நெய்வேத்தியம்

நெய்வேத்தியம்
Published on
தனுஜா ஜெயராமன்
ஓவியம்: பிள்ளை

ற்பக விநாயகர் அலங்காரத்துடன் வீற்றிருக்க அவருக்கு தீபாராதனை காட்டி வெளியே வந்த ஐயர்,  அங்கே காத்திருந்த மக்களுக்கு ஆரத்தி தட்டைக் காட்டினார். கண்களில் ஒற்றிக்கொண்டு குங்குமத்தை நடுநெற்றியில் இட்டு வெளியே வந்தாள் மீனாட்சி மாமி.
"மாமி! நில்லுங்கோ… நாளைக்கு வினாயகர் சதுர்த்தி இல்லையா?  கோயிலுக்கு வேண்டிட்டிருக்கேன். இருநூறு கொழுகட்டையும் சுண்டலும் சக்கரை பொங்கல் ப்ரசாதமும் பண்ணித் தறீங்களா"
"பேஷா பண்ணிடலாம் சார்"…
"இந்தாங்க ஐநூறு ரூபாய் முன்பணம் வைச்சிக்கங்க. மீதியை நாளைக்குப் பட்சணத்தை டெலிவரி பண்ணும்போது கொடுத்துடறேனே".
"நன்னா பண்ணிடலாம். நாளைக்கு  நீங்களே வந்து வாங்கிக்கறேளா"
"சரி மாமி"…என விடைபெற்று சென்றார் கணபதி சாமி. கணபதி சாமி ஊரில் பெரிய மனிதர். எல்லா பண்டிகைக்கும் நெய்வேத்தியம், அன்னதானம் என அள்ளிக்கொடுக்கும் மனிதர். அப்பொதெல்லாம் சமையல் செய்யும் வேலையை மீனாட்சிக்கு அளித்து வந்தார். அதில் ஏதோ நாலு காசு வந்தே மீனாட்சியின் குடும்ப வண்டி சிரமமில்லாமல் ஓடுகிறது.
மீனாட்சியின் கணவர் ராஜம் ஐயருக்கோ சொற்ப வருமானம். ஒரு சிறுகோயிலில் பூஜை செய்யும் வேலை… அவ்வப்போது கிடைக்கும் ஒன்றிரண்டு தட்டு காசுகளும் கோயில் நிர்வாகம் தரும் சொற்ப சம்பளமும் அவர்களது வயிற்றுக்கும்,  வாய்க்குமே சரியாக இருந்தது. இதில் மகளை  கட்டிக்கொடுத்த இடத்தில் பெரியதாக சீர் ஏதும் செய்யாததால் சம்பந்தி வீட்டில் குறைபட்டுக்கொண்டது அவருக்குமே பெரும் மனக்குறையாகவே இருந்தது.  ராஜம் ஐயருக்கு. ஒரே மகன் காலேஜில் படிக்க வைக்கிறார். பகவான் சொத்து, வரும்படி என வைக்காவிட்டாலும் கல்வி ஞானத்தில் ராஜத்திற்குக் குறைவைக்கவில்லை. இந்த வருடம் காலேஜ் முடித்து நல்ல வேலையில் சேர்ந்தால் மூன்றுவேளையும் நன்றாக சாப்பிடலாம் என்று தோன்றியது. மீனாட்சியிடம் அவ்வப்போது வரும் பட்சண வேலைகள், கைவேலைகள் ஏதோ வீட்டுச் செலவுகளை இன்றுவரை இட்டு நிரப்பி வருகிறது.

