பாட்டொன்று கேட்டேன்!

பாட்டொன்று கேட்டேன்!
Published on
இது மங்கையர்மலரின் விவிதபாரதி…
பகுதி -10

ங்கையர் மலர் விவித பாரதியில் இன்று நாம் கேட்க விரும்பும் பாடல்… 1964 ஆம் ஆண்டு வந்த தேவர் பிலிம்ஸின் "வேட்டைக்காரன் "படத்தில் கேவி மகாதேவன் இசையில் கவியரசு கண்ணதாசன் அவர்கள் எழுதி டிஎம்எஸ் ஐயா அவர்கள் பாடிய "உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்" என்ற தன்னம்பிக்கையுடன் கூடிய எழுச்சிமிகு பாடல்தான். சங்கராபரண ராகத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட பாடலிது.  மனங்களில் வெகு அழுத்தமாக பதிந்து இன்றளவும் அழியா வரம் பெற்ற பாடலிது. பகுத்தறிவு புகட்டும் நல்லபாடலிது.  தங்கத் தலைவரின் தன்னிகரற்ற பாடலிது.

கே வி மகாதேவன் அவர்கள் முற்றிலும் வேறு பாணியில் இயற்றிய பாடலிது. தமிழக மக்களின் மனதை வேட்டையாடிய மக்கள் திலகம்  நடித்த ஒரே கௌபாய் திரைப்படம் இது.

"உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்..

 உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்

சரணத்தில் திருக்குறள் கருத்துக்களை வெகு அருமையாக எளிமையான வரிகளில் சுலபமாக கவிஞர் கையாளும் விதம் வியக்கவைக்கிறது.

"மயிர்நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின்" தன் உடலிலிருந்து ஒரு முடியை இழக்க நேரிட்டாலும் கவரிமான் உயிரை விட்டுவிடும் அது போல மென்மையான குணம் படைத்த மனிதர்கள் தன்மானத்துக்கு ஒரு இழுக்கு ஏற்பட்டால் உயிரைவிடக் கூடத் தயங்க மாட்டார்கள்.

தொடரும் சரணத்தில் முதல் வரியாக இந்த குறளின் கருத்தை எளிமையாக பாமரரும் உணரும் வகையில் ஒரே வரியில் கொடுத்திருப்பார் கவியரசர்.

"மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை மான் என்று சொல்வதில்லையா"?

என்ற கவிஞர் அடுத்த வரியை பல்லவியோடு தொடர்பு படுத்தி இருப்பார்.

 "தன்னை தானும் அறிந்து கொண்டு ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா?"

எவ்வளவு அழகாக கவியரசர் தீர்க்கதரிசனத்துடன் எழுதி இருக்கிறார் பாருங்கள்.

அப்படி ஊருக்கு நல்லது சொல்லி தலைவரானவருக்கு நம் தலைவரே உதாரணம்.

"பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும் சாமிக்கு நிகர் இல்லையா?

பிறர் தேவை அறிந்து கொண்டு வாரிக் கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளை இல்லையா?"

இந்த உலகத்தில் நேராக நேர்மையாக வாழும் எல்லோருமே சாமிக்கு நிகர் தான் இதைத்தான் திருவள்ளுவர்
"வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவர்கள் வான்
உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்" என்றார்.

நம் வீட்டு பெரியவர்கள் சொல்வார்கள் தெய்வத்திடம் அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்காதே? உனக்கு எது வேண்டும்  என்று தெய்வத்துக்கு தெரியாதா? என்று அதுபோல பிறரின் தேவை அறிந்து கொண்டு வாரி கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளைகள். அப்படி மக்களுக்கு தேவையறிந்து வாரிக் கொடுத்தவர்தான் தலைவரும். (தெய்வத்தின் பிள்ளை அவர்)

"மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்

ஒரு மாற்று குறையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும்"

சபைகளில் நடக்கும்போது மாலைகள் விழுவதற்கும் மாற்றுக் குறையாத மன்னவன் என்றும் மற்றவர் போற்றிப் புகழும் அளவுக்கு உயர்ந்திட வேண்டும். மேலும் தான் உயர்ந்தது போல நாம் ஒவ்வொருவரும் சமுதாயத்திற்கு பயன்பட்டு அதன்மூலம் பாராட்டு பெறும் அளவுக்கு உயர வேண்டும் என்கிறார்.. வார்த்தைகளில் எவ்வளவு ஜாலம் காட்டுகிறார் கவியரசர்.

பாடலின் இடையில் வரும்" மா"…ஹூ.. ஹா" என்ற ஏ. எல். ராகவன் அவர்களின் தாளக்கட்டு(ஹம்மிங்) அருமையாக  இருக்கும் இந்தப் பாடலின் வெற்றியில் டி.எம்.எஸ் அவர்களுடன் இவருக்கும் பெருமை உண்டு. (நாயகன் பாடுவது என்று குதிரையின் மேலே ஏறிவிட்டால் அப்பாடல் எப்போதுமே மிகவும் வேகமெடுக்கும். ஆனால் இந்தப் பாடலில் நாயகியின் மிதமான நடைக்கேற்றவாறு சாதாரணமான முறையில் அருமையாகப் பாடியிருப்பார் டிஎம்எஸ்… எம்ஜிஆர் குரலில் அப்படியே டி.எம்.எஸ் அய்யா பொருந்தி இருப்பார்.

இப்படி அன்றும் இன்றும் என்றும் உயர்ந்த கருத்துக்களின் புகலிடமாக வாழும் கலையைக் கற்றுக் கொடுக்கும் உன்னத பாடலான இந்த பாடலை கேளுங்க கேளுங்க கேட்டுக்கொண்டே இருங்கள்.

என்றென்றும் அன்புடன்
ஆதிரை வேணுகோபால்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com