வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!
Published on
இஞ்சி லேகியம்!

தேவையானவை: இஞ்சி – 100 கிராம், வெல்லம் – 200 கிராம், மிளகு –  6, திப்பிலி – 5 கிராம், சீரகம் – 10 கிராம், தனியா – 10 கிராம், ஓமம் – 10 கிராம், நெய் – தேவையான அளவு.

செய்முறை: மிளகு, திப்பிலி,ஜீரகம்,தனியா, ஓமம் கடாயில் வறுத்துப் பொடி செய்து கொள்ள வேண்டும்

இஞ்சியை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி சாறு எடுத்து அதனை வடிகட்டி வைத்து கொள்ளவும். பின் அதை மூடி வைத்து அதில் தெளிந்து இருக்கும் தண்ணீர் எடுத்து கொள்ளவும். வெல்லத்தை தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து மண் இல்லாமல் வடிகட்டி வைத்து கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் இஞ்சி சாறு மற்றும் வெல்லம் சேர்த்து கெட்டியாக பாகு வரும் வரை கிளற வேண்டும். பின் இந்த  இஞ்சி பாகில் அரைத்து வைத்த பொடி சேர்த்து கிளறவும். இதை அடுப்பில் இருந்து இறக்கி நெய் சேர்த்தால் இஞ்சி லேகியம்  ரெடி.

இதனை செரிமான பிரச்சினை இருக்கும் பொழுது தினமும் காலையில் சாப்பிட்டு வெந்நீர் அருந்த, வயிறு சுத்தமாகிவிடும்
– சுந்தரி காந்தி, சென்னை

சப்பாத்தி காளான்  பொடிமாஸ்! 

தேவையானவை:  சப்பாத்தி – 4, வெங்காயம் – 3, பச்சை மிளகாய் – 4, கொத்தமல்லித்தழை – சிறிதளவு, எண்ணெய் – தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு, மிளகாய் தூள் – 1 டீஸ்பூன், காளான் – 250 கிராம், கடுகு – சிறிதளவு.

செய்முறை : முதலில் வெங்காயம், காளான், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின் சப்பாத்தியைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றிச் சூடானதும் கடுகு போட்டுத் தாளிக்க வேண்டும். பின் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

பிறகு அதனுடன் சிறிதளவு உப்பு, பொடியாக நறுக்கிய காளான் மற்றும் மிளகாய்த் தூள் போட்டு வதக்க வேண்டும். காளான் நன்றாக வதங்கியதும் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் சப்பாத்தியை அதில் போட்டு நன்றாகக் கிளற வேண்டும். பின் அடுப்பை மிதமான தீயில் வைத்து, நன்றாகச்  சூடானதும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால், சப்பாத்தி காளான் பொடிமாஸ் தயார்!
– ஏ. எஸ். கோவிந்தராஜன்.

கரம் மசாலா  பொடி! 

தேவையான பொருட்கள்: பட்டை-  3, சீரகம் – 1/2 குழிக்கரண்டி, கருப்பு மிளகு – 5-6, பிரிஞ்சி இலை – 1 , இலவங்கம் – 4, ஏலக்காய் – 4

செய்முறை: வாணலியை சிறு தீயில் வைத்து அனைத்துப் பொருட்களையும் மொறுமொறு வென பொன்னிறமாக வறுக்கவும்.

பிறகு அதனை நன்கு பொடியாக அரைத்து எடுக்கவும். உங்கள் தேவைக்கு ஏற்றார் போல மேல்கூறிய பொருட்களின் அளவை எடுத்துக் கொள்ளுங்கள்.
– அமுதா அசோக் ராஜா, அரவக்குறிச்சிபட்டி

எங்கள் கேரளா சமையல்! 

தோத்தோறி,  சேனைமத்து,  பொடுத்துவல் போன்ற எங்கள் ரெசிபிகள் பெயரே வேடிக்கையாக இருக்கும்.

தோத்தோறி என்பது மஞ்சள் பூஷணிக்காயை ,  மஞ்சள் நிறம் வருவதற்கு முன் பறித்து,   பெரிய துண்டுகளாக நறுக்கி, உப்பு, மஞ்சள் தூள் போட்டு,  வெந்த பின் , தேங்காய், பச்சைமிளகாய்,  ½ ஸ்பூண்  ஜீரகத்துடன் அரைத்து,  அதனுடன் கலந்து ஒரு கொதி வந்ததும் தாளித்து, கறிவேப்பிலை, 1ஸ்பூண் தேங்காய் எண்ணை விட்டு செய்வது. இதனை சாதத்துடனும் சாப்பிடலாம்  நன்றாக இருக்கும்.

சேனை மத்து என்பது  சேனையை தோல் சீவி,  பெரிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு   ஒரு மணிநேரம் ஊறவைத்த கடலைப்பருப்புடன்,  உப்பு, மஞ்சள்தூள், கலந்து,  சேனையை பருப்புடன் குக்கரில் வேகவைக்கவும்.  பிறகு, இதனுடன்  துருவிய தேங்காய் போட்டு, இஞ்சி, பச்சைமிளகாய் அரைத்து, வெந்த காயுடன் கலந்து ஒரு கொதிவந்ததும் கறிவேப்பிலை போட்டு ½ ஸ்பூண் தேங்காய் எண்ணை  விட்டு பரிமாறலாம்.

பொடுத்துவல் என்பது உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு,  வாழைக்காய், சேனைக்கிழங்கு, காரட் ஆகியவற்றை பொடியாக  நறுக்கி,  காய் வெந்ததும், தாளித்து,  துருவிய தேங்காய், தேங்காய் எண்ணை, பச்சைமிளகாய் போட்டு வதக்கவேண்டும்.

-கங்கா ராமநாதன், சென்னை.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com