மீனாட்சி வேகவேகமாக வீட்டிற்குக் கிளம்பினாள். கொழுகட்டை மாவு தயாரிக்க வேண்டும். சுண்டலுக்கு ஊறப்போட வேண்டும். மீதிப் பட்சணங்களுக்கான மளிகை சாமான் வேறு வாங்கி வைக்கவேண்டும். நாளை கணபதி சாமி தரும் மீதி பணத்தில் எப்படியாவது மகளுக்கும், மருமகனுக்கும் புதுத்துணி எடுத்து தரவேண்டும் என்று மனதுக்குள் கணக்கு போட்டாள் மீனாட்சி. ஆடிக்கே சீர் போதவில்லை என மகளின் மாமியார் இடித்துக்காட்டியது நினைவுக்கு வந்தது.
எதையோ நினைத்தவளாக வீட்டிற்கு நடந்தவளை எதிரே சில இளைஞர்கள் வழிமறித்து நோட்டீஸ் தந்தனர்.
"மாமி…! பக்கத்து ஜரேனிபுரத்தில் பிள்ளையார் சிலை வைச்சிருக்கோம். நாளைக்கு பூஜை வந்திருங்க… ஏதோ உங்களால முடிஞ்ச டொனேஷனை தாங்க…" என மறித்து நின்றவர்களை எரிச்சலுடன் பார்த்தாள். "இவங்களுக்கு இதே வேலை… எப்பப் பாரு டொனேஷன் அது இதுன்னுட்டு" என மனதுக்குள் தோன்றியதை மறைத்து பத்து ரூபாயை எடுத்து நீட்டினாள். சந்தோஷமாக வாங்கி கொண்ட இளைஞர்கள் கூட்டம்…"மறக்காம பூஜைக்கு வந்திடுங்க மாமி…" என உற்சாகமாய் அழைத்தபடி அடுத்தடுத்த வீடுகளுக்கு நோட்டீஸ் கொடுக்கச் சென்றனர்..
"ஆகட்டும்பா…" என வேண்டாவெறுப்பாகத் தலையசைத்துவிட்டு வீட்டிற்கு வந்தாள்.
வீட்டுக்கு வந்தவள் வேகமாக பொருட்களின் லிஸ்டை எழுதி எடுத்துக்கொண்டு, மளிகைக் கடைக்கு ஓட்டமும் நடைமுமாய் ஓடிச்சென்று பொருட்களை வாங்கினாள்.
ஐந்து கிலோ அரிசியை கழுவி, களைந்து, வெள்ளைத் துணியில் இட்டு காய வைத்தாள். அப்படியே சுண்டலுக்கும் ஊறப்போட்டு விட்டு மீதி மளிகைப் பொருட்களை எடுத்து சுத்தப்படுத்தி வைத்தாள். அதற்குள் அரிசி பதமாய் காய்ந்து விட பெரிய ப்ளாஸ்டிக் பக்கெட்டில் கொட்டி மாவு திரிக்க மிஷினிற்கு ஓடினாள். ஐந்து கிலோ மாவை திரித்து தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு, வேர்க்க விறுவிறுக்க வீட்டிற்கு வந்தாள்.

அதற்குள் கோயில் பூஜை நேரம் முடிந்து வீட்டிற்கு வந்திருந்தார் ராஜம் ஐயர்.
"என்ன மீனாட்சி! எங்க போய்ட்ட நீ.. பசிக்கறது சாதம் போடுறியா?"… எனக் கேட்டார்.
"இதோ வந்திட்டேண்ணா… நம்ம கணபதி சாமி நாளைக்கு விநாயகர் சதுர்த்தி பட்சணம் பண்ண ஆர்டர் கொடுத்திருக்கார். அதான் மிஷின்ல மாவு திரிச்சிண்டு வரேன்".

