய் எனக்கு அர்ஜென்ட்டா மூணு லட்சம் ரூபாய் பணம் வேணும். உடனே.. உன்னைத்தான் நம்பி வந்திருக்கேன்..ப்ளீஸ்
பாபு: (அதிர்ந்து) மூணு லட்சமா.. எதுக்குடா திடீர்னு அவ்வளவு பணம்? வீட்டுல யாருக்காச்சும் உடம்பு சரியில்லையா?
சந்தோஷ்: ஆமா.. ஆனா எங்க வீட்லே இல்லே.. கரீனா அப்பாவுக்கு ராத்திரி திடீர்னு ஹார்ட் அட்டாக் வந்திருச்சாம். வால்வ் ட்ரான்ஸ்ப்ளன்ட் பண்ணணுமாம். ஹாஸ்பிடல்ல மூணு லட்சம் பணம் கட்டச் சொல்றாங்களாம்.. என்கிட்டே ஒரு லட்சம் தேறும்.. மீதி ரெண்டு உங்கிட்டே கேட்கலாம்னு வந்தேன்.
பாபு: எந்த ஹாஸ்பிடல்?
சந்தோஷ்: பெங்களூர்லேதான்… ஏதோ ஷ்யாம்ஸ் மல்டி ஸ்பெஷாலிடி ஹாஸ்பிடல்னு சொன்னா
பாபு: ஓ… பெரிய ஹாஸ்பிடல்தான் அது..
சந்தோஷ்: அவ ஆஃபிஸ்லே லோன் எடுக்கறாளாம். இப்ப உடனே பணம் கட்டி அவ அப்பாவைக் காப்பாத்திட்டா.. லோன் பணத்தை உடனே அனுப்பறேங்கறா…
பாபு: கரீனா அக்கவுண்ட் டீடெயில்ஸ் கொடுத்திருக்காளா?
சந்தோஷ்: இதோ க்ளீனா எனக்கு மெயில் அனுப்பியிருக்கா..
பாபு: என் அக்கவுண்ட்லே அவ்வளவு இல்லேயேடா.. ஒரு அம்பதாயிரம் வரை எடுக்கலாம். மீதி எங்க அப்பாகிட்டேதான் கேக்கணும்..
சந்தோஷ்: கொஞ்சம் கேட்டுச் சொல்லுடா பாபு. ப்ளீஸ்.. என்னோட பிறந்த நாள்ல எங்கப்பாவுக்கு எதுவும் ஆகிடக் கூடாதுன்னு ரொம்ப வேதனைப்பட்டு மெயில் அனுப்பியிருக்கா….
பாபு: நீ அனுப்பின ட்ரெஸ் கிடைச்சிதாமா..
சந்தோஷ்: நேத்தைக்கு கூரியர்லே வந்திடுச்சாம். இன்னைக்கு அதைப் போட்டுக்கிட்டு ஃபோட்டோ அனுப்பறேன்னு சொன்னா. அதுக்குள்ள அவ அப்பாவுக்கு இப்படி ஆகிடுச்சு… இன்னும் ரெண்டே நாள்லே திருப்பித் தந்திடுவேங்கிறா..
பாபு: கவலைப்படாதே… இரு எங்க அப்பா இப்பதான் எழுந்திருந்திருக்கார். வரட்டும் கேட்கலாம்.
பாபுவின் தங்கை மீனா வருகிறாள். மீனாவிடம் விவரங்களைத் தெரிவிக்கின்றனர்.
மீனா: அம்மாடி.. மூணு லட்சமா? அவ்வளவா..? எதுக்குன்னு நான் தெரிஞ்சுக்கலாமா? கரீனா எங்க இருக்காங்க? என்ன பேரு? எங்க பார்த்தீங்க? எப்படி க்ளிக் ஆச்சு? ப்ரபோஸ் பண்ணிட்டீங்களா?,
பாபு: அடாடா எத்தனை கேள்வி கேப்பே.. அவனுக்கு ஆறு மாசம் முன்னாடி ஃபேஸ் புக் மூலம் ஃப்ரண்ட் ஆனவங்க..பெங்களூர்லே ஐ.டி கம்பெனியில ஒர்க் பண்றாங்க… போதுமா?
மீனா: ஆஹா போதுமே.. அவங்கப்பா பேரு என்ன தெரியுமா?
சந்தோஷ்: ராமதுரை. ஆர்மியிலே இருந்து ரிட்டயர் ஆனவரு… எதுக்கு கேக்கறே மீனா?
மீனா: அவரோட பேரிலே அக்கவுண்ட்டானு பார்த்தேன்.. இல்லே… சரி..கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. இதோ வரேன்…(செல்கிறாள்)
பாபு: இவ எங்கே போறா? போய் அப்பாகிட்டே பேசி கன்வின்ஸ் பண்ணுவான்னு நினைக்கிறேன் சந்தோஷ்.. நீ காபியைக் குடி..
பத்து நிமிடங்கள் கழித்து மீனா வருகிறாள்.
