
வாசகர் ஜமாய்க்கிறாங்க…
தொகுப்பு: இந்திராணி தங்கவேல், சென்னை
மாதுளை மரத்தின் பிஞ்சும், காயும், பழமும், மரப்பட்டையும், வேரின் பட்டையும் மிகுந்த மருத்துவ பயனுடையவை. அவற்றைப் பற்றி விரிவாகக் காண்போம்!
பூ உதிராத மாதுளம் பிஞ்சு மூன்றை அரைத்து,200 கிராம் தயிரில் கலக்கி, இரண்டுவேளைகள் உட்கொள்ள பேதி நிற்கும்.
ஒரு பிஞ்சை நான்காக வெட்டி இரண்டு மணி நேரத்துக்கு ஒரு துண்டாக மென்று விழுங்கினால் வாந்தி நிற்கும்.
விதை முற்றாத காயை அரைத்து, இளநீர் விட்டுப் பிசைந்து, அடை போல தட்டி இரண்டு மணி நேரம் நிழலில் வைத்திருந்து, இரண்டு தேக்கரண்டி அளவு இருநூறு கிராம் தயிரில் குழைத்து வெறும் வயிற்றில் உண்ணவும். இதனால் வயிற்றுப்புண் குணமாகும்.
வாந்தி பித்த தோடமொடு மாறாக் கடுப்பலைஞ்
சேர்ந்து நின்ற மூலரத்தந் தீர்க்குங் காண்- மாந்தளிர்க்கை
மாதே! யிரத்தபுஷ்டி வல்லபலன் உண்டாக்கும்
பூதலத்துள் மாதுளையின் பூ.
மாதுளம் பூவை பாலில் போட்டு கொதிக்க வைத்து, பூ வெந்ததும் எடுத்துவிட்டு, ஆறவிட்டு, பாலில் சிறிது தேன் விட்டு, காலையில் வெறும் வயிற்றில் அருந்தவும். தொடர்ந்து எட்டு நாட்களுக்கு மட்டும், இம்மருந்து உண்ணும் நாட்களில் காரப்பண்டங்கள் கிழங்குகளை நீக்கவும்.
மாதுளம் பூவை நிழலில் உலர்த்தி இடித்துக்கொள்ளவும்.காலை உணவு முடித்து அரைத் தேக்கரண்டித் தூளை உட்கொண்டு சிறிது வெந்நீர் அருந்தவும். தொடர்ந்து உட்கொண்டு வர, உடல் நலம் வலுவடையும்.
50 கிராம் மாதுளம் பூவை 300மில்லி லிட்டர் தண்ணீரில் போட்டு மூடி, சிறு தீயாக எரித்து பாதி சுண்டியதும் இறக்கி ஆறவிட்டு மூன்று வேளைகள் அருந்த வாந்தி, இரத்த வாந்தி முதலியவையும் நிற்கும்.
காலையில் நான்கு மாதுளம் பூவை மென்று தின்று சிறிது பால் அருந்தவும்.தொடர்ந்து நாற்பது நாட்கள் உட்கொண்டு வர, ரத்தம் சுத்தமாவதுடன் விருத்தியும் ஏற்படும்.
மாதுளம் பிஞ்சு,அதிவிடயம், முத்தக்காசு, பெருமரத்தோல், சுக்கு, விளாங்காய்த்தூள் இவைகளை ஐந்து கிராம் எடை எடுத்து எல்லா வற்றையும் ஒன்று இரண்டாகத் தட்டி, ஒரு மண்பானையில் போட்டு ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு மூடி சிறு தீயாக எரித்து 250 மில்லி லிட்டர் அளவிற்கு சுண்டியதும்,இறக்கி ஆறவிட்டு,இரண்டு பங்காக்கி காலை வெறும் வயிற்றிலும் மாலை 6 மணி அளவில் பருகவும். மூன்று நாட்கள். மூன்று நாட்களும் மருந்தைப் புதிதாக செய்து உட்கொண்டு வர, தீராக் கழிச்சல் நிற்கும்.
மாதுளம் பிஞ்சு, ஆலமரத்து பட்டையின் பச்சைப் பகுதி, மாமரத்து பட்டையின் பச்சைப் பகுதி,வெந்தயம், சீரகம் எல்லாவற்றிலும் சம அளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து பானையில் இட்டு தண்ணீர் ஊற்றி மூடி, சிறு தீயில் எரித்து கால் லிட்டர் அளவுக்கு சுண்டியதும் இறக்கி ஆறவிட்டு மூன்று நாட்கள் குடித்து வர தொடர் வயிற்றுப்போக்கு நிற்கும்.
