தொண்டரடிப் பொடி ஆழ்வார்!

தொண்டரடிப் பொடி ஆழ்வார்!
Published on
கட்டுரை: ரேவதி பாலு
ஓவியம்: தமிழ்
தேவதேவியும் தங்க வட்டிலும்!

செழுமையான சோழமண்டலத்தில் கரை புரண்டோடும் காவிரி ஆற்றங்கரையில் ஒரு சிறு கிராமம் 'திருமண்டகுடி' என்னும் பெயரில்.  இதில் வேத விற்பன்னர்கள் பலர் வாழ்ந்து வந்தனர்.  அதில் ஒருவரான 'வேத விசரதர்' என்பவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறக்கிறது.  குடும்பப் பெயரான 'விப்ர' என்பதோடு சேர்த்து 'விப்ர நாராயணன்' என்னும் பெயர் சூட்டி அருமையாக வளர்த்து வந்தார்.  வேதம் வேதாந்தம் எல்லாம் முறையாகக் கற்பிக்கப்பட்டு பெருமாளுக்கு கைங்கர்யம் செய்யவும் சிறுவயதிலேயே விப்ர நாராயணன் பழக்கப்படுத்தப்படுகிறார்.

பகவத் கைங்கர்யத்தில் மனம் மிகவும் லயித்துப் போக, விப்ர நாராயணன் தான் பிறந்த ஊரை விட்டு ஸ்ரீரங்கம் செல்கிறார்.  அங்கே ஒரு நிலத்தை வாங்கி அதில்  ஒரு அழகிய நந்தவனத்தை உருவாக்கி, அதில் பூக்கும் பூக்களை ஸ்ரீரங்கநாதருக்கு அர்ப்பணிக்கிறார்.  நந்தவனத்தை முறையாகப் பராமரித்து அதில் பூக்கும் பூக்களை மாலையாகத் தொடுத்து கோவிலுக்குச் சென்று  ரங்கநாத பெருமாளுக்கு தினமும் கொடுக்கும் கைங்கர்யத்தை செய்து வந்தார்.  சிறந்த பக்தரான இவர் இந்த கைங்கர்யத்தை காலையில் பெருமாளுக்கு திருப்பள்ளியெழுச்சி பாடி மானசிகமாக பெருமாளை துயிலெழுப்பி செய்வார்.    பக்திமான் என்றாலே பெருமாள் சோதித்துப் பார்க்கத்தானே விரும்புவார்?  விப்ர நாராயணனின் வாழ்க்கையிலும் சோதனை ஆரம்பமாகிறது.

தேவதேவி என்னும் கணிகையும் அவள் சகோதரியும் ஒருநாள் உறையூரில் அரசர் முன்னிலையில் நடனமாடி அவரை மகிழ்வித்துப் பின் தங்கள் ஊரான திருக்கரம்பனூருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.  ஸ்ரீரங்கம் அருகே வரும்போது பெரிதாக மழை பெய்யவே அவர்கள் விப்ரநாராயணனின் நந்தவனத்தில் ஒதுங்குகிறார்கள்.  தன் போக்கில், பெருமாளின் புகழைப் பாடிக் கொண்டே தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த விப்ரநாராயணன் அவர்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இது தேவதேவிக்கு பெருத்த அவமானமாகப் போயிற்று. பேரழகியான தன் சௌந்தர்யத்தைப் பார்த்து மன்னர்கள் எல்லாம் மயங்கிப் போய் கிடக்கும்போது இந்த பிராமணன் இப்படி செய்கிறானே என்று கொதித்துப் போகிறாள். அவள் சகோதரி சொல்கிறாள் அவர் பெருமாளையே எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கும் பெரிய பக்திமான். அவருக்கு நாமெல்லாம் ஒரு பொருட்டல்ல என்று.  உடனே தேவதேவி  தன் சகோதரியிடம் சவால் விட்டுச் சொல்கிறாள். "இவனை என் வழிக்கு நான் கொண்டு வந்தால் உன் வாழ் நாள் முழுவதும் எனக்கு ஊழியம் புரிந்து பணிப்பெண்ணாக இருக்கிறாயா?" என்று.  சகோதரியும் ஒத்துக் கொள்ள அவர்கள் ஊர் திரும்புகின்றனர்.

