
சமீபமாக நிறைய தற்கொலை செய்திகளை கண்டு மனம் துடிக்கிறது. இதில் வசதியானவர்கள், வசதியற்றவர்கள், படித்தவர், படிக்காதவர், ஆண் பெண், சிறியவர், பெரியவர் என்று எந்த வித்யாசமும் இல்லாமல் போவதுதான் இன்னும் கொடுமை .இப்படித்தான் எனக்குத் தெரிந்த பெண், கணவனுடன் ஏற்பட்ட வருத்தத்தை தாங்காமல் தற்கொலைக்கு முயன்று அக்கம்பக்கம் உள்ளவர்களால் காப்பாற்றப்பட்டாள். சரி அவளைப் பார்த்து வரலாம் என்று சென்றேன் .என்னைப் பார்த்ததும் அழுதார் அப்பெண். எனக்கு வந்ததே கோபம் .
"காப்பாற்றி விட்டார்களே என்று அழுகிறாயா? அல்லது பாவத்தை செய்யத் துணிந்தோமே என்று அழுகிறாயா ? உன் கண்ணீர் கரைவதுபோல் உன் உள்ளத்தில் எழுந்த அந்த பாவ எண்ணத்தையும் கரைத்து விட்டு இனியாவது உன் பிள்ளைகளின் நலனை முன்னிறுத்தி வாழ்ந்து காட்டு" என அறிவுறுத்தி வந்தேன் .என் கோபம் மட்டும் அடங்க மறுத்தது. என்ன ஒரு முட்டாள்தனம்? பிரச்னைகளுக்கு தீர்வாக தற்கொலையைத் தேர்ந்தெடுக்கிறாளே? என்ற வருத்தமும் வந்தது .
காதலில் தோல்வியா? துணையிடம் சண்டையா? தேர்வில் பெயிலா? கடன் தொல்லையா? உடலில் நோயா? இப்படி எந்தப் பிரச்னைக்கும் தற்கொலையைக் கையில் எடுப்பவர்களே… ஒரு நிமிடம் சிந்தித்துப்பாருங்கள் "நீங்கள் கேட்டுப் பெற்றதல்ல உயிர்… ஆகவே உங்கள் உயிர் உங்கள் உரிமையல்ல. ஒவ்வொரு உயிருக்கும் கடமைகள் உள்ளது. அந்தக் கடமைகளை முடித்தவுடன் உயிர் உங்களைக் கேட்காமலே விடைபெற்று விடும். இதுதான் படைப்பின் நியத."
"நல்லா சொல்ல வந்துட்டீங்க! என் இடத்துல இருந்து பார்த்தாத்தான் தெரியும்… எவ்வளவு கஷ்டங்கள் சோதனைகள?" என்று எண்ணுகிறீர்கள்..புரிகிறது. ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு மட்டும்தான் துன்பம் என்று நினைப்பதை முதலில் நிறுத்துங்கள். உலகில் பிறக்கும் எல்லா உயிர்களுக்குமே பிரச்னைகளையும் சேர்த்துத்தான் தருகிறார் ஆண்டவன் . அந்தப் பிரச்சினைகளை சமாளிக்கும் மனவலிமைதான் ஒவ்வொருவருக்கும் இடையில் வேறுபடுகிறது . அந்த மனவலிமையை சிறுவயதிலிருந்தே வளர்த்துகொள்ளும் கடமை நமக்கு இருக்கிறது… சரி நாங்கள் தயார்! எப்படி வளர்த்துக்கொள்வது மனவலிமையை?
அப்படி வாங்க வழிக்கு ..இதோ சுவாமி சித்பவானந்தர் எழுதிய ஆன்ம அறிவுரையில் இருந்து நான் படித்துத் தெளிந்ததை உங்களிடமும் பகிர்கிறேன்.