மாதுளம் பழ விதைகளை மெல்லிய துணியில் வைத்து, பிழிந்து, நான்கு தேக்கரண்டிச் சாறுக்கு அரைத் தேக்கரண்டி தேனை கலந்து, காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும்.
அல்லது காலை உணவு முடித்து 30 நிமிடங்கள் கழித்து உட்கொள்ளலாம். உணவுக்கு முன் அருந்தினால் பசி ஏற்படும். உணவுக்குப் பின் அருந்தினால் உணவு எளிதில் சீரணிக்கும்.
குழந்தைகளுக்கு அரை தேக்கரண்டி சாற்றுடன் ஒரு தேக்கரண்டி வெந்நீர் கலந்து கொடுக்க வேண்டும். மாலை 6 மணிக்கு மேல் மாதுளம் பழச்சாற்றை அருந்துவது பலருக்கு ஒத்து வருவதில்லை.
விதையில்லாத மாதுளம் பழத்தை உணவுக்கு முன் உட்கொள்ளலாம். மூன்று தேக்கரண்டிச் சாற்றுடன் ஓர் தேக்கரண்டி தேனைக் கலந்தும் அருந்தி வரலாம். மருந்தை உட்கொள்ளும்போது, எண்ணெய்ப் பண்டங்கள், கிழங்குகள் உண்பதை தவிர்ப்பது மிகவும் நல்லதாகும்.
மாதுளை மரத்தை சீவி எடுத்து, ஒரு கையளவு ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு மூடி கொதிக்க வைத்து, முக்கால் பகுதி சுண்டியதும் இறக்கி ஆறவிட்டு, காலை உணவுக்கு முன் பாதியும் மாலை 6 மணி அளவில் மீதியை பருகி வர, வயிறு தொடர்பான நோய்கள் நீங்குவதுடன், பேதி நிற்கும், தோலில் ஏற்படும் அரிப்பும் குணமடையும்.
தொடர்ந்து இருபது நாட்களுக்கு உட்கொண்டால் வயிற்றுப்புண் குணமடையும். பெண்களுக்கு தூரக் கோளாறும் நீங்கும்.தூரத்திற்கு முன் ஏற்படும் வயிற்று வலியும் குணமடையும்.
மரத்தின் வேரின் பட்டை ஒரு கையளவு இடித்து, ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு மூடி சிறு தீயாக எரித்து, முக்காலும் சுண்டியதும், இறக்கி ஒரு தேக்கரண்டி சோற்றுப்பை போட்டு மூடி ஆறவிட்டு,இரண்டு பங்காக்கி காலை, மாலை உணவுக்கு முன் அருந்தி வர தள்ளுமூலம், நீர் மூலம், இரத்த மூலம் நோய்கள் குணமடையும். குறைந்தது 20 நாட்களுக்கு தொடர்ந்து இம்மருந்தை அருந்தி வர வேண்டும்.
உமிழ் நீரைச் சுரக்க வைக்கும்; வாய் துர்நாற்றத்தைப் போக்கும்; சீரணத்தை ஒழுங்காக்கும்; எளிதில் சீரணிக்கும்; வயிற்றுப் புண்ணை நீக்கும்; மூத்திர எரிவை நீக்கும்; அன்னத்தோஷத்தை நீக்கும்; பேதியை நிறுத்தும்; இருமலை ஒழிக்கும்;மார்பு வலியை நீக்கும் ; வயிற்றுக் கனத்தை நீக்கும்; இருதயத்திற்குப் பலம் தரும்;தொண்டை கட்டுதலை நீக்கும்; வியர்வை நாற்றத்தை நீக்கும்; தோலை மென்மையாக்கும்: ஆண்மையை பெருக்கும்;பெண்மை அதிகரிக்கும்; பெண்கள் மாதவிடாய் நாட்களிலும் உண்ணலாம்; பெரும்பாடு குறையும்; மூல எரிவை நீக்கும்; நீரிழிவைக் குணமாக்கும்; ஆஸ்துமாவை நீக்கும்;மாரடைப்பை நீக்கும்; வாய்வு பிடிப்பு ஏற்படாது; விந்துவைக் கட்டும்; முகம் அழகாகும்; சீதபேதியைக் குணமாக்கும்; கோழையை அகற்றும்; தொண்டைக் கம்மல் நீக்கும்; இரத்தத்தைச் சுத்தியாக்கும்; இரத்தச் சோகையை நீக்கும்; பாண்டு ரோகத்தைத் தணிக்கும்; பித்தப்பாண்டு நோயை குணமாக்கும்;பெருவயிற்றைக் குறைக்கும்.