"அப்படியா…சரி சரி… சமையல் ஆயிடுத்தா… எனக்கு பசிக்கறது."
"ரெடியாயிருக்கு… வத்தக் குழம்பும் சுட்ட அப்பளமும் இருக்கு. கோயில்ல உடைச்ச தேங்காய் இருந்தது. பருப்பு மிளகா தொவையல் அறைச்சிருக்கேன்."
"அடடா! இது போதுமே… அதுவே தேவாமிர்தமா இருக்குமே."
"கை கால் அலம்பிண்டு வாங்கோ…சாதம் போடுறேன்" என மாவை எடுத்துக்கொண்டு உள்ளே போனாள்.
வெறும் ரசம் சாதமே பெரும்பாலும்  சாப்பிட்ட வாய்க்கு வத்தக் குழம்பும், சுட்ட அப்பளமும் துவையலும் நிறைவாய் தெரிந்தது. அதனை ரசித்து ருசித்து சாப்பிடும் கணவரை ஆதுரமாகப் பார்த்தாள். கணவருக்கு வகைவகையாய் செய்து போட ஆசைதான். ஆனால், கோயில் வருமானம் வயிற்றுப்பாட்டுக்கே காணாதபோது… வகை வகையாய் உணவா? என மனதுக்குள் நினைத்தவளுக்குப் பெருமூச்சுதான் வந்தது.
"ஏண்ணா…! நாளைக்குக் கணபதி சாமி பட்சண பணம் மீதியைக் கொடுத்தா நம்ம பத்மாவுக்கும் மாப்பிள்ளைக்கும் புதுத்துணி எடுத்து தரலாமா?" என்ற மனைவியை ஏறிட்டு பார்த்தார்.
"இல்லை… ஆடி மாச சீருக்கே சம்பந்தியம்மா ரொம்ப கோவிச்சுண்டா… அதான்" என இழுத்தாள்.
"பேஷா எடுத்துக் குடு…நான் ஏன் வேணாங்குறேன். பொண்ணுக்கு நிறைவாய் செய்யணும்னு  எனக்கும் ஆசைதான்…அதுக்கு பகவான் கண்ணைத் திறக்கணுமே" என்றவாறு சாப்பாட்டை உருட்டி வாயில் போட்டுக்கொண்டார். நினைவு வந்தவராக…" ஆமா! சங்கரனுக்கு சாப்பாடு இருக்கில்ல…" எனத் தயக்கமாய் கேட்டவரை…" அதெல்லாம் தாராளமாய் இருக்கு. நீங்க நிம்மதியாய் சாப்பிடுங்கோ" என சாதத்தை அள்ளி தட்டில் வைத்தாள்.
வெளியில் சத்தமாக கணபதி திம் தம் திம்… கணபதி திம் திம் திம் என ஸ்பீக்கரில் சினிமா பக்திப் பாடல் அலறியது.
"பக்கத்து ஏரியாவில் அந்தப் பசங்க பிள்ளையார் சிலையை வைச்சிண்டு விளையாடிண்டிருக்கிறதுகள். ஓரே பாட்டு சத்தம்தான் காலையிலிருந்து… நீங்க சித்தப் படுங்கோ… சாயந்திரம் பூஜை இருக்கில்லை… ஏதாவது தட்டு காசு வந்தா பத்மா வீட்டுக்கும்  நாலு பட்சணம் பண்ணித் தரலாம்" என தனது ஆசையை ஏக்கமாகச் சொல்லிய மனைவியைச் சங்கடமாக நோக்கினார் ராஜம் ஐயர்.

வீட்டு வேலைகளைச் சீக்கிரமாக முடித்துவிட்டு நாளை பட்சண வேலைகளுக்கான முன் தயாரிப்புகளை செய்ய ஆரம்பித்தாள் மீனாட்சி. ராஜம் ஜயர் கோயிலுக்குக் கிளம்பிவிட… சங்கரனும் வெளியே சென்றிருக்க… நிம்மதியாய் வேலையைத் தொடர்ந்தாள். சர்க்கரைப் பொங்கலுக்குத் தேவையான வெல்லத்தைப் பொடித்து வைத்தாள்.
பட்சண முன் தயாரிப்பு  பணிகள் கச்சிதமாக முடிந்தது. நாளை காலை நான்கு மணிக்கு எழுந்து வேலைகளைத் தொடங்கினால்தான் எழுமணிக்குள் வேலைகள் முடிந்துவிடும்" என நினைத்துக்கொண்டே எழுந்தாள்.
வெளியே குரல் கேட்டது… "மாமி! என சத்தமாக அழைத்தார் யாரோ ஒருவர். கணபதி சாமி அனுப்பினார். அவர் வீட்ல ஒரு சின்ன அசம்பாவிதம். திடீரென அவர் வெளியூர் கிளம்ப வேண்டியதா போச்சி. உங்ககிட்ட பட்சணம் தயாரிக்க ஆர்டர் கொடுத்திருந்தார்ல்ல அதை நிறுத்திடச் சொன்னார். இன்னொரு நாள் பாத்துக்கலாம்ன்னு சொன்னார். அட்வான்ஸ் கூட திருப்பி தர வேண்டியதில்லைன்னு சொல்லச் சொன்னார். பாவம்… உங்களுக்குச் சிரமம் கொடுத்திட்டோம் மன்னிச்சிருங்க" என கைகூப்பி நகர்ந்தனர்.
"பக்கென்றிருந்தது மீனாட்சிக்கு ஐந்து கிலோ அரிசி மாவு அதை என்ன பண்ணுவது எனக் கவலையாக இருந்தது. சுண்டலுக்கு வேற ஊறப்போட்டாச்சி. அட பகவானே ஏன் இப்படிச் சோதிக்கற"
ராஜம் ஐயர் இரவு எட்டு மணிக்குக் கோயில் நடையைச் சாத்திவிட்டு வர, விவரத்தைச் சொல்லி மீனாட்சி புலம்பிக்கொண்டே இருந்தாள்.
"இப்படியாயிடுத்தே நம்மள அந்த ஆண்டவன் ஏன் இப்படிச் சோதிக்கறார்". பத்மாவுக்குப் புதுத்துணி வாங்க முடியாத கவலை வேறு சேர்ந்துகொண்டது.
"சரி… விடு மீனாட்சி… பகவான் என்ன நினைக்கிறாரோ அதுதான் நடக்கும்…" என மீனாட்சிக்கு ஆறுதல் சொன்னாலும் மனதுக்குச் சங்கடமாக இருந்தது. "பாவம் மீனாட்சி! இந்தக் குடும்பத்துக்காக எவ்வளவு உழைக்கிறாள்" என நினைத்தவருக்கும் கண்கள் கலங்கியது.
"இந்தா மீனாட்சி! இன்னைக்கு கோயிலில் கெடச்ச தட்டுக்காசு இதை வைத்து நாளைக்கு பத்மாவுக்குப் பட்சணமாவது பண்ணிக்கொடு…" என தனது பாக்கெட்டிலிருந்து பணத்தை மீனாட்சியிடம் நீட்டினார்.
"அதுக்கூட பரவாயில்லைண்ணா. எவ்வளவு மாவு ஊற வைச்ச சுண்டல் கடலை இதையெல்லாம் என்ன பண்றது" என்றாள் கவலையுடன்.
"எல்லாம் பகவான் கைங்கர்யம்" என மேலே கைகளைக் காட்டியவாறு வருத்தத்துடன் வெளியே வந்தார்.

