
பெண்களாகிய நாம் சிறுவயதிலிருந்தே "முடியாது" என்று சொல்லவும் பழகுதல் வேண்டும்…
சின்ன வயதில் மாமா, சித்தப்பா இன்ன பிற ஆண்கள் யாராவது மடியில் உட்கார் என்று சொன்னால் 'முடியாது' என்று சொல்ல பிள்ளைகளைப் பழக்குதல் வேண்டும்.
பதின் பருவ வயதில் இனக்கவர்ச்சியினால் யார் மீதாவது ஈர்ப்பு ஏற்படுவது எதார்த்தமாக நடக்கும் ஒரு விஷயம். அதுபோன்ற சமயங்களில், தனியாகச் சந்திக்கலாம் என்று அவர்கள் சொன்னாலோ, வெளியிடங்களுக்குத் தனியாகக் கூப்பிட்டாலோ 'முடியாது' என்று சொல்லப் பழக வேண்டும்.
திருமணச் சமயத்தில் மாப்பிள்ளையைப் பிடித்திருந்தால் மட்டுமே தலையாட்ட வேண்டும். பிடிக்கவில்லை என்றால் திருமணம் செய்து கொள்ள 'முடியாது' என்று பெற்றோரிடம் சொல்லும் தைரியம் வேண்டும். திருமணத்திற்குப் பின் தாம்பத்திய உறவின்போது மறுக்க வேண்டிய நிலையில் உடல் மற்றும் மனநிலை இருந்தால் பக்குவமாக, இதமாக 'முடியாது' என்று எடுத்துச் சொல்லத் தெரிய வேண்டும்.
"என் அம்மாவோட / மனைவியோட கைப்பக்குவம் மாதிரி யாருக்கும் வராது" என்ற ஒற்றை வார்த்தைத்தான் பெரும்பான்மையான பெண்களைச் சமையல் அறையிலேயே முடக்கிப் போட்டுவிடுகிறது.
ஆண்களுக்கு அது ஒரு பெரிய விஷயமாகத் தெரிவதே கிடையாது. ஆனால், சற்று உற்றுக் கவனித்தால் மிகப்பெரிய மனித உரிமை மீறலை… மனித உழைப்பை நமது இல்லங்களில் சந்தேகமே இல்லாமல் அவர்கள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். (சில வீடுகளில் விதிவிலக்கு உண்டு)
ஒரு நேரசமையல்… இரு நாட்கள் சாப்பாடு என்பதெல்லாம் நம்ம ஊர்ல நடக்கவே நடக்காது. காலையில் டிபன்… மதியம் சாப்பாடு… இரவு டிபன் என எந்நேரமும் சமையல் அறைதான்.
கொஞ்சம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டால் போதும்… மழையென்றால் கேட்கவே வேண்டாம். சூடான பஜ்ஜி+தேநீர் என்று செல்லமாய் கேட்பது தனிக்கதை.
சமையல் மட்டுமில்லாமல் சமையல் செய்தபிறகு அந்த இடத்தைச் சுத்தம் செய்வது… அந்தப் பாத்திரங்களைக் கழுவி வைப்பதில் ஆரம்பித்து சிந்திய சாதப் பருக்கைகளைத் துடைத்து… என பெண்களின் பணி தொடர் வண்டி மாதிரி நீண்டுக்கொண்டே செல்லும்.
அப்புறம் ஞாயிற்றுக்கிழமை_ கேட்கவே வேண்டாம். விடுமுறைகள் மகிழ்ச்சியாக அனுபவிக்கப் படைக்கப்பட்டவை.
பண்டிகைகள்-ஒரேமாதிரியான வாழ்க்கையிலிருந்து விடுபட்டு உற்சாக மடைய உருவாக்கப்பட்டவை. ஆனால், இது ஆண்களுக்கு மட்டுமே. இந்த இரண்டு தினங்களும் பெண்களுக்கு வழக்கத்தை விடவும் அதிக நேரம் சமையல் அறையில். பொங்கல் மூன்று நாள் விழா என்றால் மூன்று நாளும் கூடுதல் வேலை… இப்படிச் சமையலைப் பெண்களோடு பழக்கப்படுத்தி வைத்திருக்கிறது நமது சமூகம் என்றால் மிகையில்லை. பெண்கள் ரசித்துத்தான் இதைச் செய்கிறார்கள் என்று சப்பைக்கட்டு கட்டும் ஆண்களும் உண்டு!
அதனால், ஞாயிறு மற்றும் பண்டிகை நாட்களில் நான் மட்டும் சமையலைச் செய்ய 'முடியாது' என்னுடன் நீங்களும் வேலைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று அன்பாகக் கூறுங்கள். ஆண்களும் சமையலறையில் பாதி வேலையைப் பகிர்ந்துகொள்ளும் பொழுது அது பெண்களின் வேலைப்பளுவை குறைக்கும்.
சமையலறை பெண்களுக்கு மட்டுமானது என்ற பொதுப்புத்தி உடைக்கப்பட்டு எறிய வேண்டியது அவசியம். பெண்களும் தங்களைத் தாங்களே கொஞ்சம் மாற்றிக்கொண்டு 'முடியாது' என்று சொல்லப் பழகிக்கொள்ள வேண்டியது அவசியம்.
பெண்களே… எத்தனைப் பொறுப்புகள் இருந்தாலும் எவ்வளவு வேலைகள் இருந்தாலும் உங்களுக்கென்று ஒரு நேரத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள்.
அந்த நேரத்தில் தலையே போனாலும் யார் என்ன வேலை செய்யச் சொன்னாலும் "முடியாது" என்று சொல்லப் பழக்கிக்கொள்ளுங்கள் அது உங்களுக்கான நேரம்.
உங்களுக்குப் பிடித்ததைச் செய்யுங்கள். ஆடுங்கள், பாடுங்கள், ஓவியம் வரையக் கற்றுக்கொள்ளுங்கள் வீணை வாசிக்க கற்றுக்கொள்ளுங்கள்… (அல்லது சும்மாவே விட்டத்தைப் பார்த்து உட்கார்ந்திருந்தால் கூட ஓகேதான்) இப்படி என்னவெல்லாம் பிடிக்குமோ அத்தனையும் செய்யுங்கள். பிடித்தமான உறவுகளிடம்/ நட்புகளிடம் பேசுங்கள்.
நீங்கள் மகிழ்வாய் இருந்தால் மட்டுமே மற்றவர்களை மகிழ்விக்க முடியும் என்பதை முதலில் மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள். மொத்தத்தில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமென்றால் தேவையான இடங்களில் 'முடியாது' என்று சொல்லப் பழகிக்கொள்ளுதல் வேண்டும்
வாழ்க்கை ஒரே ஒரு முறைதான் அமையும். அனுபவித்து வாழுங்கள்.
பி.கு…(மேடம் நீங்கள் சொல்வதெல்லாம் புரிகிறது. எங்கள் வீட்டில் நான்தான் மேடம் சமையல் என்று ஆண்கள் யாராவது சொல்வதாக இருந்தால் இந்த கட்டுரை கண்டிப்பாக உங்களுக்கும் பொருந்தும்…ஹிஹிஹி….)