"நீங்கள் முற்றிலும் மனம் தளர்ந்து நம்பிக்கை இழக்கும்போது நமது மறை நூல்கள் மீது கவனத்தை திருப்புங்கள். அல்லது மகான்களின் சிறந்த நூல்களைப் படியுங்கள். அல்லது ஒரு மாதம் விடுமுறை எடுத்து தீர்த்த யாத்திரை மேற்கொள்ளுங்கள் அல்லது ஒரு புனித இடத்துக்கு விஜயம் செய்து அங்கே சில நாட்கள் தங்குங்கள். நேரத்தை ஜபம் பிரார்த்தனை கீர்த்தனை தியானம் என நீண்ட நடைகளில் செலவிடுங்கள். சிதறுண்ட உங்கள் மனதையும் உடலையும் சீர்படுத்தி உங்களிடம் புது தெம்பினையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்த இவையெல்லாம் சிறந்த வழிகளாகும். சிலர் மது அருந்துதல் மற்றும் தவறான வழிகளில் சென்று தங்கள் கவலைகளை மறக்கலாம் என்று தப்புக்கணக்கு போடுகின்றனர். முடியவே முடியாது. இவை பிரச்னையைத் தீர்க்காது. அவை உண்மை நிலையை உங்களால் எதிர்கொள்ள முடியாத அளவுக்கு தளர்ச்சியை உண்டாக்கும். தற்கொலை மகா முட்டாள்தனம். நீங்கள் முட்டாளாக மாறுவீர்கள். மனிதனாக இருக்கும் நிலையைக் காட்டிலும் அதிகம் தொல்லை நிறைந்தது." இதுதான் மகானின் அறிவுரை .
அடப்போங்க நாங்களே இந்தக் கவலைகளிலிருந்து தப்பிக்கத்தான் தற்கொலைக்குப் போறோம்… நீங்க வேற ஆன்மிகம் அது இதுன்னு சொல்லி கடுப்பேத்தறீங்க… நீங்க சொல்ல வந்ததை சொல்லிட்டு சாரி எழுதிட்டு சீக்கிரம் கிளம்புங்க… உங்க மைண்ட் வாய்ஸ் கேட்குது. இருங்க வரேன் .
வாழ்க்கை என்றும் ஒரே நிலையில் இருப்பதில்லை .உடலில் ஒட்டுத்துணி இல்லாமல் பிறப்பது முதல் மனதிலே ஒன்றுமே இல்லாமல் சுவாசம் இழந்து மரணிப்பது வரை எத்தனை எத்தனை மாற்றங்கள் ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் .அம்மாற்றங்களை அப்படியே ஏற்று அனுபவிக்க கற்றுக்கொள்ளுங்கள். வாழ்க்கை சுவாரஸ்யம் நிறைந்தது. திடீரென்று தங்கப்புதையல் உங்களுக்கு கிடைக்கலாம். இன்பமோ துன்பமோ சமமாக எடுத்துக் கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். சுவாமிகள் சொன்ன தியானம் இதற்கு உதவும் .
இந்த நிமிடம், இந்த நாள், இந்த அனுபவம், இந்த நிகழ்வு… இப்படி எல்லாமே நம்மைக் கடந்து போகக்கூடியது என்பதை அடிக்கடி சொல்லி மனதில் பதிய வையுங்கள் உங்களின் வேதனை கடந்து போகும். வேறொரு சம்பவம் நிகழும்போது உங்கள் மகிழ்ச்சி மறைந்துபோகும். வேறொரு துன்பம் பிறக்கும்போது உங்கள் காலம் கடந்து போகும். இன்னொரு வயது ஏறும்போது உங்கள் அனுபவங்கள் மாறிப்போகும். இப்படி எல்லாமே நம்மைக் கடந்து போகும்போது ஏதோ ஒரு விரக்தியான நிமிடத்தில் எழும் தற்கொலை எண்ணத்தையும் அடுத்த நிமிடத்திற்கு தள்ளிப்போடுங்கள். நிமிடம் கடந்ததும் அதுவும் கடந்துபோய் புதுவாழ்வு கண்ணுக்குத் தெரியும் .
முக்கியமா ஒன்று சொல்லிவிடுகிறேன். ஒரு நொடியில் நிகழும் உங்கள் தற்கொலை குடும்பத்திற்கும் வாரிசுகளுக்கும் தீராத அவப்பெயரையே காலம் முழுவதும் வழங்கும். நம்மால் நம் வாரிசுகளுக்கு புகழ் எனும் செல்வத்தை சேர்க்க முடியவில்லை என்றாலும் கோழை எனும் அவப்பெயரையாவது வழங்காதிருப்பது சிறப்பு .
'பிறந்தோம் இறந்தோம்' என்றில்லாமல் 'பிறந்தோம் சாதித்தோம் இறந்தோம்' என்று வாழ்ந்து காட்டுவதே நாம் இந்த மண்ணில் பிறந்ததற்கு நன்றி செலுத்துவதாகும். ஆகவே தயவுசெய்து தற்கொலை எண்ணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து முழுவாழ்வை பயனுள்ளதாக மாற்றி, முழுமையாக அனுபவிப்போமா?