அல்லிக்கொடி…

அல்லிக்கொடி…
Published on
இரண்டு வார மினி தொடர்!
-சின்னுசாமி சந்திரசேகரன்
ஓவியம்: தமிழ்

வளை  முதன்  முதலில்  நேருக்கு  நேர்  சந்தித்த  நாள்  இன்றும்  நன்றாக ஞாபகம்  இருக்கிறது.    அன்று  எனது  அலுவலக  அறையில்  ஏதோ முக்கியமான  வேலையில்  ஆழ்ந்து  மூழ்கி  இருந்தபோது  சடாரென்று அறைக்கதவு  திறந்தது.    எனது  அலுவலக  ஊழியர்களாக  இருந்தால் கதவைத் தட்டாமல்  உள்ளே  நுழைய  மாட்டார்கள்.   வியப்புடன்  தலையை உயர்த்திப்  பார்த்தபோது  ஆறேழு  வயதுள்ள  ஒரு சிறுமி  நின்றிருந்தாள்.   வட்ட முகம்.  இரட்டை  ஜடை.   பாவாடை சட்டை  அணிந்திருந்தாள்.   சிறகடிக்கும் பட்டாம் பூச்சியைப்  போல  படபடக்கும்  கண்கள்.   ஓடி  வந்திருக்கிறாள் என்பதை  உணர்த்தும்  விம்மியடங்கும்  மார்புக்கூடு.

யார்  என்று  கேட்பதற்க்கு  முன்பாகவே  அவள்  கேட்டாள்.

" கீர்த்தனா  இங்கே  வந்தாளா?"

" யார்  கீர்த்தனா? "  என்றேன்.

" ம்…  என்னோட  தங்கச்சி..  நாங்க  ஒளிஞ்சு  விளையாடறோம்… "

" யாரும்  வரலியே.. ம்.. உன் பேர்  என்ன? "

" எம்  பேரு  சாதனா..  நிஜமா  கீர்த்தனா  இங்க  வர்லியா ? "  அவநம்பிக்கையுடன் கேட்டு  கண்களை  அறையில்  அலைபாய  விட்டாள்.

இதுவே  முன்பாக  இருந்திருந்தால், ' அலுவலகத்தில்  என்ன  விளையாட்டு, வெளியில்  போய்  விளையாடு'  என்று  என்  அதிகாரத்தைக்  காண்பித்திருப்பேன்.  ஆனால்  வயது  மற்றும்  அறிவின்  முதிர்ச்சியால்  இப்போதெல்லாம் குழந்தைகளின்  வயதிற்கு ஏற்ப‌  இறங்கிப்  பழகும்  மற்றும்  பேசும்  மனோபாவம்  எனக்கு  வந்துவிட்டது.

அறைக்கதவு  மெலிதாகத்  தட்டப்பட்டுத்  திறந்தது.

" சாதனா..  இங்கே  என்ன  பண்றே ? "  என்றவாறு  அவள்  உள்ளே  நுழைந்தாள்.

அப்போதுதான்  அவளை  நான்  முதன்  முதலாகப்  பார்த்தேன்.   விதி சாதனாவின்  ரூபத்தில்  வந்து  அவளை  அன்று  அறிமுகப்  படுத்தியுள்ளது என்று  அப்போது  எனக்குத்  தெரியவில்லை.

" சாரி  சார்.. .நான்  அல்லிக்கொடி..  இந்த  ஃப்ளோரின்  கடைசியில்  என்  ஆபீஸ்.. இவ  என்  பொண்ணு. ."

" ஓ..  பரவால்ல … வாங்க  உட்காருங்க.."  என்றேன்.

