
அன்பு குறைந்து வரும் காலத்தில் அது அனைவரிடமும் நிலைத்திருக்க என்ன செய்ய வேண்டும்?
– அனிதா, சேலம்
யாரையும் எந்தச் சூழ்நிலையிலும் மோசமாக நடத்திவிடாமல் இருக்கணும். ஏனென்றால், அழகியக் கண்ணாடியை உடைக்கும்போதுதான் கூர்மையான ஆயுதம் உருவாகிறது.
'நாம் தனிமைப்படுத்தப்பட்டது கைப்பேசி வந்த பிறகுதான்' என்கிறாள் என் தோழி; 'ஊரடங்கு வந்த பிறகுதான்' என்கிறேன் நான்… எது சரி?
– எல்.உஷாகுமாரி, சென்னை
செல்ஃபோன் என்பது தம்மாத்துண்டு, 'கைப்பேசி'யாக இருந்த வரை நோ ப்ராப்ளம்! சும்மா அது ஒரு பேச்சுத் துணை மட்டுமே!
அது ஆன்ட்ராய்டாகவும், ஐஃபோனாகவும் உருமாறி, திருமாறி, ஏகப்பட்ட 'ஆப்'களுடன் விஸ்வரூபம் எடுத்த பிறகு, அது மட்டுமே துணை!
சினிமா, டிராமா, கச்சேரி, பயணம், புத்தகம், பொழுதுபோக்கு, உணவு, ஷாப்பிங்… ஊரடங்கு வந்த பிறகு, கேட்கவே வேணாம்! எரியுற நெருப்புல எண்ணெய் விட்டு, போதாதற்கு சாம்பிராணி தூபமும் காட்டியது போல, ஓவர் ஆகிவிட்டது. ஸோ, அனுஷா நாட்டாமையின் தீர்ப்பு :
பிஃப்ட்டி; பிஃப்ட்டி!
திருவிழாவில் தொலைந்த அனுபவம் உண்டா?
– வி.வித்யா பிரசாத், நங்கநல்லூர்
திருவிழாவுல இல்ல; கோயில்ல! அப்போ எனக்கு பத்து வயசு இருக்கும்! சோளிங்கர் மலையின் கீழே உள்ள மண்டபத்தில் உறவினர் கல்யாணம். அது முடிந்ததும் ஆஞ்சனேயரை தரிசனம் செய்யப்போனார்கள். நானும் என் தங்கையும் போன கையோடு, படிகளில் உல்லாசமாக இறங்கி (யாருக்கும் சொல்லாமல்!) மீண்டும் மண்டபத்துக்கே வந்துவிட்டோம்.
மலை மீது எங்களைத் தேடித் தேடி, பயந்துபோன கல்யாண கோஷ்டி, அடிச்சுப் பிடிச்சு பெரும் ஆயாசத்தோடு இறங்கி வந்தால், நாங்கள் 'கிச்சுக் கிச்சு தாம்பாளம்' ஆடிக் கொண்டிருந்தோம்.
எல்லாரும் எங்களைப் பிச்சுப் பிச்சு எடுத்தாங்க! "சின்னக் குழந்தைகளைக் கண்காணிப்பா வெச்சுக்காம, அப்படி என்ன பொறுப்பில்லாம இருக்குறது?"ன்னு ஒருத்தர்கூட பெரியவங்களைத் திட்டலையே! என்ன அநியாயம்!!
ஹும்! கூப்பிடுங்க சைல்ட் ஹெல்ப் லைனை!