இரண்டு நாட்கள் கழித்து தேவதேவி மட்டும் சாதாரண உடையில் நகைகள் ஏதுமில்லாமல் வெகு எளிமையாக விப்ரநாராயணனின் நந்தவனத்திற்கு அழுது கொண்டே வருகிறாள். விப்ரநாராயணன் பதறிப் போய், "ஏனம்மா அழுகிறாய்?" என்று பரிவுடன் கேட்க அவள் சொல்கிறாள், "நான் கணிகை குலத்தைச் சேர்ந்தவள் ஐயா. ஆனால் எனக்கு என் குலத்தொழிலில் ஈடுபட விருப்பமில்லை. பெருமாளுக்கு கைங்கர்யம் செய்யவே விரும்புகிறேன்.  நான் ஒண்டிக் கொள்ள இங்கே ஒரு சிறு மூலையைக் காட்டுவீர்களா?" என்று.

விப்ரநாயாயணனும் அவள் அங்கே தங்கிக்கொள்ள அனுமதிக்க பெருமாளின் லீலை ஆரம்பமாகிறது. ஆன்மீகத்தின் உச்சத்தில் பெருமாளின் கைங்கர்யம் மட்டுமே தன் வாழ்க்கைப்பணியாக மேற்கொண்டு வாழ்ந்த விப்ரநாராயணன் தேவதேவியின் மாய வலையில் மயங்கி லௌகிக வாழ்வை ஆரம்பிக்கிறார். நந்தவனம், பூமாலை, பெருமாளுக்கு கைங்கர்யம் சகலமும் மறந்து தேவதேவியே தன் வாழ்க்கையாக வாழ ஆரம்பித்தார் விப்ரநாராயணன்.  சிறிது காலம் செல்கிறது. திடீரென்று ஒருநாள் தேவதேவி விப்ரநாராயணனை விட்டு விட்டு தன் வீடு திரும்புகிறாள். அவளைப் பிரிய முடியாமல் அழுது புலம்பிக்கொண்டே அவள் பின்னாலேயே செல்லும் விப்ரநாராயணனை தன் வீட்டில் நுழையவிடவில்லை தேவதேவி.  தன்னையடைய வேண்டுமானால் பெரும் பொருள் கொண்டு வந்தால் தான் முடியும் என்று கூறி கதவை அடைத்து விடுகிறாள். அழுது கொண்டே அவள் வீட்டு வாசலிலேயே பரிதாபமாக விழுந்து கிடக்கிறார் விப்ரநாராயணன்.

வைகுண்டத்தில் எம்பெருமானோடு வீற்றிருக்கும் பிராட்டிக்கு இந்த பக்தன் படும் பாட்டைக் கண்டு துக்கம் பொங்குகிறது.  "தங்களுக்குத் தொண்டு செய்வதே தன் வாழ்வின் பாக்கியம் என்று எண்ணியிருந்த இந்த பக்தனின் நிலைமை இப்படியாகி விட்டதே? தாங்கள் அவரை எப்படியாவது இந்த மாயவலையிலிருந்து மீட்கக் கூடாதா?" என்று பெருமாளிடம் முறையிடுகிறாள்.  கருணைக் கடலாம் பெருமாள் புன்னகைக்கிறார்.

"கொஞ்சம் பொறு! நடப்பதைப் பார்!" என்று மட்டும் சொல்கிறார்.  இறைவன் வழி தனி வழி அல்லவா?

அடுத்த நாள் பெருமாள் தன் சன்னதியில் வைத்திருக்கும் பூஜைப் பாத்திரங்களில் ஒன்றான தங்க வட்டிலை எடுத்துக் கொண்டு ஒரு மானிடனின் உருவத்தில் தேவதேவியின் வீடு செல்கிறார். கதவைத் திறந்த  தேவதேவியிடம் தன் பெயர் அழகிய மணவாளன் என்றும்,  தான் விப்ரநாராயணனின் வேலையாள் என்றும் கூறி, அவர் இந்த தங்க வட்டிலை அவளுக்கு அன்பளிப்பாக அளித்து விட்டு வரச் சொன்னதாகச் சொல்கிறார். தேவதேவியும் அகமகிழ்ந்து போய் விப்ரநாராயணனை உள்ளே வர அனுமதிக்கிறாள்.

