முத்துக்கள் மூன்று!

முத்துக்கள் மூன்று!
Published on
தொகுப்பு: பத்மினி பட்டபிராமன்
  1. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ் சாதனை

அண்மையில் நியூசிலாந்தில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, சுற்றுப் பயணம் செய்து நியூசிலாந்து மகளிர் அணியுடன் திறமையாக விளையாடினார்கள். ஒருநாள் ஆட்டங்கள் இரண்டும், டி-20 ஆட்டங்களும் நடைபெற்றன. அந்த தொடர்களை, நியூஸிலாந்து மகளிர் அணி கைப்பற்றி இருந்தாலும், தோனி, அசாருதீன் போன்ற கேப்டன்களை விட அதிகமாக சில சாதனைகளை செய்துள்ளார் இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ் அவர்கள்.

அவரது சாதனைகளைப் பாருங்கள்

இரண்டாவதாக நடைபெற்ற ஒரு நாள் ஆட்டத்தில், மிதாலி ராஜ் ஆட்டமிழக்காமல் 66 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் 7500 ரன்களை கடந்த முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்திருக்கிறார்.

நியூஸிலாந்துக்கு எதிராக விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி கேப்டன்களில் (ஆடவர், மகளிர் சேர்த்து) அதிக முறை அரை சதம் எடுத்திருக்கிறார். அதாவது ஏழு அரை சதங்கள். இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் அசாருதீன் 6 அரை சதங்களும், தோனி 6 அரை சதங்களும், விராட் கோலி 4 அரை சதங்களும் நியூசிலாந்து அணிக்கு எதிராக எடுத்துள்ளனர்.

இதுதவிர, நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரு நாள் ஆட்டத்தில் அதிக ரன்கள் எடுத்த இந்திய கேப்டன்கள் பட்டியலிலும் முதலிடம் பிடித்திருக்கிறார் மிதாலி.

இதுவரை முதல் இடத்தில் இருந்த தோனி, நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் எடுத்திருந்த 723 ரன் சாதனையை முறியடித்து மிதாலி, 739 ரன்கள் எடுத்திருக்கிறார்.

12-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் மார்ச் 4 ஆம் தேதி முதல் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்திய அணி வெற்றி பெற மங்கையர் மலரின் வாழ்த்துக்கள்.

  1. இளநீர் வியாபாரம் செய்து, பள்ளிக்கூடம் கட்ட உதவிய பெண்மணி

இவரை பிரதமரும் பாராட்டியிருக்கிறார். யார் இவர்?

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள சின்னவீரம்பட்டியில் இளநீர் வியாபாரம் செய்து வருபவர் தாயம்மாள். கணவர் ஆறுமுகமும் இவருக்கு உதவியாக இருக்கிறார்.

இவரது இரு குழந்தைகளும் சின்னவீரம்பட்டி அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர்.

சமீபத்தில் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு கூட்டம் நடந்துள்ளது. அப்போது, குழந்தைகள் படிக்க நல்ல வகுப்பறை கட்ட வேண்டியுள்ளது அதற்கு நிதி திரட்டுவதில் சிக்கல் இருப்பதாக ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

தாயம்மாள், தனது நீண்ட கால சேமிப்பான ஒரு லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு வந்து 'தன்னால் முடிந்தது' என்று சொல்லி பள்ளி கட்டிடம் கட்டுவதற்காக நிதியாகக் கொடுத்துள்ளார்.

"எனது குழந்தைகள் படிக்கும் இதே பள்ளியில் தான் எனது கணவரும் படித்தார்," என்று கூறும் தாயம்மாள், "கட்டிடம் நல்லாயிருந்தாதான் பிள்ளைகள் நிம்மதியா படிப்பாங்க. ஏழைக் குழந்தைகள் முன்னேற உதவும் பள்ளிக்கூடம் கூட ஒரு கோயில்தான். ஆகவே அங்கு ஒரு நல்ல பணி நடக்க என்னால் இயன்றதைக் கொடுத்தேன்," என்கிறார்.

பிரதமர் மோடி தனது "மன்கி பாத்" நிகழ்வில் தாயம்மாளைப் பற்றிக் குறிப்பிட்டு மனம் திறந்து பாராட்டியிருக்கிறார்.

தாயம்மாளுக்கு சொந்தமாக சின்ன நிலம் கூட இல்லை இருந்தும் தனது சேமிப்பை தனக்காக தனது குடும்பத்தினருக்காக வைத்துக்கொள்ளாமல் இளநீர் விற்று சிறுகச் சிறுக சம்பாதித்த பணத்தில் இந்த அற்புதமான தொண்டை செய்துள்ளார். இது பலருக்கும் முன்மாதிரியான செயலாகும். இவரைப் போன்றவர்களால் கல்வி விழிப்புணர்வு பெருகியுள்ளது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

  1. குழந்தைகளுக்கு மருத்துவமனை கட்ட 9 கோடி கொடுத்த கல்லூரி பேராசிரியை.

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த பர்வதம்; கல்லுாரி பேராசிரியையாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. திருப்பதி ஏழுமலையானின் தீவிர பக்தை.

திருப்பதி கோவிலுக்கு ஏராளமாக நன்கொடை வழங்கியுள்ளார். இவர் தன் 76 வது வயதில் கடந்த ஆண்டு மே மாதம் காலமானார். இவருக்கு சென்னை திருவான்மியூரில் ஒரு வீடும், கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் உத்தண்டியில் ஒரு வீடும் இருக்கின்றன.

இவர் தன் இரு வீடுகள், நகைகள் மற்றும் வங்கியில் வைத்துள்ள பணம் ஆகியவற்றை தன் மறைவுக்குப் பின், திருப்பதி தேவஸ்தானத்திடம் ஒப்படைக்க வேண்டும் என மருத்துவரான தன் தங்கை ரேவதி விஸ்வநாதனிடம் எழுத்து பூர்வமாக தெரிவித்திருந்தார்.

மேலும், அந்த இடத்தில் குழந்தைகளுக்கான சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை கட்ட வேண்டும் எனவும் கூறியிருந்தார். பர்வதத்தின் சகோதரியான டாக்டர் ரேவதி விஸ்வநாத் திருப்பதி சென்று, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவரிடம், தன் சகோதரி பர்வதத்திற்கு சொந்தமான வீடுகளின் பத்திரம், நகை மற்றும் வங்கி ஆவணங்களை ஒப்படைத்தார். இவற்றின் தற்போதைய மொத்த மதிப்பு 9.2 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com