அவளிடம்  இருந்த  ஏதோ  ஒரு  விசித்திரத்  தன்மை  என்  கண்களை  உறுத்தியது. அது  அவளின்  தலையும்,  முகமும்தான்  என்பது  அவள்  என்  எதிரில் நாற்காலியில்  உட்காரும் போதுதான்  நன்கு  தெரிந்தது.  எந்த வடிவம்  என்று சொல்ல  முடியாத  மாதிரி  ஒடுங்கி  இருந்தது  அவளின்  தலை.  தலை  அப்படி இருந்ததால்  நெற்றியும்  குண்டும்  குழியுமாக  இருந்தது.   கண்கள்  உள்ளடங்கி இருந்தன.   ஒரு  பலம்  மிகுந்த  பயில்வான்  விட்ட  குத்தினால்  உள்ளே அமுங்கிய  மூக்குப்  போல  வளைந்து  சப்பையாய்  இருந்தது  அவளின்  மூக்கு. அதற்கு  மேல்  பார்வையை  அவள்  முகத்தில்  நிலைத்து  வைக்க  முடியாமல் கடிகாரத்தின்  பக்கம்  பார்வையைத்  திருப்பிக்  கொண்டேன்.   அவளை  உட்காரச்  சொன்னதற்காக  என்னை  நானே  மனதிற்குள்  கடிந்து  கொண்டேன்.

கடிகாரத்தை  நான்  பார்த்ததும்  அவள்  புரிந்து கொண்டு எழுந்து  கொண்டாள். பெண்ணை  அழைத்துக்கொண்டு  போவதற்கு  முன், " மறுபடி வருகிறேன் சார் " என்று  கிளம்பினாள்.   அவள்  நடந்து  வெளியே  செல்வதை  பின்னால்  இருந்து பார்த்த போதுதான்  தெரிந்தது,  அவளின்  கழுத்துக்கு மேல் செய்த  தவறுக்கு கடவுள்  பிராயச்சித்தம் செய்து கட்டான‌  அவள்  உடம்பைப்  படைத்து விட்டான்  என்பது .

டுத்து இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அவள் என் அறைக்கு வந்தாள். இந்த முறை கொஞ்சம் அவளின் முகம் திருத்தம் செய்யப்பட்டிருந்தது.  அவள் தலையில் வைத்திருந்த மல்லிகையின் மணம் என் அறையில் மிதந்தது. பூப்போட்ட சில்க் காட்டன் சேலையும், அதற்கான அட்டாச்டு பிளவுசும் சிக்கென்று உடுத்தியிருந்தாள்.  கொஞ்சம் நெருக்கத்தில் அருகில் பார்த்தபோதுதான் தெரிந்தது அவளின் உடல் ஒரு விளையாட்டு வீராங்கனையின் உடல் போல அகன்ற தோள்களும், நீண்ட திரட்சியான கைகால்களும் கொண்டிருந்தது.    அழகுநிலையம்  சென்று  வந்திருப்பாள் போலும்.  புருவம்  நேர்த்தி  செய்யப்பட்டிருந்தது.    இரண்டு  நாட்களுக்கு  முன்பு தோன்றிய  அதிர்ச்சி  மறைந்து,  என்  கண்கள் எதிரில் உட்கார்ந்திருந்த‌  அவளின்  சதைப்பிடிப்பான கன்னங்களையும்,  தடித்த  உதடுகளையும்  பார்த்துக் கொண்டிருந்தது.  சட்டென்று  நான்  பார்வையை  அவள்  முகம்  விட்டு  மாற்றுவதைப்  பார்த்த அவள்  கேட்டாள்,

"  நீங்க  நிறையப்  படிப்பீங்களோ?"

அவள்  பார்வை  சென்ற  திசையில்  என்  மேசையின்  மேல்  பொன்னீலனின்   ' கரிசல் ',  சி.ஆர். ரவீந்திரனின்  ' ஈரம் கசிந்த  நிலம் ',  சுப்ரபாரதிமணியனின் 'பிணங்களின்  முகங்கள் '  கிடந்தன.

முகத்தில் பெருமிதம் பொங்க  அவளைப்  பார்த்துச்  சொன்னேன்,

" ஆமாம்..  வீட்டில்  ஒரு  நூலகமே  வைத்துள்ளேன்..   இந்தப்  புத்தகங்கள்  படிக்க வேணுமா?"