றுநாள் பெருமாள் சன்னதியை காலையில் திறந்த அர்ச்சகர் அங்கே ஒரு தங்க வட்டிலைக் காணாமல் பதைத்துப் போய் அந்த ஊர் அரசரிடம் முறையிடுகிறார்.  அரசரும் தன் பரிவாரத்தை விட்டு ஊரெங்கிலும் தேடச் சொல்ல, அந்த தங்க வட்டில் தேவதேவியின் வீட்டில் இருப்பதாக அவள் வீட்டு வேலைக்காரி மூலம் தெரிய வருகிறது. தேவதேவி, விப்ரநாராயணன் இருவரையும் கைது செய்து சிறையில் அடைக்கிறார் அரசர்.  தேவதேவி விப்ரநாராயணனின் பணியாள் அழகிய மணவாளன் தான் அதை தன்னிடம் கொடுத்தார் என்று கூற, விப்ரநாராயணனோ தனக்கு பணியாள் யாருமில்லை என்றும் தனக்கு இதைப்பற்றி எதுவும் தெரியாது என்றும் கூறுகிறார். மேலும் 'பகவத் கைங்கர்யமே வாழ்க்கையாக வாழ்ந்து கொண்டிருந்த தன் வாழ்வு இப்படி பாழ்பட்டுப் போனதே பெருமாளே! எனக்கு மீட்சி இல்லையா' என்று கதறி அழுகிறார்.

அரசர் இந்த வழக்கில் எப்படி நீதி வழங்குவது என்று புரியாமல் பெருமாளிடமே தனக்கு வழிகாட்டுமாறு முறையிடுகிறார். பெருமாளும் அன்றிரவு அரசர் கனவில் வந்து 'விப்ரநாராயணன் தன்னுடைய மிகப் பெரிய பக்தர் எனவும், வாழ்க்கையில் வழி தவறிப் போன அவரை நல்வழிப்படுத்தி ஆட்கொள்ளவே தான் அழகிய மணவாளன் என்னும் பெயரில் தங்க வட்டிலை தேவதேவியிடம் கொடுத்ததாகவும் கூறி அவர்கள் இருவரையும் விடுதலை செய்ய உத்தரவிடுகிறார்.

ம்பெருமானே தன்னை நல்வழிப்படுத்த இந்த லீலையை நடத்தியதையறிந்து விப்ரநாராயணன்  "மீண்டும் உனக்கு கைங்கர்யம் செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைக்குமா?" என்று  ஏங்கி கதறியழுகிறார்.

பெருமாள் கைங்கர்யத்தை கைவிட்டு லௌகிகத்தில் தன் வாழ்வு தடம் புரண்டு போனதால் இதற்காக ஏதாவது  பிராயசித்தம் செய்ய வேண்டுமே என்று யோசித்து எம்பெருமானின் அடியவர்களின் பாதங்களை (அடி)  வணங்கி அவர்கள் பாத தூசை (பொடி) தன் சிரசில் தெளித்துக் கொண்டு தன்னைத் தூய்மையாக்கிக் கொண்டார்.  இதனால் அவருக்கு தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற பெயர் வந்தது.  எம்பெருமானின் பரம அடியவர்களான பன்னிரெண்டு ஆழ்வார்களில் தொண்டரடிப்பொடி ஆழ்வார் பத்தாவதாக வருகிறார்.  மார்கழி மாத கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த இவருக்கு வருடந்தோறும் 'திருநட்சத்திர உற்சவம்' ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் கோலாகலமாக நடைபெறுகிறது.

'கதிரவன் குணதிசை சிகரம் வந்தணைந்தான்' என்று துவங்கும் திருப்பள்ளியெழுச்சிப் பாடல் இவரால் பாடப்பட்டது. தன் வாழ்நாளின் இறுதி வரை திருமாலின் புகழைப் பாடிப் பரப்பும் திருப்பணியை மேற்கொண்டு வாழ்ந்தார் தொண்டரடிப்பொடி ஆழ்வார்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com