பறக்கும்  பாவைகள்!

பறக்கும்  பாவைகள்!
Published on
'எங்களாலும் பறக்க முடியும்'
-ஜி.எஸ்.எஸ்.

பகுதி – 7

ஃபேல் போர் விமானத்தினை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, 'டஸால்ட் ஏவியேஷன்' நிறுவனம் தயாரிக்கிறது. ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 3,700 கிலோ மீட்டர் தூரத்திற்குச் செல்லக் கூடியது. எதிரிகளை அடையாளம் காண்பதற்கான ரேடார் எச்சரிக்கைக் கருவியும் இதில் பொருத்தப் பட்டுள்ளது. இதில் துல்லியமாக இலக்குகளைத் தாக்கக்கூடிய ஏவுகணைகள் மற்றும் இதர அதிநவீன ஆயுதங்கள் ஆகியவற்றையும் பொருத்தலாம்.  இதுவரை பிரான்ஸிலிருந்து 36 ரஃபேல் விமானங்கள்  நம்மால் வாங்கப்பட்டுள்ளன.

எதற்காக பறக்கும் பாவை தொடரில் ஒரு குறிப்பிட்ட விமானத்தைப் பற்றிய இந்த விளக்கம் என்கிறீர்களா?  தற்போதைய இந்திய விமானப் படையின் கௌரவங்களில் ஒன்றாக விளங்கும் ரஃபேல் போர் விமானத்தில் பறந்த முதல் இந்தியப் பெண் விமானி சிவாங்கி சிங்.

15 மார்ச் 1995 அன்று இந்தியாவின் பீகார் மாநிலத்தின் முசாபர்பூர் மாவட்டத்தில் பிறந்தார் சிவாங்கி சிங். இவரது தந்தை ஒரு பள்ளி ஆசிரியர்.  பெயர் ஹரி பூஷண் சிங். இவரது தாத்தா நன்கொடையளித்த நிலத்தில் ஓர்  அரசு மகளிர் பள்ளி கட்டப்பட்டது.  அதன் தலைமையாசிரியராகப் பணிபுரிகிறார் சிவாங்கியின் அப்பா.

சிவாங்கியின் அம்மா இல்லத்தரசி.  பெயர் ப்ரியங்கா சிங். இவர்களது குடும்பம் எளிய விவசாயப் பின்னணியைக் கொண்டது.

சிவாங்கி சிறுமியாக இருந்தபோது அவரது கிராமத்துக்கு ஒரு அரசியல்வாதி ஹெலிகாப்டரில் வந்து ஒரு அரசியல் கூட்டத்தில் கலந்துகொள்வதைப் பார்த்தார்.  அ​ப்போது முதல் சிவாங்கிக்கு தானும் விமானத்தில் பறக்க வேண்டும் என்ற ஆர்வம் அளவில்லாமல் பெருகியது. அந்த ஆர்வமே நாளடைவில் அவரை ஒரு விமானியாக மாறத் தூண்டியது.

சிக்கிம், மணிப்பால் தொழில்நுட்ப நிறுவனத்தில் சேர்ந்து இயந்திரப் பொறியியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

அதிகாரிகள் பயிற்சி ஆணையம் – விமானி நுழைவு திட்டத்தின் கீழ் ஜூன் 2018ல் சிவாங்கி இந்தியக் கடற்படையில் சேர்க்கப்பட்டார். முதலில் சில மாதங்கள் கடற்படை தொடர்பான பல கல்வி இவருக்கு வழங்கப்பட்டது.

இந்தியக் கடற்படை விமானப் படையைச் சேர்ந்த டோர்னியர் விமானத்தில்,  பறக்கக் கற்றுக்கொண்டார். (உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட டோர்னியர்-228 ரக விமானம் 17 இருக்கைகள் கொண்டது).

சிவாங்கி 2 டிசம்பர் 2019 அன்று இந்தியக் கடற்படையின் முதல் பெண் போர் விமானி ஆனார்.

கேப்டன் அபிநந்தனை மறந்திருக்க மாட்டீர்கள். பிப்ரவரி 27, 2019 அன்று பாகிஸ்தான் போர் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியவர்.  பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டவர். அதற்கு முன்பாக அவருடன் இணைந்து ராஜஸ்தான் எல்லைப்பகுதியில் தொடர்ந்து பல மணி நேரம் பறந்து போர்க்கள விவரங்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டவர் சிவாங்கி சிங். அபிநந்தனிடம் தொடர் பயிற்சி எடுத்துக் கொண்டவர்களில் சிவாங்கி சிங்கும் ஒருவர்.

போர் விமானங்களை இவருக்கு  முன்பே ஓட்டியப் பெண்கள் இருந்திருக்கிறார்கள். பாவனா காந்த், அவனி சதுர்வேதி, மோகனா சிங் ஆகிய ​​மூவருக்கும் இந்தப் பெருமை உண்டு.

'விமான ஓட்டியான பின் உலகில் நம்மால் நிகழ்த்த முடியாதது எதுவுமே கிடையாது என்பதை அறிந்து கொண்டேன். பக்கத்தில் யாரும் இல்லாதபோதும் நம்மை நாம் தான் முழுவதுமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதும் ஒரு அற்புதப் படிப்பினையாக இருந்தது' என்று கூறுகிறார் சிவாங்கி சிங்.   இப்போது அவர் கடல்சார் மறுமதிப்பீட்டு (எம்ஆர்) விமானத்தில் செயல்பாட்டு விமானியாக உள்ளார்.

இதற்கு முன் MiG-21 போர் விமானத்தை கையாண்டவர் சிவாங்கி சிங். இந்த விமானத்துக்கு, 'முரட்டுக்காளை' என்று
ஒரு பெயர் உண்டு. இந்த விமானம் மிக செங்குத்தாக மேலெழும்பக் கூடியது.
மிக அதிக வேகத்தில் கீழே இறங்கக் கூடியது.

ஒருவகை விமானத்திலிருந்து மற்றொரு வகை விமானத்தை ஓட்ட வேண்டுமென்றால் இடையில் 'மாற்றுப் பயிற்சி' (கன்வெர்ஷன் ட்ரெய்னிங்) என்ற ஒன்றை மேற்கொள்ள வேண்டும். இதை சிவாங்கி சிங்குக்கு அளித்தவர் லெப்டினன்ட் சிங் என்பவர். ரஃபேல் போர் விமானத்தை ஓட்டி சரித்திரம் படைத்து விட்டார் சிவாங்கி.

இந்த ஆண்டு ஜனவரியில் குடியரசு தின ஊர்வலம் டெல்லியில் நடைபெற்றபோது ராணுவத்தைச் சேர்ந்த மகளிர் குழு பலவித மோட்டார் பைக் சாகசங்களை நிகழ்த்தியது. அப்போது அவர்கள் தாங்கிப் பிடித்த பதாகையில், 'பெண் குழந்தையைக் காப்பாற்றுங்கள், பெண் குழந்தைக்கு கல்வி அளியுங்கள் ('Beti Bachao, Beti Padhao')  என்ற வாசகங்கள் காணப்பட்டன.

உண்மைதான். சிறுமிகளுக்கு உகந்த கல்வி அளித்தால் அந்தக் கல்வியே இறக்கைகளாக மாறி அவர்களை வானில் பறக்க வைக்கும்;  விமானங்களையும்  ஓட்ட வைக்கும்.

(தொடர்ந்து பறப்பார்கள்)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com