வெளியே ஏதோ சலசலவென சத்தம் கேட்க… ராஜம் ஐயர்  "யாருப்பா நீங்கெல்லாம்…" என குரல் கொடுக்க…
"ஐயரே! மீனாட்சி மாமி…?"
"ஆமாம் உள்ளேதான் இருக்கா. என்ன விஷயம்?"
நாங்க பக்கத்து தெருவில் பிள்ளையார் சிலை வைச்சிருக்கோம். நாளைக்கு பூஜை. வர்றவங்களுக்கு கொழுகட்டை, சுண்டல் ப்ரசாதம் தரலாம்னு.. மாமி பலகாரம் நல்லா செய்வாங்கன்னு சொன்னாங்க…எவ்ளோ காசோ தந்திடுறோம். நாளைக்குப் பலகாரம் செய்து தர முடியுமா? இவ்ளோ லேட்டா கேக்கறோம்னு தப்பா நினைக்காதீங்க ஐயரே..இப்பதான் காசு வசூல் பண்ண முடிஞ்சது. நாங்க ஏழை பாழைங்க இல்லியா"…என தயக்கத்துடன் கேட்டவர்களை உற்றுப் பார்த்தார் ராஜம் ஐயர்!
மீனாட்சி எனக் குரல் கொடுக்க… "கேட்டுகிட்டுத்தான் இருக்கேன்…" என வெளியே வந்தவள்…

"காலையில் ஏழுமணிக்கு வாங்கப்பா… செய்து வைக்குறேன்" என்றாள்.
"தேங்ஸ் மாமி! …என கைகூப்பியவர்கள் இரண்டாயிரம் ரூபாயை நீட்டினார்கள். அதனை யோசனையுடன் வாங்கியவள்…"இந்தாப்பா பூஜைக்கு என் பங்கா வைச்சிகங்க" என ஐநூறு ரூபாயை திருப்பி அளித்தாள்.
மறுபடியும் "தாங்ஸ் மாமி"… எனக் கைகூப்பி விடைபெற்றார்கள்.
ராஜம் ஐயர் அர்த்தத்துடன் மீனாட்சியை பார்க்க அவள் பூஜையறையில் அமைதியாக வீற்றிருந்த விநாயகரைப் பார்த்தாள்.  அவர் ஏதும் அறியாதவராக புன்னகையுடன் வீற்றிருந்தார்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com