மீனா: சந்தோஷ் அண்ணா நீங்க அவங்க கூட வாட்ஸப்லே இல்லையா…
சந்தோஷ்: அவ ஃப்ரண்ட் ஒருத்தி எவன்கிட்டேயோ எக்குதப்பா மாட்டிக்கிட்டு, நிறைய பிரச்னை ஆகியிருக்கு, அதனாலே இவளுக்கும் வாட்ஸப்லே நிறைய பிராப்ளம் வந்ததுதாம். அதனாலே வாட்ஸப் க்ளோஸ் பண்ணிருக்கா…
மீனா: சரி…பரவாயில்லே…உங்க கரீனாவுக்கு உடனே ஒரு மெயில் அனுப்புங்க..
சந்தோஷ்: என்னன்னு..
மீனா: 'நானும் என் நண்பன் பாபுவும் இதோ பெங்களூரு கிளம்பிட்டோம். அங்கே இருக்கிற சொந்தக்காரரு ஒருத்தரு பணம் தரேன்னு சொல்லியிருக்காரு. அதை வாங்கிட்டு அப்படியே நேரே ஹாஸ்பிட்டல் வரோம். ஹாஸ்பிடல் எங்க இருக்கு, எந்த வார்டுலே உங்க அப்பாவை அட்மிட் பண்ணியிருக்காங்காங்கன்னு உடனே மெயில் பண்ணு… காரிலேயே கிளம்பி வரோம். நேரிலே பணத்தையும் கட்டிடறோம். அப்படியே உன்னையும் உங்க அப்பாவையும் பார்த்த மாதிரி இருக்கும்… வார்டு விவரங்கள் எல்லாம் அனுப்பு..
இப்படி ஒரு மெயில் அனுப்புங்க அண்ணா."
சந்தோஷ்: என்ன மீனா இது..? நான் என்னவோ கேட்டா நீ என்னவோ சொல்றே..நாங்க எங்கே பெங்களூரு போற நிலையிலேயா இருக்கோம்?
மீனா: அனுப்புங்களேன்.. பாபு, நீயும் அவருக்கு ஹெல்ப் பண்ணு….
பாபு: சரிடா அவ ஏதோ சொல்றா கேப்போமே.
இடம்: அலுவலகம்:
நேரம்: மாலை ஐந்து மணி.
பாத்திரங்கள் மீனா, சந்தோஷ்
சந்தோஷின் மொபைல் அடிக்கிறது… எடுக்கிறான்.
சந்தோஷ்: சொல்லு மீனா..
மீனா: என்ன அண்ணா பதில் மெயில் ஒண்ணும் உங்க கரீனாகிட்டேயிருந்து வந்திருக்காதே..
சந்தோஷ்: ஆமா.. வரல்லே.. நானும் ரெண்டு மூணு மெயில் அனுப்பிட்டேன்… இதுவரை நோ ரெஸ்பான்ஸ்..
மீனா: எப்படி வரும்? கரீனா என்கிற ஃபேஸ்புக் முகவரியே ஃபேக்.. சும்மா ஏதோ ஒரு அழகான பொண்ணோட ஃபோட்டோ போட்டு ஃப்ரண்ட் கால் வந்தா உடனே கன்ஃபர்ம் பண்ணிடறதா?
சந்தோஷ்: உண்மைதான் மீனா ஏமாந்துட்டேன்.
மீனா: நீங்க மட்டுமில்லே நிறைய பேர் இப்படி இருக்காங்க சந்தோஷ். அதான் இன்னைக்கு காலையிலே நீங்க வந்தப்போ நான் அந்த ஹாஸ்பிடலை கூகுள்லே தேடினேன். ஃபோன் நம்பர் கிடைச்சுது. கூப்பிட்டுக் கேட்டா ராமதுரைன்னு யாரும் ஹார்ட் அட்டாக்னு வந்து அட்மிட் ஆகலைன்னு சொன்னாங்க. அப்பவே எனக்கு இது போலியோன்னு சந்தேகம் வந்தது. அவ சரியான அட்ரஸ் குடுக்காம ஏதோ ஃப்ரண்ட் முகவரி கொடுத்ததா வேற சொன்னீங்க. அதுக்குத்தான் உங்களை ஒரு மெயில் அனுப்பச் சொன்னேன். இப்ப பாருங்க, சாயங்காலம். மணி அஞ்சடிக்கப் போகுது இன்னும் பதில் வரலே. யாரோ ஃபேக் ஐடி வச்சு உங்களை ஏமாத்திருக்காங்க. ஆணாகக் கூட இருக்கலாம். இதெல்லாம் சைபர் க்ரைம்லே புகார் பண்ணுவோம் வாங்க.
சந்தோஷ்: நிச்சயமா பண்ணலாம் மீனா. இன்னும் யாரும் இது மாதிரி ஏமாந்து போகக் கூடாதுல்லே..ரொம்ப தாங்க்ஸ் மீனா… எனக்கே என்னோட அசட்டுத்தனம் நினைச்சா வெட்கமா இருக்கு… வீணா மூவாயிரம் ரூபாய் வேற செலவழிச்சேன்..
மீனா: விடுங்க.. சுரிதார்க்கு செலவழிச்சதாத்தானே சொல்றீங்க… போகுது. நல்ல புத்திக்கு ஒரு விலைன்னு வச்சுக்குங்க.
*