" இந்த‌ மூணும்  படிச்சிட்டேன்..  வேறு புத்தகங்கள்  என்ன  இருக்கு  உங்ககிட்ட.."  அவள்  கண்களில்  புத்தகங்களின்  மேல்  கொண்ட  ஆர்வம்  வழிந்தது.

மூன்று  புத்தகங்களும்  படித்ததாகச்  சொன்னது  உண்மைதானா  என்று தெரிந்து கொள்வதற்காக  பொன்னீலனின்  ' கரிசல் '  பற்றி  கேட்டவுடன்  அந்நூலின் கதாபாத்திரங்களான  கண்ணப்பன் ஆசிரியர்,  நிலச்சுவான் சக்கரைச்சாமி, வீரையன்  போன்றவர்களைப்  பற்றி  அவள்  பேசத்தொடங்கியதும் வாயடைத்துப்  போனேன்.   ஒரு  மிகச்  சிறந்த  எழுத்தாளர்  ஒரு  நூலை திறனாய்வு செய்து  மேடையில்  பேசினால்  எப்படிப்  பேசுவாரோ  அப்படிப் பேசினாள்  அல்லிக்கொடி.   அலட்சியத்துடனும்,  கொஞ்சம்  காமம்  கலந்தும் அவளை  அதுவரை  பார்த்துக் கொண்டிருந்த  என் கண்கள்  இப்போது  அவளை மரியாதை  உணர்வுடன்  பார்த்தன.   என் காலத்து  எழுத்து  நாயகர்களான அகிலன்,  நா.பா., லட்சுமி,  ஜெயகாந்தன்,  இந்துமதி,  சிவசங்கரி  போன்றவர்களின் எழுத்துக்கள்  அல்லாது  ஜெயமோகன்,  எஸ்.ரா.  போன்றவர்களின் எழுத்துக்களைப்  பற்றியும் அவள்  பேசியபோது  பிரமித்து  விட்டேன்  நான். அவளின்  அறிவின்  முன்பு  அவளின்  மற்ற  குறைகள்  தூசுகளாகின.

அதற்குப்  பின்  வந்த  நாட்கள்  எங்களின்  உறவை  அறிவு பூர்வமாகவும்,  மன ரீதியாகவும்  நெருக்கப் படுத்தியது.   எனக்கும்  அவளுக்கும்  இருபது  வயது வித்தியாசம்  என்பது  மறந்து  போய்,  பள்ளித்  தோழர்கள்  போல்  ஆனோம்.  பெண்மையின்  ரகசியத்தை  அவளும்,  ஆண்கள்  பற்றிய  அவளின் சந்தேகங்களை  நானும்  எந்த  ஒளிவு  மறைவுமின்றி  பகிர்ந்து கொள்பவர்களாக ஆனோம்.   தத்துவ மேதை  ஜே.கே. வின்  புத்தகத்தையும்,  ஆண்  பெண்  சேர்க்கை  பற்றிய  புத்தகத்தையும்  கொடுத்து  படிக்கச்  சொல்லி அந்த இரண்டு புத்தகத்தைப் பற்றியும்  எந்த  உணர்ச்சியுமின்றி  சமமாக‌  அலசினாள்.   எனது  அறியாமையால்  நான்  கேட்ட  திரட்டிங்,  வேக்சிங்  போன்ற பாமரத்தனமான  கேள்விக்கெல்லாம் விரிவான  பதில்  கூறினாள்.

நேரில்  சந்தித்துக்  கொள்ளாத  நாட்களில்  கைபேசியில்  குறுஞ்செய்தி  மூலமாக  எங்களின் கருத்துக்கள்  பரிமாரிக் கொள்ளப்படும்.   திடீரென்று  ஒரு நாள்  ஒரு  குறுஞ்செய்தி  அவளிடமிருந்து  வந்தது.

(தொடரும்)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com